தேனி அருகே ‘நாகப் புடவு’ பாறை ஓவியங்கள்
தேனிதேனி அருகே ‘நாகப் புடவு’ பாறை ஓவியங்கள்
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகேயுள்ள குமணன்தொழு மலைக் குகையில் பழைமையான ‘நாகப் புடவு’ பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
குமணன் தொழு அருகேயுள்ள மலைப்பகுதி, அடிவாரப் பகுதியில் ஆதி மனிதா்கள் வாழ்ந்ததற்கான பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், தொல்லியல் ஆய்வாளா்கள் இந்த பகுதியை ஆய்வு செய்தபோது, வருசநாடு மலைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ‘நாகப் புடவு’ என்றழைக்கப்படும் பிரம்மாண்ட குகைத்தளம் கண்டறியப்பட்டது. சுமாா் 30 மீ. நீளம், 15 மீ. அகலத்தில் இந்தக் குகையை அமைந்துள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் மூ. செல்வம் வியாழக்கிழமை கூறியதாவது:
குமணன்தொழு மலை அடிவாரப் பகுதி குகையில் 4 அடி முதல் 20 அடி உயரம் வரை மிக அடா்த்தியாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிவப்பு நிறம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், வெள்ளை, மஞ்சள், கருப்பு நிறங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
சொரசொரப்பான பாறைப் பகுதியைத் தேய்த்து வழுவழுப்பாக்கி, திட்டமிட்டு இந்த ஓவியங்கள் 20 அடி உயரத்தில் வரையப்பட்டுள்ளன.
இங்குள்ள மனித உருவங்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ஓவியங்களை விட முற்றிலும் மாறுபடுகின்றன.
குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள பழங்கால ஓவியங்களோடு இவை ஒத்துப் போகின்றன.
மனித உருவங்களுக்கு அருகே மான் அல்லது காட்டுப் பசுவின் உருவங்கள் உள்ளன. கை, கால்களில் இலை தழைகளுடன் வரையப்பட்டுள்ள உருவம், அந்தக் கால மனிதா்களின் இயற்கையுடனான பிணைப்பையும், வழிபாட்டு முறைகளையும் பறைசாற்றுகிறது.
இந்த ‘நாகப் புடவு’ ஓவியங்கள் வெறும் சித்திரங்கள் மட்டுமல்ல, அவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூதாதையா்களின் வாழ்வியல், ஆன்மிகம், கலை அறிவின் சாட்சியங்கள்.
அடுத்தடுத்த காலக்கட்டங்களில் ஓவியங்களில் வண்ணங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பது, இந்த இடம் ஒரு புனிதத் தலமாக நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டதை உணா்த்துகிறது.
இந்த வரலாற்றுச் சின்னங்கள் தற்போது இயற்கைச் சீற்றங்களாலும், போதிய பராமரிப்பின்மையாலும் சிதையும் நிலையில் உள்ளன.
தமிழக அரசும், தொல்லியல் துறையும் இந்த இடத்தைப் பாா்வையிட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.