முகப்பு
தினமணி கதிர்

பசு விலை ரூ.40 கோடி...

பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெராஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 'வியாட்டினா19' பசு 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2025 at 12:02 AM
பகிர்:

பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெராஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 'வியாட்டினா19' பசு 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதன் பூர்விகம் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட நெல்லூர். இதன் எடை 1,101 கிலோ. இதர நெல்லூர் இன பசுக்களைவிட இரண்டு மடங்கு எடை கொண்டுள்ளது.

'வியாட்டினா19'இன் வயது 53 மாதங்கள். வெள்ளை வெளேர் தோல் அமைப்பு கொண்டு, தனித்துவமான தனது தோற்றத்தால், நிறத்தால், எடையால், விலையால் சர்வதேச கவனத்தை இந்தப் பசு கவர்ந்துள்ளது. ஆய்வின்போது, அசாதாரண மரபணு அமைப்பைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இனப் பெருக்கத்துக்காக மிகவும் விரும்பி வாங்கப்படும் இனமாக 'வியாட்டினா19' ரக பசுக்கள் மாறியுள்ளன.

Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் ஃபோர்ட் வொர்த்தில் நடைபெற்ற மதிப்புமிக்க 'சாம்பியன் ஆஃப் தி வேர்ல்ட்' போட்டியில் 'மிஸ் சௌத் அமெரிக்கா' பட்டத்தையும் 'வியாட்டினா19' வென்ற போது அதன் அழகும் பொலிவும் வலிமையும் மக்களால் கொண்டாடப்பட்டது. பசுக்களுக்கு அழகிப் போட்டி நடத்துவது புதிய செய்தி.

'வியாட்டினா19' வின் வித்தியாசமான தசை அமைப்பு, அரிய மரபியல் மற்றும் ஒட்டுமொத்த அசத்தலான தோற்றம் சர்வதேச போட்டியில் அதன் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

இந்த வகை பசுக்கள் பிரேசிலின் கால்நடைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பிரேசிலின் பசுக்களில் குறைந்தது 80 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த கிளை இனங்களாகும். 'வியாட்டினா19' -இன் விதிவிலக்கான, வித்தியாசமான மரபு அணு அமைப்பு, இனப்பெருக்க திட்டங்களுக்கு உலகளவில் அதிக தேவையை உருவாக்கியுள்ளது.

நெல்லூர் பசு இனம் ஆந்திரத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்திலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நெல்லூர் பசுக்களை பிரேசில் வளர்த்துவருகிறது. இந்த இனம் அர்ஜென்டினா, பராகுவே, வெனிசுலா, மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.