முகப்பு
தினமணி கதிர்

விலை உயர்ந்த அரண்மனை

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது, பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நிர்வாகத் தலைமையகமான பக்கிங்காம் அரண்மனை.

Updated On : 8 பிப்ரவரி 2026, 4:13 pm IST
பகிர்:

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் அமைந்துள்ளது, பிரிட்டிஷ் மன்னரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் நிர்வாகத் தலைமையகமான பக்கிங்காம் அரண்மனை. இதுதான் உலகின் மிக விலை உயர்ந்த கட்டடம். மொத்தக் கட்டடமும் 8,28,000 சதுர அடியில் அமைந்துள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.

இங்குள்ள தோட்டங்களில் ஒன்று 40 ஏக்கரில் அமைந்துள்ளது. லண்டனில் உள்ள மிகப் பெரிய தோட்டமும் அதுதான்.

1703-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1737 -இல் முடிக்கப்பட்ட இங்கு பக்கிங்காம் டியூக் குடியேறினார். இதனை வடிவமைத்துக் கட்டியவர் ஜான் நாஷ். திட்டமிட்டதை விட நிறைய செலவு செய்ததால், அவர் நீக்கப்பட்டார். பிறகு மற்றொரு வடிவமைப்பாளர் கட்டி முடித்தார்.

Advertisement

Advertisement

1761-இல் ஜார்ஜ் ஐஐஐ -ஆல் இந்த அரண்மனை விலைக்கு வாங்கப்பட்டது. ராணி விக்டோரியா இங்கு குடியேறிய பின், அதிகாரபூர்வ அரசு இல்லமாக மாறியது. 775 அறைகள் கொண்டது. நிகழ்ச்சிகளுக்காக தனியாக 19 பிரமாண்ட அரசு அறைகள் உள்ளன.

59 அரசர் மற்றும் விருந்தினர் படுக்கையறைகள்,188 பணியாளர்களின் படுக்கையறைகள், 92 அலுவலகங்கள், 78 குளியலறைகள், இரண்டு பெரிய தோட்டங்கள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், தபால் நிலையம், காவல் நிலையம் என அரண்மனை வளாகத்தினுள் பல வசதிகள் உள்ளன. 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனுள் பணிபுரிகின்றனர். அரண்மனை முதலில் 'பக்கிம்காம் ஹவுஸ்' என அழைக்கப்பட்டது.

சிம்மாசன அறை தனி. அது அரசு சார்ந்த அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் நடக்கும் இடம். அங்கு வேல்ஸ் இளவரசர், இளவரசி தங்கள் திருமணப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ராஜ குடும்பத்தினர் கோடை விடுமுறைக்காக ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் ஸ்காட்லாந்து சென்று தங்குவர். அந்தச் சமயத்தில் சுற்றுலாப் பயணியருக்கு அரண்மனையைச் சுற்றிப் பார்க்க அனுமதியுண்டு. ஆனால், சில இடங்களை மட்டுமே பார்க்க இயலும். ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் அந்த சுற்றுலாவை நடத்துகிறது.

அரண்மனை உள்ளே ஓவியங்கள், சிற்பங்கள், பிற அழகான பொருள்கள் உள்பட ஏராளமான தலை சிறந்த படைப்புகளைப் பார்க்கலாம். விக்டோரியா மகாராணியின் முடிசூட்டு விழாவின் பிரம்மாண்ட ஓவியம் மிகச் சிறப்பாக இருக்கும். சிம்மாசன அறையில் நுழையாமலேயே தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று அரச இருக்கைகளைக் கண்டு களிக்கலாம்.

அரண்மனையின் உச்சியில் ராயல் ஸ்டாண்டர்ட் கொடி பறந்தால், மன்னர் அரண்மனையில் இருக்கிறார் எனப் பொருள். யூனியன் ஜாக் கொடி பறந்தால், மன்னர் ஊரில் இல்லை எனப் பொருள். அரண்மனையில் சுற்றுலாப்பயணியர் பார்த்து ரசிக்கும் ஒரு விழா காவல் மாற்றும் நிகழ்ச்சி. இது பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே நடக்கும்.

இன்றைய பக்கிங்காம் அரண்மனையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

டாலரில் கூறுவதானால் 4.9 பில்லியன் டாலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments