மொட்டை மாடியில் இதமான காற்று வீச, டீ குடித்தபடி பாபு சேரில் அமர்ந்து செடிகளைப் பார்த்து ரசித்தார். தோட்டம் முழுக்க பல தொட்டிகளில் வாடாமல்லி செடிகள் பூத்துக் குலுங்கியதைப் பார்க்க பாபுவுக்கு மனம் உற்சாகமானது. மற்ற செடியில் பூக்கள் சில நாள்களிலேயே வாடி வதங்கிவிடும். ஆனால் வாடாமல்லி ஒரு மாதம் ஆனாலும் அதே புத்துணர்ச்சியுடன் செடியில் பூத்திருக்கும்.
இதற்கு 'வாடாமல்லி' என்று பெயர் வைத்த முன்னோர்களை எண்ணி பாபு மகிழ்ந்தார். அப்போது பாபுவின் மனசுக்குள் இருந்த கால இயந்திரம், அவரை ஒரே நொடியில் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் தள்ளியது.
அது தள்ளிய இடம் திருச்சி ரயில்வே காலனி. நான்கு வீடுகள் ஒரு கட்டடமாகவும், அடுத்த நான்கு வீடுகள் இடையில் 20 அடி இடைவெளி விட்டும் கட்டப்பட்ட காலனி அது. ஒன்றாம் தெருவிலிருந்து 18 ஆம் தெரு வரை ஏராளமான வீடுகள். ஒன்பதாம் தெருவில் எதிரெதிர் வீட்டில்தான் பாபுவும் மல்லிகாவும் வசித்து வந்தனர்.
பாபுவுக்கு இரண்டு அக்காக்கள் போலவே, மல்லிகாவுக்கும் இரண்டு அக்காக்கள். இருவரும் கடைக்குட்டிகள். பாபு தன்னோடு படிக்கும் மல்லிகா வீட்டில்தான் இருப்பான். தினமும் சேர்ந்து பள்ளிக்கூடம் போவார்கள். காலனிக்கு அருகிலேயே இருந்ததால் அந்த கோனர்பள்ளிக்கூடத்தில்தான் காலனியில் இருந்த குழந்தைகள் படித்தனர். காலனியில் உள்ள பிள்ளையார் கோயிலை ஒட்டி செல்லும் தார் சாலையைத் தாண்டி சற்று பெரியதான ரயில்வே குடியிருப்புகள் உண்டு. அந்த வீடுகள் பெரியதாய் இருப்பதால் அதற்கு 'பெரிய காலனி' என்றும், பாபு, மல்லிகா வசித்த வீடுகளில் சிறியதாய் ஒரு அறை வீடுகளாய் இருந்ததால் அதற்கு 'சின்ன காலனி' என்றும் பெயர்.
ஒரு மழைக்காலத்தில் பாபுவும் மல்லிகாவும் பள்ளிக்கூடம் விட்டு திரும்பும் வழியில் ஒரு குப்பைமேட்டில் வளர்ந்து இரண்டு பூக்களுடன் நின்று கொண்டிருந்த வாடாமல்லியை பாபு பார்த்தான். 'அந்த செடியை பிடுங்கி நம்ம வீட்டுக்கு எடுத்துப் போலாமா?'' என்று பாபு சொல்ல, இருவரும் சேர்ந்து வாடாமல்லி செடியைப் பிடுங்கிக் கொண்டு அருகில் இருந்த ஒரு தக்காளிச் செடியையும் எடுத்துகொண்டு வீடு வந்தனர்.
பாபு மிகுந்த சிரத்தையோடு அந்தச் செடியை நட்டு தண்ணீர் விட்டு வளர்த்து அது பூத்துக் குலுங்கியது. பின்வந்த நாள்களில் காய்ந்துபோன பூக்களை பறித்து தூவி ஏராளமான வாடாமல்லி செடி இருவர் வீட்டுத் தோட்டத்திலும் வளர்ந்திருந்தது. தன் மகளுக்கு துணை என்ற வகையில் மல்லிகாவின் அம்மாவும் பாபுவிடம் அன்பு பாராட்டினார். எதிரெதிர் வீடுகள் என்பதால், அவ்வப்போது குழம்பு, ரசம், பலகாரங்கள் பரிமாற்றமும் நடப்பதுண்டு.
