தினமணி கதிர்

பிராயசித்தம்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. காலை எட்டரை மணிக்குத் திறந்து கிடந்த பள்ளியில் நுழைந்து பார்த்தவுடன் தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தினமணி செய்திச் சேவை

ஆர்.கே. அருள்செல்வன்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. காலை எட்டரை மணிக்குத் திறந்து கிடந்த பள்ளியில் நுழைந்து பார்த்தவுடன் தலைமை ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'சமையலர் எட்டு மணிக்கே பள்ளியைத் திறந்து வைத்து விடுவாரே, இன்னமும் ஏன் பிள்ளைகள் யாருமே பள்ளிக்கு வரவில்லை? வழக்கமாக அந்த நேரத்தில் பெரும்பாலான பிள்ளைகள் வந்திருப்பார்கள்.

ஒன்பதுக்கு மணி அடிக்கும்போது மிச்சம் மீதி உள்ளவர்கள் ஓடி வருவார்கள்' என அவர் எண்ணியவாறு உள்ளே நுழைந்து தனது வகுப்புக் கரும்பலகையைப் பார்த்தவருக்கு மேலும் ஓர் அதிர்ச்சி. அது அவரது மரணச் செய்தியைத் தாங்கியிருந்தது. தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சீரற்ற கையெழுத்தில் 'தலமை ஆசிரியர் மரனம்' என்று தப்பும் தவறுமாக எழுதப்பட்டிருந்தது. எவனோ ஒரு பையன் எழுதி இருக்கிறான். ஒருவாறு பிரச்னையை ஊகித்துக் கொண்டார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பள்ளிக்குழந்தைகளைக் காணோம். வெளியே வந்து நாலாபுறமும் சுற்றிப் பார்த்தார். துடைத்துப் போட்ட மாதிரி இருந்தது. சிறுவர்கள் நடமாட்டமே இல்லை.

அடுத்த தெருவில் நடந்து போய்ப் பார்த்தார். ஒரு சிறுவன் எதிர்ப்பட்டான்.

'இங்கே வாடா!' என்றார். அவன் சிறு அதிர்ச்சியுடன் தயக்கத்தோடு வந்தான். அனிச்சையாகக் கையைக் கட்டிக் கொண்டு அவர் எதிரே நின்றான். அவன் மூன்றாம் வகுப்பு ராகுல்.

'என்னாச்சுடா? ஏண்டா ஸ்கூலுக்கு வரல?' என்றார். நின்றவன், கையைக் கட்டிக் கொண்டே பதில் சொன்னான்.

'பசங்க எல்லாரும் காலையிலேயே வந்தாங்க சார். நீங்க செத்துட்டீங்கன்னு இன்னைக்கு லீவு... அதான் சார் எல்லாருமே திரும்பிப் போய்ட்டாங்க!'

தயக்கத்தோடு உதிர்ந்தன வார்த்தைகள். அவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார்.

'விடுமுறை என்றாலும் இது மாதிரி அவசரச் செய்திகள் என்றாலும் மட்டும் பள்ளிப் பிள்ளைகளுக்குள் செய்தி எப்படி நெருப்பு மாதிரி பரவி விடுகிறது ? நல்ல விஷயம் இதுமாதிரி பரவுவதில்லை. நீரைவிட நெருப்பு வேகமாகப் பரவி விடும் தானே?' என்று நினைத்துக் கொண்டார்.

பள்ளிக்குச் சென்றபோது சக ஆசிரியை விஜயா வந்திருந்தாள். சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டிருந்தாள்.

'ராஜாங்கட்டளை' என்பது ஊர்ப் பெயர். பஸ் வசதியில்லாத கிராமம். அங்கேதான் அந்த ஈராசிரியர் அரசுப் பள்ளி இருந்தது. சுமார் அறுபது பிள்ளைகள் படித்தார்கள்.

முந்தைய நாளோடு விடுமுறை முடிந்து விட்டதே? இன்னமும் பள்ளி விடுமுறைக் கோலத்தில் இருந்ததைப் பார்த்து அவருக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றார்.

ராகுல் கையைக் கட்டிக்கொண்டு எதிரே நின்றிருந்தான்.

'யாருடா இதை எழுதினது? யாருக்காவது இதைப் பற்றித் தெரியுமா?' என்று கேட்டபோது, அவன் தயங்கியபடியே, 'எனக்குத் தெரியாது சார். எல்லாரும் ஓடி வந்தபோது நானும் ஓடிப் போய்ட்டேன்' என்றான்.

தெருவில் ஹெச்.எம். சார், அதாவது தலைமையாசிரியர் வந்திருக்கிறார் என்ற செய்தி பரவியது. ஓடிப் போன பிள்ளைகளை இழுத்துக் கொண்டு பெற்றோர் ஒவ்வொருவராக வந்தனர்.

அவர்களிடம், 'இன்று பள்ளி உண்டு' என்று சொல்லி அனுப்பினார். போன பிள்ளைகள் மெல்ல மெல்ல தயங்கியபடி வந்து சேர்ந்தார்கள். அதற்குள் மணி பத்தரை ஆகிவிட்டது. அப்போதும் முழுமையான அளவுக்கு வரவில்லை.

மனதளவில் அவர்கள் விடுமுறை மனநிலைக்கு வந்திருந்தார்கள். வீட்டை விட்டு வெளியே சிதறி ஓடிப் போய் விளையாடப் போய்விட்டார்கள். வெளியேறிய பிள்ளைகள் 'ஹெச்.எம். சாரு செத்துட்டாரு.... ஹெச்.எம். சாரு செத்துட்டாரு' என்று பேசிக் கொண்டார்கள். எந்த அதிர்ச்சியும் இல்லாமல், 'டேய் அவர புதைப்பாங்களா? எரிப்பாங்களாடா ?' என்றுகூட விளையாட ஓடிப்போனவர்களுக்குள் விவாதமும் நடைபெற்றிருந்தது.

ஹெச்.எம். சார், கரும்பலகையில் எழுதி உள்ளதை, 'பாத்தீங்களா... பசங்க வேலையை?' என்று பெற்றோர் சிலருக்குக் காட்டினார் .

'பிஞ்சிலே பழுத்துப் போச்சுங்க, சார்!'

'ஊரே ரொம்ப கெட்டுப் போச்சு, சார்!'

'என்ன அநியாயம்... என்ன ஒரு நெஞ்சழுத்தம்

பாருடி ... இப்படி எழுதி வச்சுருக்காங்க?'

'என்ன ஒரு தில்லு முல்லு. இதெல்லாம் உருப்படவாப் போகுது?' என்று ஆளாளுக்கு அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

பிள்ளைகள் எல்லாரையும் வைத்துக்கொண்டு ஹெச்.எம். சார் கேட்டார் .

'யார் இதை எழுதியது? இந்தப் புரளியைக் கிளப்பியது யார்? ஒழுங்கா உண்மையைச் சொல்லிப்புடுங்க. தோலை உரிச்சுப்புடுவேன்!' என்றார் மிரட்டல் தொனியில்.

எழுதியவனையும், 'இன்று பள்ளி லீவு' என்று சொன்னவனையும் சிலருக்குத் தெரியும். ஆனால் , அவன் ஐந்தாம் வகுப்பு மாணவன் என்பதால் சிறு பிள்ளைகள் பயந்தார்கள்.

ஆனால், தனக்குத் தெரியாது என்று மாற்றி மாற்றி இன்னொருவன் பெயரைச் சொன்னார்கள்.

ஒருவன் 'பழனிவேல்.' என்றான்.

பிறகு சிலர் தைரியம் வந்தவர்களாக, 'அவன்தான் சார் முன்னாடியே வந்திருந்தான்' என்றனர். 'பழனிவேல் கையெழுத்துத்தான் சார் இப்படி கோணலா இருக்கும்' - இது ஒருவன்.

'அவன் தான் சார் எப்பயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதுவான்' என்றான் இன்னொருவன்.

ஒருவழியாக 'துப்பறிந்து' கண்டுபிடித்துவிட்டார்.

'அவன்தான் முதலில் பள்ளிக்கு வந்த மாணவன்' என்று தெரிந்தது. அவன் விளையாட்டுத்தனம் அதிகம் உள்ளவன். எப்போதும் வகுப்பைவிட்டு வெளியே செல்லத் துடிப்பாக இருப்பவன்.

பழனிவேலைத் தேடி ஆள் அனுப்பினார். நாலாம் வகுப்பு சிறுவர்கள் இருவர் ஓடிப் போய்ப் பார்த்துவிட்டு போன வேகத்தில் வந்தார்கள். 'அவன் வீட்டில் இல்லை, சார்' என்று சொன்னார்கள்.

அந்தப் பள்ளி வயல்வெளி நடுவில் இருந்தது. சற்றுத் தொலைவில்தான் பள்ளிக்கு வர வேண்டிய பிள்ளைகளின் தெருக்கள் இருந்தன. நாலாபுறமும் இருந்து வந்து சேரவேண்டும்.

பழனிவேல் வீடு இருக்கும் தெரு நாலு தெரு தள்ளி இருந்தது. அதற்குள் பழனிவேல் பற்றிய இந்தச் செய்தி ஊருக்குள் கசிய ஆரம்பித்துவிட்டது. பிள்ளைகள் மத்தியில் இதே பேச்சாக இருந்தது. ஹெச்.எம். பள்ளியை சகஜ நிலைக்குக் கொண்டுவர நினைத்தார்.

தன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு இவ்வளவு தைரியமா? இவ்வளவு விஷமமா? அது அவருக்குள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

'எதனால் அப்படிச் செய்தான்?' என்ற கேள்வி அவரைக் குடைந்து கொண்டே இருந்தது. வகுப்பில் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

பதினொரு மணி போல் இருக்கும். இளைஞன் ஒருவன் பழனிவேலை இழுத்துக்கொண்டு வந்தான். 'ஸ்கூலுக்கு வராம சுத்துறான் சார்' என்றான் அவன்.

பழனிவேலுக்கு அழுது முகமெல்லாம் வீங்கி இருந்தது. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான்.

ஹெச்.எம். சாரை கண்டால் எல்லாரும் பயப்படுவார்கள். 'இதற்கு என்ன செய்யப்போகிறாரோ?' என்று ஒரு பயம் அவனுக்குள் கூடியிருந்தது. அவரை நெருங்கும்போது, பலிபீடத்தை நெருங்குவது போல் அவனுக்குள் பீதி. அவனது பயந்த தோற்றத்தைப் பார்த்து ஹெச்.எம், 'இவனா இப்படி எழுதியவன்?' என்று நம்ப முடியாது வியந்தார்.

அழைத்து வந்த இளைஞன் அவனைப் பள்ளிக்குள் உந்தித் தள்ளினான்.

'இவன பத்தி கேள்விப்பட்டேன் சார். வர்றப்பயே ரெண்டு போட்டுத்தான் இழுத்துட்டு வந்தேன். மதகடியில பதுங்கி இருந்தான் சார்!' என்றான்.

'சரி நீ போ... நான் பார்த்துக்குறேன்' என்றார் ஹெச்.எம்.

'ஓடினாலும் ஓடுவான் சார். நான் இங்கே நிற்கிறேன், சார்!' என்றான்.

'பரவால்ல... நான் பாத்துக்குறேன், நீ போ. இவனை தனியே விசாரிக்கிறேன்!' என்றார்.

'வாடா!' என்றார். கையைக் கட்டிக் கொண்டு தேம்பினான் பழனிவேல்.

'இது என்னது?' என்று கரும்பலகையைக் காட்டினார்.

அவன் மெளனமாகத் தலைகுனிந்தபடி இருந்தான். விசும்பல் நிற்கவில்லை.

'நீ தானே எழுதினே?' என்றார். அவன் பேசவில்லை. மெளனமாக தலைகுனிந்து இருந்தான். விசும்ப ஆரம்பித்தான்.

'அடிக்க மாட்டேன்... உண்மையச் சொல்லு. நான் உன்னை அடிக்க மாட்டேன். நீதானே இத எழுதினே?' என்றார்.

கையைக் கட்டிக் கொண்டு தலை குனிந்து மேல் விழியால் பார்த்து தலையாட்டி மெளனமாக ஆமோதித்தான். 'அடி விழுந்து விடுமோ?' என்று உடலை பாதுகாப்பு உணர்வுடன் விரைப்பாக்கிச் சுருக்கி வைத்துக்கொண்டான்.

அவனுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். பிதுங்கிய விழிகள். அவனது விழிவெண்படலம் பெரியதாக இருக்கும். அதனால் அவனது கறுப்பு முகத்துக்கு கண்கள் பளிச்சென்று வெளியே தெரியும்.

'ஏண்டா இப்படி செஞ்சே?' என்றார்.

மீண்டும் மெளனச் சீறலாக அழுகை.

'டேய்... உண்மையை ஒழுங்கா சொன்னா உன்னை ஒண்ணுமே செய்ய மாட்டேன். நிச்சயமா நான் அடிக்க மாட்டேன்.' என்று தோளில் கை வைத்தார். விசும்பிக் கொண்டே இருந்தான். இருந்தாலும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை வரவில்லை . முன்பு பலமுறை அடி வாங்கியிருக்கிறான். இதமாகப் பேசிக்கொண்டே பளீரென்று வைத்துவிடுவார்.

'சொல்லுடா...'

'எதனால அப்படி எழுதினே? உனக்கு என்னடா பிரச்னை?' என்றார் தணிந்த குரலில்.

'எங்க வீட்ல அப்பா அம்மாவுக்கும் சண்டை சார்.'

'இது சகஜமானது தானடா இந்த ஊர்ல? சரி, அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? அதுக்கு ஏன்டா என்ன சாகச் சொல்ற? நான் என்ன பண்னேன் உனக்கு?'

'சண்டை சார்... சனிக்கெழம ராத்ரி சண்டை சார்!'

'சரிடா... மேல சொல்லு'

'ஞாயித்துக்கெழம எங்க வீட்டுல சமைக்கலை சார். அன்னைக்கு முழுக்க நான் சாப்பிடல சார்' என்று வார்த்தைகள் உதிரியாய்ச் சிதறின .

'சரி... அதனால் நான் ஏண்டா சாகணும் ?'

'திங்கள்கிழமை ஸ்கூல் வந்தேன் சார். ஆனா திங்கள்கிழமை ஏதோ கோயில்ல விசேஷம்னு ஸ்கூலுக்கு அன்னைக்கு லீவு விட்டுட்டீங்க சார்.'

'ஆமா திங்கள்கிழமை கோயிலில் காப்பு கட்டுறதுன்னு எல்லாரும் வந்து கேட்டாங்க. அதனால உள்ளூர் விடுமுறை விட்டேன். அதனால உனக்கு என்ன பிரச்னை?'

'கோயில் காப்பு கட்டுறதுனால எனக்கு ஸ்கூல் இல்ல. அதனால நேத்து நான் மத்தியானம் ஸ்கூல்லயாவது சாப்பாடு கிடைக்கும், சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா இல்ல. சாப்பிடல. நேத்தைக்கும் நான் பட்டினி சார்!'

'அதனால?'

'பசி தாங்கல. நீங்க தான் லீவு விட்டீங்கன்னு கோபம் வந்துச்சு. அதான் சார் காலையில எழுதிட்டேன்.' என்றான் கெஞ்சுகிற குரலில். ஆனாலும் அதில் தெளிவிருந்தது.

அவருக்கு அப்போதுதான் உறைத்தது.'ச்சே' என்று நினைத்துக் கொண்டார்.

அவன் சில வரிகளில் சொன்ன கதை அவருக்கு முழு சித்திரத்தைப் பார்க்க வைத்தது. இரண்டு நாள்களாகச் சாப்பிடவில்லை. புரிந்துவிட்டது. புரிந்துவிட்டது. பசி பட்டினி. அவருக்குள் தேள் கொட்டியது போல குற்றவுணர்வு குடைய ஆரம்பித்தது. ஏதோ ஒரு குற்ற உணர்வு அவருக்குள் ஊர்ந்தது. அவனிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று அவர் குழம்பிக் கொண்டிருந்தார்.

அப்போதும் அடிப்பாரோ என்கிற பீதியோடுதான் பார்த்தான்.

'சரி, நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். போர்டில் உள்ளதை நீயே போய் அழி, பார்க்கலாம்' என்றார்.

வெறுங்கையால் கரும்பலகையை அழித்தான். அவன் கைகளில் வழிந்த கண்ணீரின் ஈரம் இருந்ததால் எளிதாக அழிந்தது.

பிற மாணவர்கள் பீதியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'இன்னைக்கு செம அடி வாங்கப் போறான்...' என்று ஆளாளுக்கு கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டார்கள்.

'சரி, காலையில் என்ன சாப்பிட்டே ?' என்று கேட்டார்.

'ம்ஹூம்' தலையாட்டினான்.

'நேத்து ராத்திரிதான் பக்கத்து வீட்டில ரெண்டு இட்லி கொடுத்தாங்க' என்றான்.

சட்டையைத் தூக்கிப் பார்த்தார். வயிறு ஒட்டியிருந்தது. அவரது மனம் பிராயசித்தம் தேடி அலைந்தது.

'சரி, போய் முகத்தைக் கழுவிட்டு வா.' என்றார். முகம் கழுவி வந்தான். அவனுள் இருந்த பயம் பதற்றம் தீரவில்லை.

'ஒக்கார்டா' என்றார்.

மேஜைக்கு அருகில் இருந்த அவருடைய சாப்பாடு கேரியரை எடுத்து அவனிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

நம்ப முடியாதவனாக அவன் தயங்கினான். 'சாப்பிடுடா' என்றார்.

'இது உங்க சாப்பாடு சார்' என்றான் .

'பரவால்ல... நீ சாப்பிடு.' என்றார்.

அப்போதும் அவர் கேரியரில் சாப்பிடுவதா? என்று அவனுக்குத் தயக்கம்.

'நான் என் தட்டில் கொட்டிக்கவா கொஞ்சம் ?' என்றான்.

'வேண்டாம்... அப்படியே வெச்சு இதே கேரியர்ல நீ சாப்பிடு.'

நம்ப முடியாமல் தயங்கினான்.

'நீதான் முழுசும் சாப்பிடணும். சாப்பிடலன்னா அடி வாங்குவ' என்றார் .

'அடி வாங்குவான் என்று நினைத்தால் உட்கார வைத்து சாப்பாடு போடு

கிறாரே' என்று பிற பிள்ளைகள் குழப்பத்தோடும் வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பழனிவேல் நடப்பது கனவா?, நனவா என்று நம்ப முடியாமல் கவளம் கவளமாகச் சாப்பிட ஆரம்பித்தான். மற்ற பிள்ளைகளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்து சாப்பிட்டதால் அவர் கவனித்துப் பார்த்தார். அவருக்குள் ஏதோ தீயாய் எரிந்து கொண்டிருந்தது மெல்ல அணைந்து கொண்டிருந்தது போலிருந்தது.

போகப் போக வேகமாகச் சாப்பிட்டான். அவன் வயிற்றில் பசி நெருப்பு கூவியது. ஐந்தே நிமிடங்களில் சாப்பாட்டு கேரியரை காலி செய்தான்.

அவர் திருப்தியாகப் புன்னகை செய்தார்.

சிறிது நேரம் சென்றதும், மதிய உணவு இடைவேளை மணி அடித்தது. மாணவர்கள் சாப்பிடப் போனார்கள் வழக்கமாக. பழனிவேலும்தான்.

'மதியம் ஹெச்.எம். சார் சாப்பிடவில்லை' என்பது பிள்ளைகளிடம் பேசுபொருளானது. 'ஹெச்.எம். சார் சாப்பிடல, சாப்பிடல' என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். அவருக்கு 55 வயது. பி.பி., சுகர் மாத்திரை போட்டுக் கொண்டிருந்தார். கை கால்கள் மரமரப்பது போலிருந்தது. 'பரவாயில்லை' என்று சமாளித்துக் கொண்டார்.

மூன்று மணி போல் அவருக்குக் கிறுகிறுப்பாக இருந்தது. வெறும் நீரைக் குடித்துச் சமாளித்துக் கொண்டார். வயிறு காலியாக இருந்தது. தொண்டை உலர்ந்தது. பசியை உணர்ந்தார். காய்ச்சல் கண்டது போல் வாய் கசந்தது. வகுப்பில் பழனிவேலைப் பார்த்தார். தயக்கத்தோடு மென் சிரிப்பு காட்டினான்.

'அவர் மன்னித்துவிட்டார்' என்பதில் பழனிவேல் மகிழ்ச்சியாக இருந்தான். அவரோ அவன் மனம் தன்னை மன்னித்துவிட்டதாக உணர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT