தினமணி கதிர்

தொன்மைச் சிறப்புமிக்க பரமேசுவரமங்கலம்

சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் புதுப்பட்டினம் அருகில், வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ. தொலையில் பல்லவ மன்னன் பெயரால் 'பரமேசுவரமங்கலம்' எனப்படும் ஊரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன.

கி.ஸ்ரீதரன்

கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் புதுப்பட்டினம் அருகில், வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ. தொலையில் பல்லவ மன்னன் பெயரால் 'பரமேசுவரமங்கலம்' எனப்படும் ஊரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன. இந்த ஊருக்கு அருகில் வாயலூர், வசவசமுத்திரம் போன்ற தொன்மைச் சிறப்புமிக்க ஊர்களும் அமைந்துள்ளன.

பல்லவ மன்னர்கள் மரபை கூறும் கல்வெட்டு உள்ள வாயலூர், 1, 2-ஆம் நூற்றாண்டுகளில் ரோமானிய நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு அகழாய்வில் சான்றுகள் கிடைத்துள்ளன. பாலாறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள வசவசமுத்திரம் என்ற ஊரை உள்ளடக்கியதே 'பரமேசுவரமங்கலம்' ஆகும்.

பெருமாள் கோயில் - 'வைகுண்டபெருமாள்':இங்குள்ள செளமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பெருமாள் காட்சி தருகிறார். அழகிய பல்லவர் காலத்திருமேனி, தலையில் கிரீட மகுடம். மேல்வலது கையில் பிரயோக சக்கரத்தைத் தாங்கியுள்ளார். அமர்ந்த நிலையில் காணப்படும் சிம்மத் தூண்கள் பல்லவர் காலக் கோயில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.

கோயிலுக்கு முன்புள்ள ஆழிக்கல் கல்வெட்டில் 1522-இல் விஜய நகர மன்னர் காலத்தில் சாளுவ நாயக்கனால் அளிக்கப் பெற்ற கொடை பற்றி குறிக்கிறது. பல்லவர் காலத் திருமேனிகள் இன்றும் வழிபடப்படுகிறது.

கைலாசநாதர் கோயில் - 'சைலேசுவரம்': பாலாற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், தற்பொழுது பிற்கால கலைப்பாணியுடன் திருப்பணி செய்யப் பெற்று, வழிபாட்டில் உள்ளது.

கிழக்கு நோக்கிய கோயிலின் மகா மண்டபத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த அழகிய திருமேனியாக கணபதி வழிபடப்படுகிறார். வாசலின் அருகில் உள்ள கற்பலகைக் கல்வெட்டில், பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் (865-906) 16-ஆவது ஆட்சி ஆண்டில் 'பரமேசுவரமங்கலம் சைலேசுவரம்' எனப்படும் இந்தக் கோயில் எழுந்தருளியுள்ள மகாதேவருக்கு வழிபாட்டிற்காக 11 கழஞ்சு பொன் இக்கோயில் கணப்பெருமக்களிடம் அளிக்கப்பட்டது. இக்கொடையானது மண்ணைக்குடி விழுப்பேரரையன் மகன் நந்தி நிறைமதி என்பவரால் அளிக்கப்பட்டது.

கல்வெட்டின் பின்புறத்தில் நிருபதுங்கவர்மனின் 15-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. 'வழிபடப் பெறும் கணபதி பட்டாரரைத் தண்டியக்கிழார் பாண்டிய கிரமவித்தனின் மனைவி நிறுவி, விளக்கு எரிப்பதற்காக 40 காடி நெல் அளித்தாள்' எனக் கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு 'சத்ருசிங்கப் பெருந்தச்சன்' என்ற சிற்பியால் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிறிய குன்றின் மீது கோயில் அமைந்துள்ளதால் 'சைலேசுவரம்' என அழைக்கப்பட்டது.

நத்தம் - செண்பகேசுவரர் கோயில்: பரமேசுவரமங்கலம் ஊரின் தென்மேற்கு பகுதியில் உடல்காரகுப்பம் என்ற நத்தம் பகுதியில் அமைந்துள்ள கோயில். கிழக்கு நோக்கிய கோயில், கோயில் முன்பாக உள்ள துவாரபாலகர் சிற்பங்கள், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட தூண்கள், சண்டிகேசுவரர் சிற்பம், நவகண்ட சிற்பங்கள் போன்றவற்றைக் காணும் பொழுது, பல்லவர் காலக் கோயில் என்பது தெரிகிறது.

நிருபதுங்கவர்மன் காலத்திலேயே கட்டப்பட்ட இந்தக் கோயில், சோழ மன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. பிற்காலத் திருப்பணிகளின்போது, கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கற்களைத் தலைகீழாக வைத்து கட்டியுள்ளதையும் காணலாம்.

இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள 1912-ஆம் ஆண்டு கல்வெட்டு அறிக்கையில் காணப்பட்ட கல்வெட்டுச் செய்திகளை அறியும்பொழுது, கோயிலின் வரலாற்றுச் சிறப்பை உணரமுடிகிறது.

முதலாம் இராசேந்திரன் (1012-1044) குலோத்துங்க சோழன் (1070-1120), மூன்றாம் இராசராச சோழன் (1216-1256), திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைக் கொண்டான், விஜயநகர அரசன் வீரகம்பண்ண உடையார் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

நிகரிலிசோழ சதுர்வேதிமங்லம்: முதலாம் இராசேந்திர சோழனின் 3,6,9-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

பரமேசுவரமங்கலம் என்ற ஊர் 'நிகரிலி சோழ சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டுள்ளது. இராசராசசோழனுக்கு 'நிகரிலி சோழன்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. எனவே, இம்மன்னன் பெயரால் இவ்வூர் சிறப்பித்து அழைக்கப்பட்டது.

இவ்வூர் சபையில் 12 உறுப்பினர்கள் அடங்கிய 'சம்வத்சர வாரியம்'குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தில் (ஐப்பசி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர் பணிகளை கவனிக்கும் இக்குழுவினர் 'ராஜேந்திர சோழன் சதுஸ்சாலி' என்று அழைக்கப்பட்ட மண்டபத்தில் கூடி விவாதித்துள்ளனர். கஞ்சரன்அய்யன் சூரியன் என்பவர் 'வகை செய்கின்ற'அலுவலராகப் பணியாற்றி உள்ளார்.

இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் செம்பூர்க்கோட்டத்தில் இருந்ததையும், இறைவன் வழிபாட்டிற்காக நெல் வழங்கப்பட்டதையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இக்கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்காக 90 ஆடுகளும், விளக்குத்தூணும் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னர், முன்பு தானமாக அளிக்கப்பட்ட விளக்குத் தூண் கல்வெட்டுப் பொறிப்புடன் கீழே விழுந்து கிடப்பதையும் காணமுடிகிறது. முன்மண்டபத்தில் காணப்படும் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு நிலவிற்பனையைப் பற்றி குறிப்பிடுகிறது.

சோழகுலச் சதுர்வேதிமங்லம்: இந்தக் கோயிலில் காணப்படும் மூன்றாம் இராசராசசோழனின் கல்வெட்டில் இவ்வூர் 'சோழகுலச் சதுர்வேதிமங்கலம்' எனப் பெயர் மாற்றம் பெறுகிறது. ஊர்சபை கோயிலுக்கு அளித்த நிலதானம் பற்றி ஒரு கல்வெட்டு கூறுகிறது. கோயிலுக்கு நந்தவனம் ஒன்றினை குலோத்துங்க சோழ காங்கேயராயன் என்பவன் அளித்துள்ளது கோயிலுக்கு முன்பாக கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள தூண்கள் எழுதப்பட்டுள்ளது.

மற்றொரு தூணில் காணும் கல்வெட்டில் அரசியர் தண்டிபிராட்டியார். வீரகோச மங்கலமுடையார், உடைய பிராட்டியார் ஆகியோர் கோயிலில் இருந்த மடைப்பள்ளி சிறப்பாக நடைபெறுவதற்கு 'மடைப்பள்ளிப்புறமாக' ஊரில் இருந்த தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கியதாகவும், அதில் கிடைத்த வருவாயில் சித்திரை விசு, ஐப்பசி விசு, மாசி மகம் போன்ற திருவிழாக்களை நடத்த தானம் அளித்ததாகவும், இந்த வழிபாடு இராசேந்திர சோழனுக்கும், தண்டி பிராட்டியார் நன்மைக்காகவும் அளிக்கப்பட்டதாகவும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கோயில் மண்டபத்தில் காணப்படும் திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மைக் கொண்டான் கல்வெட்டில் (மாறவர்மன் சுந்தரபாண்டியன்?) 'பழம்பட்டிணம் பெருமன்றத்தாழ்வார்' என்ற குறிப்பு காணப்படுகிறது. பரமேசுவரமங்கலம் ஒரு பழமையான, தொன்மையான ஊர் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

செண்பககேசுவரர் கோயில் கலைச்சிறப்பு: கோயில் சோழர் கால கட்டடக் கலை அமைப்புடன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. கருவறையில் ஏழு தேவக் கோட்டங்களில் விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஹரிஹரன் வடிவங்கள் காணப்படுகின்றன.

லிங்கோத்பவர் வடிவத்தில் பிரம்மா அன்னப் பறவை வடிவத்தில், பாதி மனித வடிவத்துடன் காணப்படுவது சிறப்பாக விளங்குகிறது. கருவறை விமானம் மூன்று தளங்களுடன் காட்சி தருகிறது. கருவறை, முன்மண்டபம், மகா மண்டபம் அமைப்புடன் விளங்குகிறது. மகாமண்டபத்தில் ராமர் வடிவங்கள், பைரவர், சூரியன் வடிவங்கள் வழிபடப்படுகின்றன. வாயிலை அடுத்து தெற்கு நோக்கி சுப்ரமணியர் சந்நிதியும், அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இக்கோயிலை தொல்லியல் துறையினர் அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது, முன்மண்டபத்தில் பைரவர் திருமேனிக்கு அருகில் சிறுபலகைச் சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பிரம்மா, சிவலிங்கம், சேட்டை, முருகன் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சிற்பங்கள் தொன்டை நாட்டில் பல இடங்களில் காணப்படுகின்றன. இது 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்தச் சிற்பத்தைப் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்த்தமண்டபத்தில் உத்திர கல்லில் 'இவ்வுத்திர கல்லிட்டான் ஸ்ரீ ராஜராஜதேவர் படைவான்னிவன்' என்று (11-ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது என்பதோடு, இது புதிய கண்டுபிடிப்பாகும்.

கோயிலுக்கு எதிரில் கிழக்கு நோக்கிய அழகிய நந்தியின் வடிவம் அமைந்துள்ளது. இதன் அருகில் துவாரபாலகர் சிற்பங்கள், விளக்குத்தூண்கள், (கல்வெட்டு பொறிக்கப்பட்டவை), தன் தலையை தானே அரிந்துகொள்ளும் நவகண்ட சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. கோயிலைச்சுற்றி திருச்சுற்றில் சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. எனவே இந்தக் கோயில் மிக உயர்ந்த வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.

(தொல்லியல்துறை - பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT