விஜயா சிவகாசிநாதன்
தன் பெரிய அண்ணன் மகன் வந்து சென்றவுடன் பரிமளாவின் மனசு ஒருநிலையில் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. எதிலும் ஒரு படபடப்பு. எந்த வேலையிலும் மனசு ஒட்டாமல் அரைகுறையாகவே செய்து கொண்டிருந்தாள். அம்மாவின் திடீர் மாற்றத்தைக் கவனித்த மூத்த மகள் சிந்து, 'என்னம்மா... பெரிய மாமா மகன் வந்திட்டுப் போனதிலிருந்து ஒரு மாதிரியாய் இருக்கே, என்ன விஷயம்மா?' என்று கேட்டே விட்டாள்.
'ஒண்ணுமில்லேடி... நீ போ' என்று பட்டும் படாமல் பதில் சொன்னாள் பரிமளா.
'இல்லம்மா... நீ எதையோ மறைக்கிறே? என்னன்னு சும்மா சொல்லும்மா' என்றாள் சிந்து.
அதற்கு மேல் மனசில் உள்ள சோகத்தை மூடி மறைக்க முடியாமல் கண்களில் சிதறிய கண்ணீரைத் துடைத்தவாறு, தன் பெரிய அண்ணன் மகன் சொல்லிவிட்டுப் போன விஷயத்தைக் கொட்டித் தீர்த்தாள்.
'உன்னுடைய சின்ன மாமனுக்குக் கல்யாணமாம். ஏற்பாடெல்லாம் தடபுடலா நடக்குதாம்.'
' அதுக்கு ஏம்மா நீ கவலைப்படுறே?'
'அதுக்கு இல்லடி. கூடப் பிறந்த எனக்கு ஒரு வார்த்தைக்கூடச் சொல்லலையேடி...'
'அது எப்படிம்மா சொல்லுவாக? அவங்களுக்கும் நமக்கும்தான் பத்து வருஷமா பேச்சுவார்த்தை இல்லாமப் போச்சே. அப்புறம் எப்படிம்மா உன்னை மதிச்சுக் கூப்பிடுவாக?'
'எல்லாம் என் பெரிய தம்பி பொண்டாட்டி செய்கிற வேலை. அவதான் பொண்ணு பார்த்து முடிச்சாளாம்.'
'எப்படியோ ஒரு நல்ல காரியம் நடந்தா சரி. அதுக்காக நீ கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதே. ஏற்கெனவே உனக்கு ரத்தக் கொதிப்பு. மேற்கொண்டு இழுத்துக்காதே... பேசாம மனசைப் போட்டு வாட்டிக்காம உன் வேலையைப் பாரு' என்று கூறிவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டுவிட்டாள்.
பரிமளாவின் மனசு பத்து வருஷங்களுக்குப் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவளுடைய அப்பா ஒரு கம்பெனியில் பங்குதாரராக இருந்தார். தந்தையின் கடின உழைப்பால் கம்பெனி நல்ல லாபத்தில் நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் இன்னொரு பங்குதாரரின் மகன் தாங்களே கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்திக் கொள்வதாகக் கூறி, பரிமளாவின் தந்தைக்கு ஒரு தொகையைக் கொடுத்து விலக்கிவிட்டார்.
தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு சின்ன வியாபாரத்தை ஆரம்பித்தார். உதவிக்கு இரு சிறிய மகன்களும் இருந்தனர். அவருடைய நல்ல நேரம் வியாபாரம் நல்ல லாபத்தில் ஓடியது. இந்த நிலையில் பரிமளாவுக்கு திருமணம் நடந்தது.
அவளுக்கு ரெண்டு பிள்ளைகள் பிறக்கும் வரை பரிமளாவுக்கு அந்த வீட்டில் பெரும் செல்வாக்கு. சரியான வேலை இல்லாததால் பரிமளாவின் ஒரு அண்ணனுக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டே வந்தது. பரிமளாவின் கணவன் தான் பெரும் முயற்சியால் பெண் பார்த்துக் கல்யாணத்தை முடித்து வைத்தார். அதுபோல் அவளின் மூத்த தம்பிக்கும் கல்யாணத்தை முடித்து வைத்தார்.
தம்பி மனைவி வந்தவுடன் தான் அந்தக் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. அதுவரை செல்வாக்காக இருந்த பரிமளாவுக்கு அங்கு வரவே முடியாதபடி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டாள் தம்பி மனைவி.
' 'என்ன பரிமளா. டிபன் ரெடியா? நான் ஆபீஸூக்கு போக நேரமாச்சு' என்று கணவனின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள். பரிமளா வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனசுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள்.
'என்னம்மா... மாமாவுக்குக் கல்யாணமா... பத்திரிகை வந்திருக்கு. இது என்ன பத்து ரூபாய் நோட்டு ஒண்ணு இருக்கு? கவருக்குள் பணம் வைத்து அனுப்புறது தப்பாச்சேம்மா?' என்று பரிமளாவின் சின்னப் பெண் அஞ்சு வெகுளியாகக் கேட்டாள்.
'ஆமாம், மாமாவுக்குக் கல்யாணம்தான். பணம் பாக்கு வச்சுக் கூப்பிடுற முறையில்ல... அதனாலே பணத்தை கவர்ல வச்சு அனுப்பியிருக்காங்க...' என்று விரக்தியோடு பதில் சொன்னாள், கேள்வி கேட்ட சின்ன மகளுக்கு.
'ஏம்மா, பெரிய மாமா கல்யாணத்துக்கு நேரில் வந்து கூப்பிட்டாங்க. இப்பப் பத்திரிகையை கவர்ல வச்சு அனுப்பி இருக்காங்க... எப்பம்மா, மாமா கல்யாணத்துக்குப் புறப்படப் போற?' என்று விளக்கம் தர முடியாத அர்த்தத்தோடு கேட்டுக் கொண்டு வந்தாள் பெரிய மகள் சிந்து.
உயிர் இல்லாமல் சிரித்தாள் பரிமளா. அதன் அர்த்தம் சிந்துவுக்குப் புரியாமலில்லை. இருந்தாலும் திரும்பவும் கேட்டாள்.
'என்னமா, கேள்வி கேட்டா சிரிக்கிறே?' என்று பதில் சொல்லாமல் கலங்கிய கண்ணோடு மகளைப் பார்த்தாள் பரிமளா.
'அப்பா, இந்தக் கல்யாணத்துல கலந்துக்குவாங்களா? இல்லை... உன்னை மட்டும் அனுப்பி வைப்பாங்களா?'
'அது என்னடி... அப்படிச் சொல்லிட்டே? உன் அப்பா என்னைக்காவது எந்த விசேஷத்துக்கும் என்னைத் தனியா அனுப்பி வெச்சிருக்காங்களா? அதுலேயும் இது சொந்த மைத்துனர் கல்யாணம்... கடைசிக் கல்யாணம். நிச்சயம் வருவாங்க...' என்று ஒவ்வொரு வார்த்தையையும் மென்று விழுங்கிக் கொண்டே பேசினாள் பரிமளா.
அவளுக்குத் தெரியும் தன் தாய் வீட்டில் தன் கணவனை எவ்வளவு அவமானப்படுத்தணுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்துறாங்கன்னு... அதை எப்படி பெத்த பிள்ளைகளிடம் வெளிக்காட்ட முடியும்? சிந்துவுக்கு அம்மாவை இனி நோகடிக்க மனசு வரவில்லை. அதோடு விட்டுவிட்டாள். வாசலில் சைக்கிள் வந்து நிற்கும் ஒலி கேட்டது.
வெளியே வந்து, 'அம்மா... அப்பா வந்துட்டாங்க...' என்றாள்.
'சரி, சரி... உள்ள போடி...'
வீட்டுக்குள் நுழைந்த செல்வநாதனிடம், 'அப்பா... மாமாவோட கல்யாணப் பத்திரிகை வந்திருக்கு ...' என்று சிந்து சொன்னாள்.
'ஓ, அப்படியா! எங்கே பத்திரிகை?'
சிந்து பத்திரிகை எடுத்துக் கொடுத்தாள். வாங்கிப் படித்தான் செல்வநாதன்.
'அட, ஞாயிற்றுக்கிழமை தான் கல்யாணம். அப்ப எல்லோரும் போகலாம்' என்று செல்வநாதன்
மகிழ்ச்சியோடு சொன்னான்.
'கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?'
'ஏன் பரிமளா?'
'உங்களுக்குக் கொஞ்சமாவது ரோஷம் இருக்கா? சொந்த அக்கா நான். பொண்ணு பார்க்கப் போறோம்னு ஒரு வார்த்தைச் சொன்னாங்களா? சரி... நான் தான் கிடக்கட்டும்... நீங்க யாரு... வீட்டுக்கு மாப்பிள்ளை. இது வரைக்கும் அந்த வீட்டில் நடந்த எல்லா விசேஷத்தையும் நான் நான்னு முன்னாலே இருந்து நடத்துனீங்க. ஆனா இப்ப ....' என்று துக்கம் தொண்டையை அடைக்கப் பேச முடியாமல் தவித்தாள் பரிமளா.
'இப்ப என்ன நடந்துச்சும்மா... அப்ப உங்க வீட்டுல எல்லாரும் சின்னப் பசங்க. உலகம் தெரியாத வயசு. உங்க அப்பாவுக்கு வயசாயிடுச்சு. அவரால ஓடியாடி வேலை செய்ய முடியல. அதனால வீட்டுக்கு மருமகனா வந்த என்கிட்ட எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைச்சாங்க. நானும் மருமகன் என்பதை மறந்து அந்த வீட்டு பெரிய மகன் என்கிற உரிமையில் எல்லாத்தையும் செஞ்சேன். இப்ப அந்த வீட்டில் இரண்டு கல்யாணம் முடிஞ்சுப் போச்சு.
அந்தக் கல்யாணத்துல ஏற்பட்ட புதிய உறவுகள் இன்னைக்கு நான், நீ என்று உதவி செய்ய முன்னாலே வந்திருப்பாங்க. அதனால உங்க அம்மா என்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு அவங்களே எல்லாத்தையும் முடிச்சிட்டு 'கல்யாணத்துக்கு மட்டும் நீங்க வந்தா போதும்'னு பத்திரிகை அனுப்பிச்சிருக்காங்க. இதோ பார் பரிமளா, நாமளும் புள்ளை குட்டிக்காரங்களாயிட்டோம்.
எதுக்கு நம்மளை வரவழைச்சு செலவு வைக்கிறதுன்னு நினைச்சிருக்கலாம், இல்லையா? சரி சரின்னு போம்மா...' என்று செல்வநாதன் எதார்த்தமாகப் பேசிவிட்டு கை, கால் அலம்ப கிணற்றடிக்குப் போய்விட்டான்.
'ஏம்மா! பெரிய மாமா, நடு மாமா இவங்களை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னே கூட்டிட்டு வந்து சாப்பாடெல்லாம் செஞ்சுப் போட்டு புதுத் துணிமணி எடுத்துக் கொடுத்த மாதிரி இந்த மாமாவுக்கும் செய்வீங்களாம்மா?' என்று சிந்து மெதுவாகக் கேட்டாள்.
முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்த செல்வநாதன், 'அது என்னம்மா... அப்படிக் கேட்டுட்டே? பரிமளா... வழக்கம்போல் தாலிக்குத் தங்கம் வாங்கிக் கொடுத்திடுவோம். இன்னைக்கு போன் பண்ணிச்சொல்லிடுறேன். நாளை மறுநாள் உன் தம்பிக்கு சாப்பாடு செஞ்சு போட்டுடு... ட்ரெஸ்ஸூக்கு வேணும்னா பணத்தை வச்சுக்கொடுத்துடுவோம். அவனுக்குப் புடிச்ச துணியா எடுத்துக்கட்டும்' என்றான் செல்வநாதன்.
'நீங்க எதுவும் செய்ய வேண்டாம். என்ன முறைப்படி அவங்க செஞ்சுட்டாங்க... நாம முறைப்படி நடந்துகிறதுக்கு? அடுத்த வாரம் கல்யாணம். அக்காக்காரிதான் தங்கம் வாங்கித் தரணும்னு எதிர்பார்த்தா, இந்த நேரம் வந்திருக்க மாட்டாங்க. இப்ப அவங்களுக்குக் காசு ஏறிப்போச்சு. பணக்காரங்க ஆயிட்டாங்க. நம்மளோட தயவு அவுங்களுக்கு வேண்டாம். அதான் பத்திரிகையைக்கூட தபால்ல அனுப்பிச்சிருக்காங்க...' என்று குமுறினாள் பரிமளா.
'சரி, பரிமளா... உணர்ச்சிவசப்படாதே, நீயே உடம்பு சரியில்லாதவ. இப்ப நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல அங்கே ஆளு இல்லை. முன்னே உங்க அப்பா இருந்தாரு. முறையா எல்லாமே நடந்துச்சு. அவரு செத்துப் போனதுக்கு அப்புறம் பசங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆள் கிடையாது. நம்மள மதிக்
கிறாங்க மதிக்கல... அதெல்லாம் இப்ப நினைக்கக்கூடாது. ஏதோ நல்ல காரியம் தடைப்படாமல் நல்ல விதமாக நடக்குதா? அதுவரை சந்தோஷப்பட்டுட்டுப்போ... அதான் என்னுடைய முடிவு...'
'சரிப்பா, விட்டுடுங்க. நீங்க எதுவும் பேசவேண்டாம். அம்மாவை இப்போ உங்களால சமாதானப்படுத்த முடியாது' என்று ஜாடையிலே சொன்னாள்.
மறுநாள் அலுவலகத்தில் இருந்து வந்த செல்வநாதன், 'பரிமளா... உன் தம்பி போன் பண்ணினான். ஒரு வாரத்தில் முடிவான திருமணமாம். அதான் யாருக்கும் சொல்லலையாம். எதையும் நினைச்சுக்காம அக்காவையும் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொன்னான்' என்றார். இதைக் கேட்டதும் தான் கொஞ்சம் தெளிவு அடைந்தாள் பரிமளா.
'அப்பா...' என்று மெதுவாகக் கூப்பிட்டாள் சிந்து.
'என்னம்மா?' தலையை நிமிர்த்தாமல் கேட்டான்.
'உண்மையிலேயே உங்களுக்கு மாமாகிட்டயிருந்து போன் வந்துச்சா?' என்று சிந்துவிடமிருந்து இந்தக் கேள்வியைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத செல்வநாதன், வேதனையை விழுங்கிக் கொண்டே மகளை பார்த்தான்.
'உங்களுக்கு இப்படி எல்லாம் அவமானம் ஏற்பட்ட பிறகும் நீங்க இந்தக் கல்யாணத்துக்குப் போகணுமாப்பா?'
'போகணும்மா... நிச்சயம் போயே தீரணும்.'
'ஏம்பா! பட்ட அவமானம் போதாதா? அங்கே போய் அவமானப்பட்டுத் திரும்பணுமா?'
'பரவாயில்லை... யார்கிட்ட
அவமானப்படப் போறேன்... உன் மாமனுங்ககிட்ட தானே! உன் கேள்வி நியாயமானது தாம்மா. ஒண்ணு சொல்றேன்... கேளுமா சிந்து. ஏற்கெனவே 10 வருஷமா உங்க அம்மா தன் தாய் வீட்டுக்குப் போகாமலேயே பாசத்தை திரை போட்டு மனசுக்குள்ளயே நொந்து கிட்டு இருக்கா. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு எனக்கு எவ்வளவு அவமானம் ஏற்பட்டாலும் அவளோட அண்ணன் தம்பிகளைப் பார்த்தா அதுல ஒரு திருப்தி உன் அம்மாவுக்கு நிச்சயம் ஏற்படும்.
கணவனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்கிற ஆதங்கம் இருந்தாலும், உடன் பிறந்த உறவுகளைப் பார்த்து நிம்மதி நிச்சயம் ஏற்படும். ஏற்கெனவே மனம் ஒடிஞ்சுப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிற உன் அம்மாவுக்கு நான் செய்கிற உதவி இருக்கட்டும்... அம்மாவுக்கு ஆறுதலா நாலு வார்த்தைகளைச் சொல்லு... போ..'
கல்யாணத்துக்கு முதல் நாள், 'பரிமளா! நான் மூணு நாளைக்கு லீவு போட்டுட்டேன். இன்னைக்கு சாயந்தரமே புறப்படுறோம்' என்று செல்வநாதன் உற்சாகத்தோடு சொன்னான்.
'என்னங்க, உங்க புள்ளைங்க சொல்றதைக் கேட்டீங்களா? பெரியவளுக்கு காலேஜ் எக்ஸாமினேஷன் இருக்காம். அவளால வர முடியாதாம். சின்னதோ, அக்காவுக்கு துணையா நான் இருக்கேன். நீயும் அப்பாவும் மட்டும் போயிட்டு வாங்கன்னு சொல்லிருச்சு. சரி விடுங்க... மாமன் கல்யாணத்தைப் பார்க்க அதுகளுக்குக் கொடுத்து வைக்கல... அவ்ளோதான். ம்... நாம புறப்படலாம்...'
பஸ்ஸில் பயணித்த போது மெளனமாகவே இருந்தான்.
'என்னங்க, நான் என் தம்பி பொண்டாட்டிக்கு நாத்திப் பட்டம் கட்டணுமே...'
'ஓ! மறப்பேனா... அசல் தங்கக்காசே வாங்கி வச்சிருக்கேன். சபையிலே சந்தோஷமா பட்டம் கட்டலாம்.'
மண்டப வாசலில் வீடியோ கேமராக்கள் ஒளி வீசிக்கொண்டிருந்தன.
'பார்த்தீங்களா... நாம வர்றதுக்கு முன்னாலேயே பொண்ணை அழைச்சுக்கிட்டு வந்திட்டாங்க...'
'சரி சரி, அதெல்லாம் பேச இதுவா நேரம்? நாம தாமதமா வந்துட்டோம். அதான் நல்லநேரம் போறதுக்குள்ளே பெண் அழைப்பு முடிஞ்சுடுச்சு. வா, உள்ளே போகலாம்...'
வாசலில் தான் பரிமளாவின் பெரிய தம்பி நின்று கொண்டிருந்தான். கூடவே அவன் மனைவியோ பரிமளாவை மட்டும், 'வாம்மா...' என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னாள். செல்வநாதனை கண்டுக்கவே இல்லை. அதைப் பற்றி செல்வநாதனும் கவலைப்படவில்லை.
மறுநாள் காலை. பரிமளா சுற்றிலும் பார்த்தாள். அவளை மணமேடைக்குக் கூப்பிட யாரும் தயாராக இல்லை. அவள் அம்மாவும்கூட கண்ணில் படவில்லை. உட்கார நாற்காலி இல்லாமல் ஒரு ஓரமாகப் போய் நின்றார்கள். மணமேடையில் எல்லா சடங்குகளும் முடிந்தன. தாலி கட்டும் நேரம். 'நாத்தி விளக்கு பிடிக்கவாவது கூப்பிடுவார்கள்' என்று எதிர்பார்த்து, ஒவ்வொரு உறவினரையும் வலிய கூப்பிட்டு, தான் வந்திருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தாள் பரிமளா. ஆனால் அவளை யாருமே மதிப்பதாகத் தெரியவில்லை.
'கெட்டிமேளம் கெட்டி மேளம்' என்ற சத்தம்... தம்பி தாலி கட்டினான். நாத்தி விளக்குப் பிடித்தது பரிமளாவின் சித்தப்பா மகள். 'சொந்த அக்கா நான் வந்திருக்கும்போது, ஒண்ணுவிட்ட சித்தப்பா மகளை நாத்தி விளக்குப் பிடிக்க வைத்து விட்டார்களே?' மனம் நொந்து போனாள் பரிமளா. தாலி கட்டி முடிந்த
வுடன் கூட்டத்தினர் சாப்பிடப் புறப்பட்டனர்.
'என்ன பரிமளா... பஸ்ஸில் வரும்போது வாந்தி வரும்னு சாப்பிடாமே பட்டினியா வந்தீயே... சாப்பிடப் போகலாமா?' என்று செல்வநாதன் எதார்த்தமாகக் கூப்பிட்டான்.
'உங்களுக்கு சொரணைங்கிறது கொஞ்சம்கூட கிடையாதா? சொந்த அக்கா புருஷன் நீங்க, ஒரு பய வாங்கன்னு கூப்பிடலை. வந்தவங்களை உட்காரச் சொல்லக் கூட நாதியில்லை. இந்த வீட்டில் கை நனைக்கிறேன்னு சொல்றீங்களே... வாங்க ஊருக்குத் திரும்பலாம். நல்லவேளை நம்ம பிள்ளைகள் வரலை. வந்திருந்தா இந்தக் காட்சிகளைப் பார்த்துட்டு நொந்து போயிருப்பாங்க!'
கணவனைக் கூட்டிக்கொண்டு வந்த வழியே புறப்பட்டாள் பரிமளா.
செல்வநாதன் குடும்பத்தை வெறுக்கும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்து விட்டது.
செல்வநாதனுக்கு கல்யாணம் நடந்தபோது? பரிமளாவின் தம்பிகள் எல்லோரும் சின்னப் பையன்கள். மாமனார் வேலை, வேலை என்று எங்கும் நகர மாட்டார். எல்லாக் காரியங்களையும் செல்வநாதனும் பரிமளாவும்தான் முன்னின்று நடத்துவார்கள். தொடர்ந்து இரண்டு மைத்துனர்களுக்குக் கல்யாணம் முடிந்தது.
மைத்துனர் மனைவிகளோ 'ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய ஆதிக்கத்தில் வர வேண்டும்' என்று விரும்பினார்கள். ஆனால், பரிமளா பிறந்த வீட்டில் முன்பு போல் அதிகாரம் செலுத்த ஆசைப்பட்டாள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் மைத்துனரின் மனைவிகள்.
இந்தச் சமயத்தில் எதிர்பாராமல் நெஞ்சுவலி என்று செல்வநாதனின் மாமனார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். துணைக்கு செல்வநாதன்தான் ஆஸ்பத்திரியில் இருந்தான். உடம்பு குணமாகி வீட்டுக்குப் புறப்படும்போது, திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மாமனார் இறந்து விட்டார்.
தந்தையை அக்கா புருஷன்தான் சரியாகக் கவனிக்கவில்லை என்ற பழியை நாசுக்காக அரங்கேற்றினர். இதனால் உடன் பிறந்த பரிமளாவையும் வீட்டுக்குள் வருவதற்கு கட்டுப்பாடு விதித்தார்கள். மருமகள்கள் ஆதிக்கத்துக்குள் வீட்டின் நிர்வாகம் கை மாறியது. மாமியார் மெளனமானாள்.
மாமனார் இருந்தவரை செல்வநாதனுக்கும் பரிமளாவுக்கும் தான் அந்த வீட்டில் மதிப்பு. மாமனார் இறந்து செல்வநாதன் பரிமளா குடும்பம் போவது நின்றதும், வல்லூறுகளும் கோட்டான்களும் குடிபுக ஆரம்பித்தன. அங்கே நடப்பது எல்லாமே தெரியும் செல்வநாதனுக்கு. ஆனாலும் எதையும் கண்டு கொள்ளவில்லை.
பரிமளாவின் அப்பா இருந்தவரை அவர் சம்பாத்தியத்தில் பரிமளாவின் அம்மா யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் தன் சொந்த பந்தங்களுக்கு இஷ்டம் போல் உதவி செய்தாள். இதையெல்லாம் பார்க்கப் பொறுக்காமல் மருமகள் பேசும் ஜாடை மாடை வார்த்தைகளைக் கேட்டு நொந்து போனாள்.
பரிமளாவின் அம்மாவிடம் நாளடைவில், 'மாமா சம்பாதிக்கும்போது இஷ்டத்துக்குச் செலவு பண்ணினீங்க... இப்ப அப்படி முடியுமா? எங்க வீட்டுக்காரர் ராப்பகலா உழைக்கிற காசு இப்படிச் செலவு பண்ணினா எங்க பிள்ளைகளுக்கு என்னத்தைச் சேர்க்கிறது' என்று நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
மகன்களும் கண்டுகொள்ளவில்லை. பொண்டாட்டி பேச்சுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருந்தார்கள். தனக்குத் தேவையான மருந்து மாத்திரை வாங்கக்கூட மருமகள் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுப்போச்சு. இதையெல்லாம் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட பரிமளா, மிகவும் வேதனைப்பட்டாள்.
அம்மாவின் மேல் உள்ள பாசத்தால் ஒருநாள் தன் கணவனிடம், 'ஊருக்குப் போய் எங்க அம்மாவை எட்டி நின்று பார்த்துட்டு வரட்டுமா?' என்று கேட்டாள்.
மனைவியின் ஆசைக்கு மறுப்பு சொல்ல செல்வநாதனுக்கு மனசில்லை. ஆனாலும் அப்போதைக்கு மறுத்து விட்டான். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பரிமளா, 'ஏங்க?' என்று பரிதாபமாகக் கேட்டாள்.
'பரிமளா ஒண்ணுசொல்றேன் கேளு. இதை நான் சொல்லலை. ஒரு அறிவாளி அனுபவிச்சுச் சொன்னது. ஒரு ஏழை பணக்காரன் ஆகிவிட்டால், அவன் தன் உறவுகளை மறந்து விடுகிறான். ஒரு பணக்காரன் ஏழையாகிவிட்டால் உறவுகள் அவனை மறந்து விடுகின்றன. இதுதான் உலகம்.'
கணவன் சொல்வதிலும் அர்த்தம் இருப்பதைப் புரிந்து கொண்ட பரிமளா, அப்போதைக்கு தன் மனசை அடக்கிக் கொண்டாள். மனைவியின் ஆசைக்கு செல்வநாதன் ஆணைப் போட்டது உண்மையில்லை... அங்கே போய் தன் தாய் படும் துன்பத்தைப் பார்த்து மேற்கொண்டு கவலைப்படக் கூடாது என்றுதான்.
பத்து வருடங்கள் ஓடியது. செல்வநாதன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அம்மாவை பெற்ற வீட்டில் தன் தந்தைக்கு ஏற்பட்ட அவமானங்களை எண்ணி வருந்தினார்கள். ஆனால், 'தாய் நொந்து போவாளோ?' என்று தந்தையைப் போல் பொறுமையைக் கடைப்பிடித்தனர்.
மண்டபத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பஸ் ஸ்டாப். இருவரும் நடந்தே வந்தார்கள். பஸ் ஸ்டாப்பில் இருக்கும்போது, அவர்களை உரசிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து பரிமளாவின் அம்மா இறங்கினார். அம்மாவைப் பார்த்ததும் குமுறிவிட்டாள் பரிமளா.
'ஏண்டி... உன்னை யாரு கல்யாணத்துக்கு வரச் சொன்னது? நீங்க எல்லாம் கல்யாணத்துக்கு வரணும்னு நினைச்சிருந்தா முறையா வந்து அழைச்சிருக்க மாட்டேனா? உன் ஒரு தம்பிக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு தெரிஞ்சுக்கத்தானே தகவலுக்காக ஒரு பத்திரிகை அனுப்பி வைத்தேன்.
நீ அவமானப்பட்டதும் இல்லாம என் மருமகனையும் கூட்டிக்கிட்டு வந்து அவரையும் அவமானப்பட வெச்சிட்டியேடி... உனக்கு இந்த வீட்டிலே மதிப்பு மரியாதை எதுவும் இல்லடி. எல்லாம் உங்க அப்பாவோடு போச்சு. இப்ப வாழ்க்கையின் முடிவு நாளை எண்ணிக்கிட்டு இருக்கேன்டி...' அதுக்கு மேல பேச முடியாமல் அழுதாள் பரிமளாவின் அம்மா.
'அத்தை, இப்ப என்ன ஆயிடுச்சு? ஏதோ என்னுடைய மைத்துனன்க என்னை வெறுக்கிறாங்க, பரவாயில்லை. என்னை அவமதிச்சது யாரு... என் மைத்துனர்கள், அவ்வளவுதானே.'
'நீங்க எதுக்கு வந்தீங்கன்னு கேட்டீங்களே... ஒரு சமயம் நீங்ககூடச் சொன்னீங்க... 'தம்பி! நீங்க இந்த வீட்டு மருமகன் மட்டும் இல்லை... மூத்த மகனே நீங்கதான்'னு. நான் அதுக்கு என்ன சொன்னேன். 'நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நான் இந்த வீட்டுப் பிள்ளைதான். எந்தக் காலத்திலும் ஒரு மூத்த பையனுக்கு உரிய கடமையை முன்னிருந்து செய்வேன். நான் இன்னிக்கு அதுக்காகத்தான் வந்தேன்.
'வா'ன்னு கூப்பிடாட்டியும் என் மாமனார் ஸ்தானத்திலிருந்து ஒரு தந்தையா என் மைத்துனனின் கல்யாணத்தை ஆசிர்வதித்துவிட்டேன். எனக்கு ஏற்பட்டது மரியாதையோ?, அவமரியாதையோ? ஆனால், உங்க மகளுக்கு மனசுக்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டுடுச்சு... எனக்கு அது போதும்.
ஏன்னா அவ என் மனைவி. அவளை எந்த சந்தர்ப்பத்திலும் நிம்மதியா வச்சுக்குவேன்னு சத்தியம் பண்ணிட்டுதானே தாலி கட்டினேன். அந்த சத்தியத்தை வாழ்நாள் பூரா காப்பாத்துவேன். நீங்க நிம்மதியா போங்க... கல்யாண வீட்டிலே உங்களைத் தேடுவாங்க' என்று செல்வநாதன் மனைவியை அழைத்துக் கொண்டு பஸ் ஏறினான்.
'பெற்ற மகளை, வந்த மருமகளுக்காக மனக் காயப்படுத்தி அனுப்புகிறோமே...' என்று கண்ணீர் வடித்தபடியே திரும்பினாள் பரிமளாவின் தாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.