தினமணி கதிர்

பழைமையான போடி அரண்மனை ஓவியங்கள்...

அரண்மனைகள் என்றாலே ஓவியங்களுக்குப் பஞ்சமிருக்காது.

சுதந்திரன்

அரண்மனைகள் என்றாலே ஓவியங்களுக்குப் பஞ்சமிருக்காது. சுவர்களிலும், கூரைகளிலும் வரையப்பட்டிருக்கும் வண்ணமிகு ஓவியங்கள் அரண்மனையை அழகூட்டுவதோடு அந்தக் காலகட்டத்தின் கலை, கலாசாரம், பண்பாட்டைப் பறைசாற்றும்.

காலமாற்றத்தில் அரண்மனைகள் பராமரிப்பு இல்லாமல் போகும்போது அங்கு வரையப்பட்டிருந்த வண்ண ஓவியங்களும் சிதைந்து போகும். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், ராமநாதபுரம், போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனைகளில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அவற்றில் சில ஓவியங்கள் எஞ்சியுள்ளன. அரண்மனைகளில் வரையப்பட்டிருப்பவற்றில் பெரும்பாலானவை இதிகாச, புராணக் கதைகளை விளக்கும் ஓவியங்களே ஆகும். நாயக்க மன்னர்களின் ஆட்சியின் இறுதியில் உருவாக்கப்பட்ட ஓவியக் கலைக்கூடம் போடிநாயக்கனூர் அரண்மனையில் உள்ளது.

தேனி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ள ஊர்தான் போடிநாயக்கனூர். 16-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாயக்கர் வம்சாவளியைச் சேர்ந்த சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்த ஊர். இங்கு பங்காரு திருமலை போடி நாயக்கர் (1849 - 1862) என்பவரால், பிரமாண்டமான மூன்று நிலைகளைக் கொண்ட அரண்மனை செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டது. இது ராஜஸ்தான் பகுதிகளில் உள்ள அரண்மனைகளின் கட்டட அமைப்பைப் போன்றுள்ளது.

இந்த அரண்மனையில் நுண்ணிய வேலைப்பாடுகளால் ஆன தூண்கள், வளைவுகள், ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் தேக்கு மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு பெரிய தர்பார் ஹால், பார்வையாளர் அறை, தானிய சேமிப்புக் கிடங்கு, விளையாட்டு அரங்கம், குதிரை லாயம், யானைக்கான லாயம் என ஓர் அரண்மனைக்கான அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

பழைமையான இந்த அரண்மனையில் 'லட்சுமி விலாசம்' மற்றும் தர்பார் ஹாலில் ராமாயணக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன.

அரண்மனை சுவர்களில் வரையப்பட்டுள்ள ராமர்- சீதை திருமணக் காட்சிகள், ராஜகம்பளத்து நாயக்கர்களின் திருமணச் சடங்குகளை நினைவுபடுத்தும்படி அமைந்துள்ளன. போடிநாயக்கனூர் ஜமீன் அரண்மனையின் சுவர்களில் சுவரோவியங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அடித்தள மட்டத்தில் உள்ள இரண்டு அறைகளில் வரையப்பட்டிருக்கும் ராமாயணச் சுவரோவியங்கள் பராமரிப்பு இல்லாததால் பொலிவிழந்துவிட்டன.

போடிநாயக்கனூருக்கு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுற்றுலா தலங்களான மூணாறு, போடி மெட்டு, கம்பம் மெட்டு, தேக்கடி மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. குளிர்ச்சியான வானிலை , கிராமியச் சூழல், பசுமையான சாகுபடி நிலங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பாறைச் சிகரங்களைக் கொண்ட மயக்கும் நீல மலைகள், அருவிகள் மற்றும் பழங்கால கோயில்கள் காரணமாக 'தெற்கு காஷ்மீர்' என்ற பெயரும் போடிக்கு உண்டு. ஏலக்காய், காபி, தேநீர், மிளகு, பருத்தி சந்தைகளுக்கு போடி பெயர்பெற்றது.

பல்லவ மன்னர்களிடமிருந்து இதிகாசக் காட்சிகளை சுவரில் வரையும் பாரம்பரியம் போடியை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கும் பரவியது. தர்பார் மண்டபம் மற்றும் லட்சுமி விலாசம் மண்டபத்தின் சுவர்களில் உள்ள சுவரோவியங்கள் ராமாயணக் காட்சிகளைச் சித்திரிக்கின்றன. தமிழ்நாட்டின் ராஜகம்பளம் நாயக்கர்களின் நுண்கலை மரபுகளைப் பற்றி இந்த ஓவியங்கள் நிறையப் பேசுகின்றன. ஸ்ரீ

ராமரின் முடிசூட்டு விழா, ராமகாதை, பெண்கள் ஆரவாரத்துடன் பண்டிகையைக் கொண்டாடுதல், போர் நுட்பங்கள் மற்றும் போர்க் காட்சிகள் அரசவையை சித்தரிக்கிறது.

ஓவியர்கள் மூலிகைச் சாறுகள், வண்ணக் கல் பொடிகள் மற்றும் வஜ்ஜிரம் (பூர்விகப் பசை) ஆகியவற்றின் சரியான கலவையுடன் வண்ணப்பூச்சுகளைத் தயாரித்துள்ளனர். இதை சுவர்களில் முழு ராமாயணக் காட்சிகளை வரையப் பயன்படுத்தியுள்ளனர். ஓவியங்கள் குறித்த சுருக்கமான விளக்கங்கள் தமிழில் உள்ளன.

லட்சுமி விலாசம் மண்டபத்தில் போடி நாயக்கனூர் பாளையப்பட்டு ஜமீன்தார்களின் குலதெய்வமான அஷ்டலட்சுமி எட்டுக் கைகளுடன் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளார். வடமலை நாச்சியம்மனின் அரிய ஓவியமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடவுள் ஓவியங்கள் ஆண்டுதோறும் சிறப்புடன் வழிபடப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் குத்து பெல்லாரி (இப்போது கொத்த பெல்லாரி என்று அழைக்கப்படுகிறது) பகுதியிலிருந்து நாயக்க வம்சத்தினர் போடிக்குக் குடிபெயர்ந்தார்கள். முதலில் நாயக்கர்கள், மதுரையின் தென்பகுதிகளை அடைந்து ஜக்கம்பட்டியில் (தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு அருகில்) குடியேறினர்.

பின்னர் சில்வார்பட்டி (தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் அருகே) சென்று இறுதியாக போடி நாயக்கனூர் பகுதியில் குடியேறினர். அவர்கள் தெலுங்கு பேசும் தமிழ் சமூகத்தினராலும், ஜக்கு நாயக்கராலும் வழிநடத்தப்பட்டனர். ஜக்கு நாயக்கர் போடி நாயக்கனூர் பகுதியில் சுதந்திர ஜமீனாக ஆட்சி செய்தார்.

ராக நாயக்கர், ராம நாயக்கர், பங்காரு முத்து நாயக்கர், போடி முத்து நாயக்கர், ஜக்கு முத்து நாயக்கர், சிலா போடி நாயக்கர் என்று ஜாமீன் பரம்பரை நீண்டது.

சிலா போடி நாயக்கர், மதுரை திருமலை நாயக்கரை எதிரிகளிடமிருந்து பாதுகாத்ததனால், மனம் மகிழ்ந்த திருமலை நாயக்கர் சிலா போடி நாயக்கருக்கு 'திருமலை' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார். அப்போதிருந்து, அவரது வாரிசுகள் தங்கள் பெயர்களுக்கு முன் 'திருமலை' என்ற பட்டத்தைச் சேர்த்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT