தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவில் விருப்பம் ஏற்பட...

நான் சென்னையில் வாடகைக்கு அறை எடுத்து அரசுத் தேர்வுகளை எழுதுவதற்காகப் படித்து வருகிறேன்.

தினமணி செய்திச் சேவை

நான் சென்னையில் வாடகைக்கு அறை எடுத்து அரசுத் தேர்வுகளை எழுதுவதற்காகப் படித்து வருகிறேன். உணவகங்களின் சாப்பாடு பல நேரங்களில் ஒத்துக்கொள்வதில்லை. உணவு சாப்பிட விருப்பம் ஏற்படாது. வாயில் உமிழ் நீர் சுரந்து சுவை தெரியாது. மார்பினில் கன உணர்ச்சி, தலைபாரம், குமட்டல் என்றெல்லாம் ஏற்பட்டு அவதியுறுகிறேன். இது எதனால்? எப்படிச் சரி செய்துகொள்வது?

-விஜயராம்குமார், ஓசூர்.

உணவு மற்றும் பானங்களை குடல்களில் பக்குவம் செய்யும் நெருப்புக்கு ஜாடராக்கிநி என்றும், காயாக்கிநி என்றும் பெயர். இதனால் பக்குவம் அடைந்த உணவின் சாரம், உடலில் ஏழு தாதுக்களின் போஷணைக்காகப் போய்க் கொண்டிருக்கிறது. அந்தந்த தாதுவுக்குத் தேவையான சாரத்தை எடுத்துக் கொள்ள ஒவ்வொரு தாதுவின் நெருப்பினால் தனிப்பட்ட ஒரு பக்குவம் நடைபெறுகிறது. இந்தத் தாது நெருப்பின் கேடுகளால் பற்பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவக உணவினால் குடல் நெருப்பும் - தாது நெருப்பும் பாதிக்கப்படுவதால், நீங்கள் 'ரஸசேஷாஜீர்ணம்' எனும் அஜீரணக் கோளாறினால் அவதியுற நேருகிறது.

குடலில் பக்குவமான உணவின் சத்தான பகுதியான சாரம் 'அன்னரஸம்' என்று பெயர் பெறுகிறது. தாதுக்களில் பக்குவமான உணவின் சாரமான பகுதிக்கு 'தாதுரஸம்' என்று பெயர். அன்னரஸம், தாதுரஸத்தின் போஷணைக்கு அதனிடம் சேருகின்றது. நன்றாகப் பக்குவமாகாமல் அன்னரஸம் தாதுரஸத்தில் கலந்துவிட்டால், தாதுக்களின் முதல் தாதுவாகிய ரஸதாதுவின் நெருப்புப் பகுதி கெட்டு 'ரஸசேஷாஜீர்ணம்' ஏற்படும்.

அன்னரசம் நன்றாகப் பக்குவமாக இருப்பினும், ரஸதாதுவின் பாகம் சரியாக நடைபெறாத காரணத்தினாலும் ரஸசேஷாஜீரணம் ஏற்படலாம். இருவகைக்கும் அறிகுறிகளும் சிகிச்சையும் அநேகமாய் ஒன்றே.

அஜீரணத்தில் ஏற்படும் வயிறு உப்புசம், நெஞ்சு கரிப்பு, புளித்த ஏப்பம், வாந்தி பேதி, வயிற்று வலி இவை இருப்பது போல ரஸசேஷாஜீரணத்தில் ஏற்படாது. நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளே அதிகம் தென்படும். இந்த நிலையில் கவனித்து பரிகாரம் செய்து கொள்ளாமல், உணவகங்களில் மேலும் சாப்பிட்டு வந்தால், குடல் உபாதைகள் அதிகரித்து, வாயில் வழவழப்பு, எல்லாப் பூட்டுகளிலும் வேதனை, காய்ச்சல், தலைசுற்றி மயக்கம் போன்ற கடுமையான நிலைகளும் ஏற்படலாம். இதன் தொடர் நடையில் உடல் இளைக்கும், களைப்பு விரைவில் ஏற்படும், ஆண்மை குறையும், சோகை உபாதை, வயது முதிரும் முன்பே நரையும், மூப்பும் ஏற்படும். அதனால் இந்த வகை அஜீரணக் குறிகள் கொஞ்சம் தெரிந்த உடனேயே அதை அறவே விலக்கிக் கொண்டு விடவேண்டும்.

உங்களுக்கு உறக்கத்துடன் சேர்ந்த உபவாசம் மிகவும் அவசியம். உறக்கமும் சிகிச்சையாகுமா என்று எண்ணாதீர்கள். முறைப்படி செய்தால், உடல் உள்ளத்தின் அலுவல்கள் அனைத்தும் சரியாகிவிடும். உறக்கமும் அப்படித்தான். பொதுவாக பகலில் தூங்கக் கூடாது. சாப்பாடு சாப்பிட்டதும் உடனே அதிக நேரம் தூங்கக்கூடாது. உணவு செரிக்காது.

இது உறக்கத்தின் பொதுவிதி. ஆனால், ரஸசேஷாஜீரணத்தில் பகலில் தூங்க வேண்டும். பட்டினியிருந்து கொண்டு தூங்க வேண்டும் என்பது விசேஷ விதி. முற்பகல் முடிய ஒன்றும் சாப்பிடாமல் இருந்து கொண்டு சுமார் ஒரு மணி நேரம் படுத்துத் தூங்கினால் போதுமானது. தூங்கி எழுந்த பின்பு எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகள் அருந்தவும். சாப்பாட்டுக்குப் பிறகு திரும்பவும் பகலில் தூங்கத் தேவையில்லை.

இரண்டு மூன்று நாள்களுக்குள் உபவாசத்துடன் கூடிய பகல் உறக்கத்தினால் ரஸசேஷாஜீரணம் குணமாகிவிடும்.

மருந்துகள்: கடுக்காய் சூரணம் ஒரு பங்கு, சுக்கு சூரணம் அரைப்பங்கு, இரண்டையும் கலந்து கொள்ளவும். வேளைக்கு 1 - 2 கிராம் ஒரு நாளில் 2 - 3 தடவை உணவுக்கு முன் வெந்நீருடன் கலக்கிச் சாப்பிட நல்லது. இந்தச் சூரணத்துடன் கால்பங்கு இந்துப்பும் கலந்து சாப்பிடலாம். வெல்லமும் பாதிப்பங்குச் சேர்த்துச்சாப்பிடலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தந்தி மூலம், சிவதை வேர், சித்திரமூலம், கண்டந்திப்பிலி இவை ஏழும் சமஎடை. ஏழுக்கும் சம அளவு வெல்லம். வெல்லம் தவிர மற்றவைகளைத் தனியாக மென்மையாகப் பொடித்த பின் வெல்லத்தைக் கலந்து கொள்ளவும். 1 - 3 கிராம் ஒரு நாளில் 2 - 3 வேளை உணவுக்கு முன் வெந்நீருடன் சாப்பிடவும்.

பொதுவாய் பசித்தீயை வளர்க்கக்கூடிய மருந்துகள் எல்லாமே ரஸசேஷாஜீரணத்தைப் போக்க வல்லவை. வாயின் ருசியின்மை மாற - இந்துப்புடன் எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறிய உலர்ந்த இஞ்சியின் சூரணம், புளித்த மோரில் இந்துப்புடன் ஊறி உலர்ந்த கடுக்காயின் சூரணம் மிகவும் சிலாக்கியமானவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக தலைமையை சந்திக்க 10 மணிப்பூா் எம்எல்ஏக்கள் திடீா் தில்லி பயணம்!

தமிழகத்தை பற்றி பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்!

மானியத்துடன் கறவை மாட்டுக் கடன் வழங்க பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்!

‘பாலின் தரத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’

வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்

SCROLL FOR NEXT