எல்.வி.பிரசாத் 
தினமணி கதிர்

எல்.வி.பிரசாத்! - நான் சந்தித்த பிரபலங்கள் - 17

எல்.வி.பிரசாத் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

தினமணி செய்திச் சேவை

எல்.வி.பிரசாத் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

எல்.வி. பிரசாத் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதில் படிப்பில் ஆர்வமில்லை. இவர் தந்தை கடன்காரனாகி வாழ்வில் நொடித்துப் போனார். சில காலம் தையற்கலை உதவியாளராக, வாட்ச்மேனாக என சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கதாநாயகனாகவும் நடித்தார்.

இந்தியாவின் முதல் படம் 'ஆலம் ஆரா'வில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. தெலுங்கில் 'பக்த பிரகலாதா' தமிழில் 'காளிதாஸ்' படங்களில் நடித்து பின் படம் தயாரித்துப் பொருளாதார நெருக்கடி ஏற்பட தற்கொலை அல்லது தலைமறைவு என்று முடிவு செய்து, தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத ஊரில் தியேட்டரில் வேலை பார்த்தார். பிஸ்கெட்டும் தேநீரும் பல நாள்கள் பட்டினிக்குத் தீனியாக இருந்தது.

நூலகங்களில் சென்று நூல்களைப் படித்தார். அவர் நடித்த படத்துக்கே அவர் வேலை பார்த்த தியேட்டரில் டிக்கெட் கிழித்தார். அங்கு அவருக்குக் கடன் கொடுத்தவர் வந்து விட, அவரிடம் தன் நிலைமையைச் சொல்லி வருந்தினார்.

அவருக்குக் கடன் கொடுத்தவர் ' பிரசாத், வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. தற்கொலை செய்து கொள்வதற்கல்ல. உன் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மறுபடியும் பணம் தருகிறேன்' என்றார்.

'மீண்டும் தோற்று விட்டால் என்ன செய்வது' என்றார் பிரசாத். ' நீ தோற்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அப்படி நீ தோல்வி அடைந்து விட்டால் நான் கொடுத்தது கடனல்ல; நன்கொடை என நினைத்துக் கொள்' என்று கூறி மீண்டும் உதவி செய்தார்.

தோற்றவர் வெற்றி பெற்றார். அலட்சியம் செய்தவர்கள் அண்ணாந்து பார்த்தார்கள். உழைப்பவன் வேர்வையிலும் உருக்குலைந்தவர் கண்ணீரிலும் இறைவன் ஆறுதல் தந்து ஆசீர்வதிக்கிறான் என்பதற்கு இதை விடச் சாட்சி என்ன வேண்டும்?

'மனோகரா', 'மிஸ்ஸியம்மா', 'பாக்யவதி', 'இருவர் உள்ளம்', 'தாயில்லாப்பிள்ளை' என்று வெற்றிப் பெற்ற படங்களின் தயாரிப்பாளரும் இயக்குநருமானார்.

'இதயக்கமலம்' தயாரிப்பாளர். இயக்கம் ஸ்ரீகாந்த்.

பின்னாளில் ஆந்திராவின் முதலமைச்சரான என்.டி. ராமாராவை 'மனதேசம்' என்ற படத்தில் அறிமுகம் செய்தார். நடிகையர் திலகம் சாவித்திரியை முதன்

முதலில் அறிமுகம் செய்தார். கமல் நடித்து ஓர் ஆண்டு காலம் ஓடிய 'ஏக் தூஜே கேலியே' என்ற ஹிந்திப் படத்தை தயாரித்தார். இந்தப் படம் மும்பை மராத்தா மந்திர் தியேட்டரில் வெற்றி விழா கொண்டாடிய போது, 'இங்கு நான் டிக்கெட் கிழித்தேன்' என்று கண் கலங்க கூறினார்.

'ராஜபார்வை' படத்தில் தாத்தாவாக நடித்தார். சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ, பிரசாத் லேப் மற்றும் நான்கு மாநிலங்களில் பிரசாத் லேப் என்று அதிபரானார். இப்படி உழைப்பால் உயர்ந்தவர். என் 'நல்லது நடந்தே தீரும்' படம் வெளியாகச் செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்தப் படத்தின் துவக்க விழா பாடல் பதிவின்போது பிரசாத் தியேட்டரில் என்னையும் இளையராஜாவையும் வந்து வாழ்த்திச் சென்றார்.

இந்தப் படம் பல பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது அதன் விநியோக உரிமையை பெற 'நாடோடி மன்னன்' படத்தின் வசனகர்த்தாவும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவருமான ரவீந்தர் உதவி செய்து படம் முடிந்து சென்சார் செய்ய அனுப்பினேன். நான்கு மாதங்கள் எனக்கு சர்டிபிகேட் தராமால் இழுத்தடித்தார்கள்.

காரணம் கோயில், சர்ச், தர்கா ஆகிய இடங்களில் மூன்று கொலைகள் நடக்கும். என் படத்தைத் தடை செய்ய முடிவு செய்ததை அறிந்து கலங்கி போனேன். அப்போது சென்சாரில் ரிவைசிங் கமிட்டி சேர்மனாக இருந்த எல்.வி.

பிரசாத்தை இளையராஜாவும் நானும் சந்தித்தோம். நான் என் படத்தைப் பற்றி சொல்லும் முன்பே அவர் சொல்லி விட்டு 'சென்சார் போர்டு சொன்னபடி அந்தக் கொலைகளை கட் செய்து விடுங்கள்' என்றார். தடை செய்யவிருந்த படத்தை 'ஏ சர்டிபிகேட்' உடன் வெளியாகச் செய்தார். அவரிடம் கண் கலங்கி நன்றி சொன்னேன்.

அப்போது அவர் எடுத்த படம் 'பிரியா விடை' படு தோல்வி என்றதும் விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து அந்தப் படத்தை நிறுத்தி விட்டதைக் கூறினார். மேலும் 'பணத்தை நாம் சம்பாதிக்கிறோம். நம்மைப் பணம் சம்பாதிக்க முடியாது.

நான் பணமில்லாதபோது லைப்ரரியில் இலவசமாகப் படித்தேன். பணம் வந்த போது விலை கொடுத்து வாங்கியும் படிக்க நேரமில்லை. பணத்தை மதிக்காதீர்கள். வாழ்க்கையில் கஷ்ட, நஷ்டங்களை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று தைரியம் கொடுத்து அனுப்பினார்.

1908-இல் பிறந்த இவர் 1994 -ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT