கண்டது
(ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'காகம்'
(கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'உலகம்'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
(ராசிபுரம் அருகேயுள்ள துளிர் சக்தி இயற்கை உணவகத்தில் எழுதியிருந்தது)
'உணவை உண்ண சில நிமிடங்கள்...
உணவைச் சமைக்க சில மணி நேரங்கள்...
ஆனால், உணவை உற்பத்தி செய்யவோ சில மாதங்கள்.
ஆகவே, உணவை வீணாக்காதீர்.'
-ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.
(அச்சன்புதூரில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'எல்லாமும் எல்லோரும் கைவிடும்போது நீ உன்னை நம்பு.'
-உத்தமன்ராசா, அச்சன்புதூர்.
கேட்டது
(திருச்சியில் உள்ள பள்ளியொன்றில் இரு மாணவர்கள் பேசியது)
'தினமும் நடந்து வர்றீயே... ஆட்டோ என்னவாச்சு?'
'லேட்டா வந்தா அடி வாங்குறது நான்தானே... ஆட்டோக்காரனா அடி வாங்குறான்?'
-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
(நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் ஒரு ஆணும், பெண்ணும்...')
'அண்ணி... அண்ணின்னு பேசுவீங்க? அன்னிக்கு போன் பண்ணும்போது ஆபிஸ் ஸ்டாப்பிடம் பேசுவது போல 'மேடம்'னு ஏன் பேசுனீங்க?'
'அதுவா... நான் அப்போ வீட்டில் இருந்தேன்... என் மனைவி உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லி வைச்சிருக்கா... அதான் அப்படி...!'
-மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.
(திண்டுக்கல் திருமண விழா ஒன்றில்..)
'ஹலோ சார்... நீங்க மாப்பிள்ளை வீடா, பொண்ணு வீடா..?'
'மண்டபத்துக்குப் பக்கத்து வீடு...'
-வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
யோசிக்கிறாங்கப்பா!
காத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவசரப்படும்
மனிதர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது சாலை விளக்குகள் (சிக்னல்கள்).
-த.நாகராஜன், சிவகாசி.
மைக்ரோ கதை
புத்தகத் திருவிழாவுக்கு போன சுந்தரம் புத்தங்களோடு, அங்கு இலவசமாக வழங்கப்பட்ட மரக்கன்றுகளில் நாவல் செடியை வாங்கி வந்து, தனது வீட்டு அருகே காலியாக இருந்த இடத்திற்கு முன் நட்டு வைத்தார். அந்தச் செடி ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டது. பழங்கள் காய்ப்புக்கு வரும்போது, 'இந்த மரம் புத்தகத் திருவிழா நினைவாக நடப்பட்டது. யாரும் மரத்தில் ஏறவோ, கல் எறியவோ கூடாது. கீழே விழும் பழங்களை எடுத்து உண்ணலாம்' என்ற பலகையை வைத்தார்.
ஒருநாள் பக்கத்து வீதிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க வந்த வாகனம் செல்ல வழியில்லை என்று மரத்தை வெட்டிவிட்டனர். வெளியூருக்குச் சென்றிருந்த சுந்தரம் மரம் இல்லாததைப் பார்த்து, பதைபதைத்துவிட்டார். ஒவ்வொரு நாளும் அவ்விடத்தைக் கடக்கும்போதெல்லாம், மனதால் அழுதார்.
-சண்முகரங்கசாமி, ஈரோடு.
எஸ்எம்எஸ்
நாம் யார் என்பதைவிட, யார் யார் மனதில் யாராக இருக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் பயணம் தொடங்குகிறது.
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
அப்படீங்களா!
சமூக ஊடகங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு புகைப்படங்கள், விடியோக்கள், நேரலை (லைவ்) ஆகியன உறுதுணையாக உள்ளன. இதில் புகைப்படம், விடியோ பகிர்வுக்கு பிரபலமான இன்ஸ்டாகிராமில் குறைந்தது 1,000 பின்தொடர்பவர்கள் இல்லை என்றால் அந்த கணக்குக்கு நேரலை ஒளிபரப்பு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்ட், ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கும் இந்த தடை உத்தரவு அமலாகி உள்ளது. சமூக ஊடகங்களில் பிரபலமற்ற நபர்கள், அவ்வப்போது பயன்படுத்துபவர்களைக் களைவதற்காக இன்ஸ்டாகிராம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும், நண்பர்களுடன் உரையாடுபவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், சிறு கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் 16 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாதுகாப்பைக் கருதி ஏற்கெனவே நேரலை ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 1,000 பின்தொடர்பவர்கள் இல்லை என்றால் நேரலை ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.