முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முழங்கால் வலிக்கு என்ன தீர்வு?

எனக்கு வயது 70. இரண்டு ஆண்டுகளாக இரண்டு முழங்காலிலும் வலி. உட்கார்ந்து சாப்பிட முடியாது. உட்கார்ந்துவிட்டால் குழந்தை மாதிரி கையை ஊன்றி தவழ்ந்து எழ வேண்டும்.

Updated On : 8 பிப்ரவரி, 2025 at 2:07 PM
பகிர்:

எனக்கு வயது 70. இரண்டு ஆண்டுகளாக இரண்டு முழங்காலிலும் வலி. உட்கார்ந்து சாப்பிட முடியாது. உட்கார்ந்துவிட்டால் குழந்தை மாதிரி கையை ஊன்றி தவழ்ந்து எழ வேண்டும். கழிவறையை உபயோகிக்க முடியாது.

வெஸ்டர்ஸ் டாய்லெட்தான் உபயோகிக்க முடியும். ஆர்த்தோ டாக்டரோ, '55 % எலும்பு தேய்ந்துவிட்டது.. மெழுகு ஒத்தடம் களிம்பு, மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே ஆண்டுக்கணக்கில் இருக்க வேண்டும்' என்கிறார். எனக்கு ஆயுர்வேத வைத்தியம் உதவிடுமா?

-பழ.ரவிசந்திரன், திருச்சி.

முழங்கால்களின் உட்புறச் சவ்வுகளை வலுப்படுத்தும் எந்தவொரு உள்மருந்தும் வயிறு மற்றும் குடலில் ஏற்படும் செரிமான சக்திக்கு உகந்தவாறே விரைவாக எடுத்துச் செல்லப்படுவதையும், தாமதமாகச் சென்றடையும் தன்மையையும் தீர்மானிக்கச் செய்கின்றன. மேலும், வயோதிகத்தில் குடலில் வாயுவின் சஞ்சாரமானது இயற்கையிலேயே கூடும் தன்மையுடையதால், பசியின் நிலையானது சில நேரங்களில் நன்றாகவும், சில நேரங்களில் தடுமாறும் தன்மையாகவும் மாறிவிடும்.

அதனால் உங்களுடைய விஷயத்தில், பசியை சீராகவும், குடல் காற்று மற்றும் மலத்தை இளக்கி வெளியேற்றும் குணங்களைக் கொண்ட மருந்தைப் பயன்படுத்தி, அதன்பிறகு முழங்கால் உட்புறச் சவ்வுகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் தேய்மானத்தைச் சீராக்கும் மருந்துகளைப் பயன்படுத்தவும் உட்புற மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டும்.

'கந்தர்வஹஸ்தாதி' எனும் விளக்கெண்ணெய் மூலிகை மருந்து விற்பனையிலுள்ளது. அதை சுமார் பத்து மில்லி வீதம் ஒரு நாளில் மூன்று முறை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக, மூன்று வாரங்களுக்குச் சாப்பிடவும். இதனால் குடல் உட்புற வழுவழுப்பு மற்றும் குடலின் இயற்கையான அசைவின் நிகழ்வுகள் கூடும்.

பசி சீராகும். மலம் நன்றாக இளகி வெளியேறும். இந்த மூன்று வாரங்களிலும் நீங்கள் எளிதில் செரிமானமாகும் கஞ்சி வகைகள், மிளகு சீரக சரம், புழுங்கலரிசி சாதம், நெய், மோர், வெந்த கறிகாய்கள் போன்றவற்றை சூடாக இருக்கும்போதே சாப்பிட்டுவிட வேண்டும்.

அதன்பிறகு, 'தசமூலஹரீதகி' எனும் லேஹிய மருந்தை காலை, இரவு என இரு வேளை உணவிற்கு ஒரு மணி நேரம் முன் நக்கிச் சாப்பிட, முழங்கால்களின் உட்புற சவ்வுகளின் மேல் ஏதேனும் தேவையற்ற நீர்ப்பசை ஒட்டியிருந்தால், அவை நெகிழ்ந்து வெளியேறி, வரப்போகும் மருந்துகளை முழு அளவில் ஏற்றுகொள்ளும் தன்மைக்குச் சவ்வுகளைத் தயாராக்கிவிடும்.

இனி உட்புறம் மற்றும் வெளிப்புறம் என சிகிச்சைகளை உங்கள் உடல்நிலைக்குத் தக்கவாறு, நாடிப் பிடித்துப் பார்த்து உடல் வலுவுக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும். ஆயினும், பொதுவாக சில மருந்துகளை இங்கே குறிப்பிடலாம்.

'வலியராஸ் நாதிகஷாயம்', 'க்ஷீரபலா101' சொட்டு மருந்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இவற்றின் அளவு என்பது மருத்துவரால் தீர்மானிக்க வேண்டிய விஷயமாகும்.

வெளிப்புறமாக, பிண்ட தைலம், முரிவெண்ணா எனும் மூலிகைத்தைலம் ஆகியவற்றை சம அளவில் கலந்து, இளஞ்சூடாக பஞ்சில் முக்கி எடுத்து, முட்டியில் வைத்துக் கட்டிக் கொள்வது நல்லதொரு சிகிச்சை முறையாகும்.

சுமார் இரண்டு- மூன்று மாதங்களுக்கு இந்தச் சிகிச்சை முறைகளுக்குப் பயன்படுத்தலாம். அதன்பிறகு, முட்டியின் மீது 'நவரக்கிழி' எனும் சித்தாமுட்டிவேர்க்கஷாயத்தில் பாலுடன் சேர்த்து வேகவைக்கப்பட்ட நவரஅரிசியை முட்டியில் தடவி விடும் சிகிச்சையால், நீங்கள் பயனடையலாம்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சை முறை பிரபலமாகச் செய்யப்படுகிறது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

முழு கட்டுரையைப் படிக்க →