தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாசனைத் திரவியங்கள் உடலுக்கு ஏற்றதா?

வாசனைத் திரவியங்கள் உடலுக்கு ஏற்றதா?

தினமணி செய்திச் சேவை

எனக்கு இரண்டு மகள்கள். இருவரும் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள். பலவிதமான வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக அதிக செலவு செய்யவும் தயங்குவதில்லை. இவை உடல்நலத்துக்குத் தீங்கானவையா? இதற்கு இயற்கை மாற்றுத் தீர்வுகள் உள்ளனவா?

-காந்தலட்சுமி, மதுக்கரை.

இன்றைய பெரும்பாலான வாசனைத் திரவியங்கள் (பெர்ஃப்யூம்ஸ்), நாற்றம் நீக்கும் தெளிப்பான்கள் (டியோடரன்ட்ஸ்), அறைக்காற்று நறுமணப் பொருள்கள் (ரூம் ரெஃப்ரஷனர்ஸ்) ஆகியவை செயற்கை ரசாயனங்களால் ( சிந்தடிக் கெமிக்கல்ஸ்) தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் அடங்கியுள்ள எத்தனால், தாலேட்டுகள், பராபென்ஸ், நறுமண நிலை நிறுத்திகள் (ஃபிக்ஷடிவ்ஸ்), பதனப் பொருள்கள் (பிரசர்வேட்டிவ்ஸ்) போன்றவை வாசனையை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்ய உதவுகின்றன. ஆனால், இந்த ரசாயனங்கள் தோல் வழியாகவும், மூச்சு வழியாகவும் உடலுக்குள் செல்வதால், நீண்ட காலப் பயன்பாட்டில் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், மூக்கு எரிச்சல், மூச்சுத் திணறல், அலர்ஜி, தோல் அரிப்பு, நிறமாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

வேறு சிலருக்கு மன அடிமைத்தன்மை (சைக்காலஜிக்கல் டிபென்டென்சி) ஏற்படுத்துகிறது. இதனால், வாசனை இல்லாமல் இருந்தால் மன அமைதி இல்லாமை, அதிகமாக வாசனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இது மன அடிமைப்பழக்கம், மருந்து அடிமைத்தன்மை போன்றது.

மூளைக்கு, மூக்கு வாசல் பகுதியாக இருப்பதால் மூக்கின் வழியாக நுழையும் வாசனைகள் மனதையும், நரம்புகளையும், ஹார்மோன் செயல்பாடுகளையும் நேரடியாகப் பாதிக்கின்றன. இதற்கு ஆயுர்வேதத்தில் பாதுகாப்பான வாசனை மாற்று வழிகள்:

1. இயற்கை பூ வாசனைகள்: மல்லிகை, ரோஜா, சம்பங்கி, துளசி - பின்னந்தலையில் கிளிப் வைத்து அணியலாம். இயற்கை வாசனைகள் மன அமைதியை அதிகரிக்கும்.

2. சந்தனம், சந்தனப் பொடியை நீரில் கலந்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இது பித்தத்தைக் குறைக்கும். மனதைக் குளிர்விக்கும்.

3. கஸ்தூரி, அகரு, சாம்பிராணி தூபம். ஆடையின் மீது புகையைச் செலுத்தலாம். நல்ல கிருமி நாசினியாகவும் பயன்படும்.

4. ஆயுர்வேத எண்ணெய் வாசனைகள்: சந்தனம், ரோஜா, லாவண்டர் (மிகக் குறைந்த அளவில் மட்டும்). நேரடியாக தோலில் அல்ல துணியில் சிறிது பர்ஃப்யூம் ஆசையைக் குறைக்க ஆயுர்வேத வழிமுறைகள்.

மனநலப் பராமரிப்பு: தினசரி தியானம், பிராணாயாமம் (அனுலோமவிலோமம்)

உணவுப் பழக்கம்: அதிக காரம், புளிப்பு தவிர்க்கவும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளைக் குறைக்கவும். அதிக பித்தம் - அதிக வாசனை ஆசை.

ஸ்நானம், லேபனம்: இளஞ் சூடான வெந்நீரில் குளித்தல். சந்தனம், அகில், குங்குமப்பூ, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் இவைகளின் கலவையை குளித்த பிறகு உடலில் பூசிக்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. வஸந்த ருது என்னும் பருவ காலங்களில் நம் முன்னோர் இதை வழக்கமாகக் கையாண்டு வந்தனர்.

மூக்கு சுத்தம்: நல்லெண்ணெய் அல்லது அணு தைலம் - காலையில் 2 சொட்டு. வாசனை அடிமைத்தன்மை குறையும்.

அழகு என்பது வாசனை அல்ல. உடல் - மன ஆரோக்கியத்தில் உள்ளது. இயற்கைக்கு மாறான வாசனை நச்சு. ஆயுர்வேதம் மெதுவாக ஆனால் நிலையான தீர்வை அளிக்கும். ஆயுர்வேத வழிமுறையைப் பின்பற்றி வாசனைக்கும் ஆரோக்கியத்துக்கும் சமநிலையை உருவாக்குவோம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 14

ஜன.1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

மேஷ ராசி நேயர்களே இந்த வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Astrology

பாமக அடையாளம் ராமதாஸ்: ஜி.கே.மணி பேட்டி

பிக் பாஸ் 9 : நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல தகுதியற்றவர் யார்?

SCROLL FOR NEXT