தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பு தில்லியில் நடந்துகொண்டிருக்கிறது.

டெல்டா அசோக்

தனுஷுடன் நடிப்பது மகிழ்ச்சி - கீர்த்தி சனூன்!

தனுஷ் நடிப்பில் உருவாகும் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பு தில்லியில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'இட்லி கடை'யின் படப்பிடிப்புக்கு இடையே சின்னதொரு இடைவெளி கிடைக்கவே... ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

ஆனந்தின் இயக்கத்தில் ஏற்கெனவே 'ராஞ்சனா', 'அட்ராங்கி ரே' என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு தில்லியிலும், மும்பையிலும் நடந்திருக்கிறது.

ஜெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனூன் இத்திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். கீர்த்தி சனூன் பேசுகையில், 'ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷுடன் தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். தில்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று.

எனக்கு காதல்தான் மிகவும் பிடித்த திரைக்கதை. இத்திரைப்படமும் காதல் கதைதான். கதையை வித்தியாசமாக தயார் செய்திருக்கிறார்கள். தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக இருக்கும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.' எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் யேசுதாஸை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ. ஆர். ரஹ்மான் தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு முக்கியமான பிரபலங்கள் சிலரையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட 'ஓப்பன் ஏஐ'-யின் சி.இ.ஒ. சாம் ஆல்ட்மேனை சந்தித்திருந்தார்.

அது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சாம் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் எங்கள் உலகளாவிய மெய்நிகர் இசைக் குழுவான சீக்ரெட் மவுண்டன் பற்றியும், சவால்களை எதிர்கொள்ள ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி முன்னேற வழிவகுப்பது பற்றியும் விவாதித்தோம்.' எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 'பெர்ப்பிளெக்ஸிட்டி ஏஐ'-யின் சி.இ.ஒ. அரவிந்த் ஸ்ரீனிவாசனையும் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 'எங்கள் அலுவலகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவருடைய சீக்ரெட் மவுண்டன் ப்ராஜெக்ட் பற்றியும் நாங்கள் அருமையான உரையாடலை மேற்கொண்டோம்.' எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது பிரபல பின்னணிப் பாடகர் யேசுதாஸை அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் சந்தித்திருக்கிறார். யேசுதாஸை சந்தித்தது குறித்து ஏ. ஆர். ரஹ்மான், 'என் குழந்தைப் பருவத்தின் பிரபலமான பாடகர் யேசுதாஸ் அவர்களை டல்லாஸில் அவரின் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணியும், இந்திய பாரம்பரிய (கர்நாடக) இசை மீதான அன்பும் ஆச்சரியமளித்தது!' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

'ரமணா' படக் காட்சிக்கு உத்வேகம் தந்த 'கேப்டன் பிரபாகரன்'!

விஜயகாந்தின் 100-ஆவது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் மறு வெளியீட்டையொட்டி சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடந்தது. படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் என் வாழ்க்கையில் மிக நெருக்கமான திரைப்படம். கள்ளக்குறிச்சியில் இந்த திரைப்படம் 100 நாள்கள் ஓடியது.

தொடர்ந்து 10 நாள்கள் நான் தினமும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்தேன். 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் திரைக்கதை எனக்குப் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் 19 நிமிடத்திற்குப் பிறகுதான் விஜயகாந்த் சார் வருவார். அது என்னை மிகவும் ஈர்த்தது. இதன் இன்ஸ்பிரேஷன் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்திருக்கும்.

'துப்பாக்கி' படத்தில் பஸ் பிளாஸ்ட் காட்சியில் கதை தொடங்கிவிடும். அதற்கு ஊக்கம் தந்ததும் இத்திரைப்படம்தான். ஒரு படத்தில் வில்லன் இறந்த பிறகு படத்தில் கதை இருக்காது. ஆனால், இப்படத்தில் இருக்கும். அதுதான் எனக்கு 'ரமணா' படத்திற்கு உத்வேகமாகக் காட்சிகளை வடிவமைக்க உதவியாக இருந்தது.

விஜயகாந்த் சாரை வைத்து படம் எடுப்பது எனக்கு கனவு. அது நடந்தது. அதுபோல, அவர்தான் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இப்படத்தை ரசிகனாகப் பார்த்து இன்று அப்படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் அதே இயக்குநருடன் அமர்ந்திருப்பது எனக்கு கனவு போல இருக்கிறது. ' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT