'பெரும்பாலான ஆண்கள் குடும்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கும் சம அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களின் மன இறுக்கத்தைப் போக்குவதற்கான முயற்சிகளை வீட்டில் உள்ளோர் ஏற்படுத்த வேண்டும்.
உலக அளவில் பெண்களுக்குச் சம உரிமை என்றே பேசுகிறவர்கள், ஆண்களுக்குப் போதிய உரிமைகளும், அதிகாரங்களும் தரப்பட வேண்டும் என்று பேசுவதில்லை. பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் சமத்துவம் தரப்பட வேண்டும்' என்கிறார் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பயிற்சியாளர் வாணி கோபாலன்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர், 'பிஸி'யான அன்றாடப் பணிகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நாள்களிலும், நேரத்திலும் 'ஆண்கள் அழக்கூடாது' என்ற தலைப்பில் பயிற்சிகளை நடத்தி வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட சோளிங்கர். நான் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். பல்வேறு மாநிலங்களில் எனது பள்ளிக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் அமைந்தது. எம்.காம்., இரு எம்.பி.ஏ. பட்டங்களோடு, அமெரிக்காவில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளேன். 21 ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய நான், சில ஆண்டுகளாக அதன் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறேன்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றே அனைவரும் பேசுகின்றனர். 'ஆண்கள் அழக் கூடாது' என்று அன்றும், இன்றும் சமூகமும் கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
இருபது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு நான் அளித்த பயிற்சியின் மூலம், ஆண்களின் மௌனத்துக்குப் பின்னால், பல்வேறு பிரச்னைகள் புதைந்துள்ளதை அறிய முடிந்தது. இழப்புகள், ஏமாற்றங்கள், பிரச்னைகள், நெருக்கடிகள் என்று பலவிதமான சூழல்களில் ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உடல்நலத்தையும், மன வளத்தையும்கூட அவர்களால் பேணிக் காக்க முடியவில்லை.
ஆண்கள் எதையும் சமாளிப்பார்கள் என்று கூறி, அவர்கள் அழக் கூடாது என்றே சமூகம் கூறுகிறது. அவமானங்கள், தோல்விகள், பிரச்னைகளைச் சமாளிக்க முடியாத சூழ்நிலைகளால் பலர் உடல்நலக் குறைபாடுகளுக்கும், மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். சிலர் உயிரை இழக்கும் சூழலுக்கும் ஆளாகின்றனர்.
நான் பயிற்சிகளை அளிக்கும்போது, 'கடைசியாக எப்போது சந்தோஷம் அடைந்தீர்கள்?', 'கடைசியாக எப்போது அழுதீர்கள்?', 'கடைசியாக எப்போது மன்னிப்பு கேட்டீர்கள் அல்லது மன்னிப்பு அளித்தீர்கள்?' என ஆண்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்பேன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நிறைய ஆண்கள் திணறுவர். இதுதான் பெரும்பாலான ஆண்களின் நிலையாகவும் உள்ளது.
ஆண்களின் பிரச்னைகளைக் கேட்டறிய மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர்கள் என யாரும் முன்வருவதில்லை. பெண்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த அளிக்கப்படும் வாய்ப்புகள் ஆண்களுக்குத் தரப்படுவதில்லை. வீட்டில் இப்படி இருப்பதால்தான், வெளியிடத்திலும், பணிபுரியும் இடத்திலும் ஆண்கள் அதிகாரத்தைச் செலுத்தும் நிலை உண்டாகிறது.
வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இல்லாத நிலையில், வெளியிடத்தில் கோபத்தைக் காட்டும் நிலையும் உருவாகிறது. 'எங்கு அடிபட்டோமோ அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் ரத்தத்தைக் கொட்டும் நிலைதான்' ஆண்களுக்கு உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும்.
'ஆண்கள் நம்மைக் கேட்க யார் இருக்கிறார்கள்' என்று தனக்குத் தானே நொந்துகொண்டு, உடல் நலத்தைப் பேணிக் காக்காமல் இருக்கக் கூடாது. தனக்குத் தானே பக்குவப்படுத்திக் கொண்டு செதுக்கிக் கொள்ள வேண்டும்.
வீட்டில் அமைதி காக்கும் ஆண்களை 'அவன் அப்படித்தான்' என்று மனைவி, பெற்றோர், உறவினர்கள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, சந்தோஷமான சூழலை ஏற்படுத்த வேண்டும். வீட்டில் டி.வி.யும் ஓடிக்கொண்டே இருக்க, கைப்பேசிகளைப் பார்த்துக் கொண்டே உறவுகள் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள், நண்பர்கள் பேசி ஆலோசித்து, நல்லதொரு புரிதலையும், இணக்கமான சூழலையும் உருவாக்க வேண்டும்.
வீட்டில் ஆண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்போது, தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்போது அவர்கள் வளங்களையும், செல்வங்களையும், ஆரோக்கியத்தையும் பெறுவார்கள். ஆண்கள் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
ஏழைகளுக்கு உதவிகள் புரிந்தும், பிற உயிரினங்களுக்கு உணவுகளை அளித்தும் மன மகிழ்ச்சியை ஆண்கள் பெற வேண்டும். அப்போதுதான் தாழ்வு மனப்பான்மையும், பிரச்னைகளும் அகலும். வீட்டில் பெண்கள் தங்கள் கணவரிடம் அன்பு செலுத்தி புரிதலை உருவாக்கிட வேண்டும். யார் பெரியவர் என்ற 'ஈகோ' வை விட்டொழிக்க வேண்டும்.
நம்மைப் பார்த்தே பிள்ளைகள் வளரும் என்பதால், விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவத்தை மேம்படுத்த வேண்டும். நல்லவற்றைக் கூறி, தீயவற்றைச் சுட்டிக் காட்டும் நல்ல நட்புகளை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுத்து இன்புறவும் ஆண்கள் முன்வரவேண்டும்.
மாற்றம் வீட்டில் இருந்து ஏற்பட்டால்தான் நாட்டிலும் ஏற்படும். ஆண்கள் தங்களது பிரச்னைகளை வீட்டிலும், நண்பர்களிடத்திலும் சொல்லி, மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் அரசே கொண்டு வரவேண்டும்.
ஆண்கள்தான் தைரியமானவர்கள், அவர்களால்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று திரைப்படங்களில் மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது. அப்படி அவர்கள் தங்களைக் கருதிக் கொள்ளாமல், தன்னம்பிக்கையோடு, மகிழ்ச்சியோடு உடனிருப்போருடன் சேர்ந்து வாழ வேண்டும். வீட்டிலும், வெளியிடத்திலும் உற்சாகப்படுத்தினால்தான் அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அதுதான் எனது ஆவல்' என்கிறார் வாணி கோபாலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.