இருவரும் ஆறாம் வகுப்பு படிக்கையில் மல்லிகாவின் அப்பாவுக்கு பதவி உயர்வு கிடைத்ததால், அவர் பெரிய காலனிக்கு குடியேறினார். அவர்கள் இருந்த வீடு இவர்கள் இருந்த இடத்திலிருந்து பத்து தெருக்கள் தள்ளியிருந்தது. அந்த வீட்டுக்கு மல்லிகா குடிபோன பிறகு பாபு பல முறை அங்கு போய் வந்தபடிதான் இருந்தான். ஆனால் எட்டாம் வகுப்பு முடியும் தருவாயில் மல்லிகா பத்து நாள்கள் பள்ளிக்
கூடம் வரவில்லை. பின்னர், பள்ளிக்கூடம் வந்த மல்லிகா தாவணி போட்டிருந்தாள். பெரிதாகப் பேசும் சந்தர்ப்பம் இல்லை என்றாலும், ஏதாவது பேசினால் குறைவாகவே மல்லிகா பதில் சொல்வதை கவனித்தான் பாபு.
மல்லிகாவின் அப்பாவுக்கு அவர்கள் சொந்த ஊரான மதுரைக்கு மாற்றல் கிடைத்து இருப்பதாகவும் அவர்கள் திருச்சியை காலி பண்ணிவிட்டு மதுரை போகப் போவதாகவும் அம்மா பக்கத்து வீட்டுப் பெண்களிடம் பேசிக் கொண்டிருப்பதை பாபு கேட்டான்.
ஒரு நாள் பாபுவை அழைத்த அம்மா, 'டேய் பாபு, மல்லிகா அத்தை வீட்டுக்குப் போய் அவங்க எப்ப வீடு காலி பண்ணிட்டு மதுரைக்கு போறாங்கன்னு கேட்டுகிட்டு வா?'' என்று அனுப்பினார். சைக்கிள் எடுத்துகொண்டு மல்லிகா வீட்டுக்குச் சென்ற பாபு, சைக்கிளை விட்டு இறங்காமலேயே வாசலில் நின்றபடி, 'அத்தை'' என்று குரல் கொடுத்தான்.
மல்லிகா அத்தை இவனோடு பேசிக்கொண்டு இருக்கும்போதே பின்பக்க ஜன்னலில் ஒரு ஜோடி விழிகள் இவனைப் பார்ப்பதை பாபு பார்த்தான். அது நிச்சயமாக மல்லிகாதான் என்று அவனுக்குத் தெரியும். 'ஏன் வெளியே வரவில்லை' என்று யோசித்தபடியே அத்தையிடம் பேசிவிட்டு கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை ஜன்னலைத் திரும்பி பார்த்தான். அந்த விழிகள் அவனை உற்றுப் பார்ப்பது பாபுவுக்கு தெரிந்தது. முதல்முறையாக பாபு ஏதோ சற்று வித்தியாசமாக உணர்ந்தான்.
அம்மாவிடம் வந்து அந்தத் தகவலைச் சொல்லிட்டு பாபு வழக்கப்படி தன் நண்பர்களோடு விளையாட வெளியேறினான். இந்த இடைப்பட்ட ஒரு வாரத்தில் பலமுறை மல்லிகாவை நேருக்கு நேர் பார்த்தபோதும் முன்னெப்போதும் இல்லாத ஒரு சங்கோஜம் தன் மனதில் விளைந்திருப்பதை பாபு உணர்ந்தான். மல்லிகா பார்வையிலும் ஒரு வித்தியாசம் தெரிந்தது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
'மல்லிகா ஊருக்குப் போவதற்குள் ஏதாவது பேச வேண்டும்' என்று நினைத்த பாபு என்ன பேசுவது என்று தெரியாமல் யோசித்தபடியே இருந்தான். காலனி ஏரியாவில் சைக்கிளில் செல்லும் தருணங்களில் சில முறை மல்லிகாவைத் தாண்டி போனபோதும், , பேச வேண்டும் என்ற ஆசை மனதில் விளைந்தது. என்னவென்று தெரியாத உணர்வோடு பாபு கடந்து போயிருந்தான்.
மல்லிகா ஊரைவிட்டு கிளம்புவதற்கு ஒருநாள் முன்னதாக, பாபு சைக்கிளில் செல்லும்போது பிள்ளையார் கோயிலை விட்டு வெளியே வந்த மல்லிகா சட்டென்று, 'டேய் பாபு நில்லுடா'' என்று குரல் கொடுத்தாள். அதிர்ச்சியுடன் நின்ற பாபுவை பார்த்து, 'நாளைக்கு இந்த ஊரை விட்டு போகிறோம். உன்னையெல்லாம் விட்டுட்டு போறதை நினைச்சா அழுகை அழுகையாக வருது'' என்றாள். 'எனக்கும்தான்'' என்ற பாபு. கலங்கியிருந்த மல்லிகா கண்களைப் பார்க்கத் தைரியமின்றி தவித்தான்.
திருச்சியைவிட்டு போன மல்லிகா குடும்பம் பல வருடங்களுக்கு தொடர்பில்லாமல் இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மல்லிகாவின் மூத்த அக்காவுக்கு திருமணம் என்ற அழைப்பிதழ் வந்தது. அந்தத் தேதியில் பாபு வீட்டில் இன்னொரு திருமண விழா இருந்ததால், பாபுவின் அம்மா, அப்பா பாபுவை அந்த கல்யாணத்துக்கு மதுரைக்கு போய் வருமாறு கூறினர். பாபு படித்து முடித்து வேலையில்லாமல் இருந்த காலம் அது. மகிழ்ச்சியோடு மதுரைக்குப் புறப்பட்டு போனான் பாபு. விடியற்காலை முகூர்த்தம் என்பதால் முதல் நாளே கிளம்பினான்.
பாபுவை பார்த்த மல்லிகா குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காலனியில் ஒன்றாக வாழ்ந்த ஒவ்வொரு குடும்பங்களைப் பற்றியும் பாபுவிடம் கேட்டு விசாரித்தனர்.
மறுநாள் கல்யாணத்துக்கான வேலைகளை பாபு, அந்த வீட்டு மனிதர்களுடன் இணைந்து செய்தான். ஏற்கெனவே பலர் திருச்சி வீட்டுக்கு வந்து போன உறவினர்கள் என்பதால் எல்லோரும் பாபுவை அடையாளம் கண்டுகொண்டனர். கல்யாணத்துக்கு வந்த பாபுவின் கண்கள் முதலில் தேடியது மல்லிகாவைதான். வெளியே சென்றிருந்த மல்லிகா திரும்பி வந்தபோது, பாபுவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. நெடுநெடுவென வளர்ந்து அழகிய மை தீட்டப்பட்ட கண்களோடு மல்லிகா காணப்பட்டதை கண்டு பாபு நெஞ்சம் படபடத்தது.
நர்சிங் படித்திருப்பதால் அரசுப் பணி கிடைக்கும் என்று மல்லிகா நம்பிக்கையுடன் பேசினாள். கல்யாண மண்டபத்தை விட்டு கிளம்பிய பாபுவை சந்தடி சாக்கில் பின்தொடர்ந்து வந்த மல்லிகா, சற்று தொலைவு வந்ததும் பாபுவை கூப்பிட்டாள்.
'என்ன பாபு, நீ பாட்டுக்கு கிளம்பிட்ட எனக்கு உன்கிட்ட பேச வேண்டும்.''
'ஆமாம் மல்லிகா.. நான் கூட உன்னிடம் ஏதேதோ பேச வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் அதைப் பேச ஆசை இருந்தும் மனதில் தைரியம் இல்லாமல் கிளம்புகிறேன்.''
முகம் சிவந்து நாணத்துடன் பாபுவை பார்த்த மல்லிகா, 'சரி இப்பவாவது சொல்லிவிட்டு போடா?'' என்றாள்.
'என்னத்தை சொல்லுறது மல்லிகா, மனசில் உள்ள ஆசையெல்லாம் சொல்ல முடியுமா? அல்லது மனசில் உள்ள ஆசையெல்லாம் நடக்கத்தான் போகுதா?''
'என்ன பாபு இப்படி பேசுறே... நான் எவ்வளவு ஆசையுடன் வந்தேன். உன்னிடம் அதை சொல்லிவிட வேண்டும்.''
'அதேதான் எனக்கும் மல்லிகா என்னாலும் சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.. முதலில் நீ சொல்ல வந்ததை சொல்.''
'நீ என்ன சொல்ல வந்தியோ? அதையேதான் நானும் சொல்ல வந்தேன் பாபு.''
'நான் சொல்ல வந்தது நிச்சயமாக நீ சொல்ல வந்தது இல்லை.''
'ஏன் பாபு இப்படி பேசுறே..''
'மல்லிகா அவரவர்க்கு ஆயிரம் ஆசைகள் இருக்கலாம். நிஜம் என்றும் எதார்த்தம் என்றும் ஒன்று இருக்கிறது அல்லவா? அது நிழல் போல நம்மை தொடர்ந்து வரும்..''
'இப்ப என்னதான் சொல்றே பாபு..''
'இங்க பாரு மல்லிகா... உன் ஆசையும் என் ஆசையும் ஒன்னுதான். இதை வாய்விட்டுதான் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் நீயே யோசி... இன்னும் எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இரண்டு அக்காக்கள் கல்யாணத்துக்கு காத்திருக்கிறார்கள். உங்கள் வீட்டிலே உன்னுடைய மூத்த அக்காவுக்கு இன்றுதான் கல்யாணம் ஆயிற்று.
பெண் பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் எப்படியாவது பெற்றவர்கள் கல்யாணம் முடித்து விடுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு வீட்டு கடமைகள் காத்துக் கிடக்கு. அதை தாண்டி வெளியே வந்தோம் என்றால் குடும்பத்தையும் சமூகத்தையும் ஒட்டுமொத்தமா எதிர்த்தே, ஏதாவது செய்ய முடியும். அப்படி செய்யக் கூடிய அளவுக்கு நமக்கு வலுவில்லை. இதையெல்லாம் மீறி நாம் நம் விருப்பப்படி வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினால் அது பெரும் குழப்பத்தைதான் உண்டாக்கும்.
காலம் காட்டிய திசையில் போக வேண்டியதுதான். நாம் ஒருவரையொருவர் நேசித்து அன்பு கொண்டு வளர்ந்தது உண்மை என்றால் இதற்கு மேல் இதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதுதான் நல்லது.. கொஞ்சம் அமைதியாக இரு. மனதைத் திடமாக வைத்துக்கொள். நிச்சயம் வாழ்க்கை உனக்கு ஒரு நல்ல வழிகாட்டும். என் எதிர்காலம்தான் பெரிய கேள்விக்குறியா இருக்கு. வேலை கெடைக்கறது குதிரை கொம்பா இருக்கு, பார்ப்போம் மல்லிகா'' என்று கூறியபடி கையசைத்து விடை பெற்றான் பாபு.
பார்வையில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்த மல்லிகா கண்களைத் துடைத்தபடி மண்டபத்தை நோக்கிப் போனாள்.
அடுத்த சில வருடங்களில் பாபுவின் அப்பாவுக்கும் உத்தியோக மாற்றம் வந்து காட்பாடிக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு மல்லிகா குடும்பத்தோடு இருந்த தொடர்பு முற்றிலும் அறுபட்டு போனது. கால ஓட்டத்தில் எப்போதாவது மின்னல் போல மல்லிகா பற்றிய நினைவு பாபுவுக்கு வந்து போகும். ஒரு நல்ல வேலை கிடைத்து அக்காக்களின் கல்யாணம் முடித்து, முப்பது வயதுக்கு மேல்தான் பாபுவுக்கு கல்யாணம் ஆனது.
மொட்டை மாடியில் வாடாமல்லி பூக்கள் அழகில் மயங்கி பழைய நினைவுகளில் மூழ்கிப் போன பாபுவுக்கு சட்டென்று உணர்ச்சி வந்து மணியைப் பார்த்தான். மணி 7.12 ஆகி இருந்தது. தன் மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வரும் நேரம் என்பது நினைவுக்கு வர அவசரமாய் மாடியை விட்டு கீழே இறங்கினார் பாபு. அந்த வாரம் எங்கோ விற்றதாகக் கூறி ஒரு அழகிய பீங்கான் தொட்டியை வாங்கி வந்து ஒரு கொத்து பூக்களுடன் இருந்த வாடாமல்லி செடியை எடுத்து நட்டு வைத்தார் பாபு. அதை பால்கனியில் வெயில் பட்டும்படாமலும் உள்ள இடத்தில் பார்க்க ஏதுவாக வைத்துவிட்டு எட்ட நின்று அதை பார்த்துப் பார்த்து ரசித்தார் பாபு.
அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஒரு வெள்ளிக்கிழமை இரவு பாபுவின் அலுவலக நண்பர் ஒருவர் போன் செய்து, 'ஆஸ்பத்திரியில் இருக்கும் ராஜநாயகத்தை பார்க்கப் போகலாம்'' என்றார். ஹார்ட் அட்டாக் வந்து சென்னை ஜி.ஹெச்சில் ஆபரேஷன் செய்திருக்கும் ராஜநாயகத்தை பார்க்க வேண்டிய வேலை பாக்கி இருப்பது பாபுவுக்கு நினைவில் இருந்தது. தன் நண்பன் கேட்டதும், 'மறுநாள் சனிக்கிழமை போகலாம்'' என்று சொன்னார் பாபு. ஆனால் அவர் வேறு வேலை இருப்பதாகவும் தன்னால், ஞாயிற்றுக்கிழமைதான் வர முடியும் என்று சொன்னார். ஆனாலும் பாபுவுக்கு தள்ளிப் போடாமல் உடனே போய் பார்ப்பது நலம் என்று தோன்றியதால். தான் சனிக்கிழமை போய் பார்த்து வருவதாக அவரிடம் சொன்னார்.
அடுத்த நாள் சனிக்கிழமை. சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாபுவுக்கு அங்கிருந்த பெரும் கூட்டத்தைக் கண்டு திகைப்பாக இருந்தது. இதய அறுவைச் சிகிச்சை நடக்கும் இடம் எது என்று தேடி ஒவ்வொருவராக விசாரித்து ஒரு வழியாக அந்த வார்டுக்கு வந்து சேர்ந்தார்.
ராஜநாயகத்தை பார்த்துவிட்டு நர்சுகள் அறையைத் தாண்டி வெளியே வந்த பாபு சற்று திரும்பினார். உள்ளே இருந்து வெளியே வந்த நர்ஸ், பாபுவை பார்த்து, 'என்ன வேண்டும்'' என்றார். 'இல்ல, உள்ளே அந்த அலமாரி பக்கத்தில் அமர்ந்திருக்கும் நர்ஸ் பெயர் மல்லிகாவா'' என்றார். 'ஆமா சார்.. , அவங்க நர்ஸ் இல்ல... மதுரையிலிருந்து ட்ரெய்னிங் வந்து இருக்கும் மேட்ரன்'' என்றார் அந்தப் பெண்மணி.
பாபுவுக்கு உடல் எங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற புது உணர்வு பிறந்து, 'நான் அந்த மேடம்கிட்ட பேச வேண்டும்'' என்றார். 'இருங்க சார்'' என்றபடி உள்ளே போன நர்ஸ், 'சிஸ்டர் உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்றாரு?'' என்று பாபுவை கை காட்டினார். சட்டென்று நிமிர்ந்து பார்த்த அந்த நர்ஸ், 'யாரு'' என்றபடி அவசரமாய் எழுந்து பாபுவை நோக்கி வந்தார்.
'யாரு நீங்க... பாபு போல இருக்கே'' என்றபடி அருகில் வந்த மல்லிகாவிடம், 'ஆமாம்'' என்றார். இருவர் முகத்திலும் அன்பும் ஆர்வமும் பொங்கி வழிந்தது.
'டேய் பாபு, எப்படிடா இருக்க, நேத்து ராத்திரி கூட இத்தேப் பெரிய நகரத்தில் நீ எங்க இருக்கியோ, எப்படி இருக்கியோன்னு நினைச்சுக்கிட்டேதான் தூங்கிப் போனேன். வா. வா...பாபு'' என்று சொல்லிய மல்லிகா, உடன் இருப்பவர்களை நோக்கி, 'சிஸ்டர்.. இங்க வாங்களேன், இவர் மிஸ்டர் பாபு. நானும் இவரும் ஒன்னாம் கிளாஸ்ல இருந்து எட்டாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம்'' என்று சொல்லவும் அவர்கள் பாபுவுக்கு வணக்கம் சொல்லி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
'பாபு எனக்கு இன்னும் இரண்டு வருஷம்தான் சர்வீஸ் இருக்கு, ரிட்டயர் ஆவதற்கு. இப்பதான் மேட்ரன் ப்ரோமோஷன் வந்தது. அதுக்கு ஒரு பத்து நாள் ட்ரெயினிங்குக்காக இந்த மெட்ராஸ் ஜி.ஹெஃச்சுக்கு வந்து இருக்கேன். வந்த இடத்துல இப்படி ஒரு அதிசயம் நடக்கும்னு நான் நினைச்சே பார்க்கல... வா பாபு... வெளியே போய் கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து பேசலாம். எனக்கும் டுட்டி முடிஞ்சிருச்சு. ரூமுக்கு போய் என்ன பண்றதுன்னுதான் இங்கேயே உட்கார்ந்திருந்தேன். வா வா போலாம்'' என்றபடி பாபுவை கையைப் பிடித்து இழுத்தபடி நடந்தாள் மல்லிகா.
'கொஞ்சம் இரு மல்லிகா, அந்த 26 ஆவது பெட்டில உள்ள என் நண்பர் ராஜநாயகத்தை உனக்கு அறிமுகப்படுத்துறேன். அவரைப் பாக்கத்தான் நான் இங்கே வந்தேன். வந்த இடத்துல என் அதிர்ஷ்டம் உன்னையை பார்த்துட்டேன்'' என்றபடி 26 ஆவது பெட்டை நோக்கி நடந்தார் பாபு.
ராஜநாயகத்தை நோக்கி, 'டேய் இந்த அம்மாதான் இங்கே மேட்ரன்'' என்று அறிமுகப்படுத்தவும், அங்கிருந்த கேஸ் சீட்டுகளை ஒரு முறை பார்த்த மல்லிகா, 'சார் ஆபரேஷன் முடிஞ்சு அஞ்சு நாளாச்சு, புண் நல்லா ஆறிடுச்சு... மத்த பேராமீட்டரும் நல்லபடியா இருக்கு.. இன்னும் ரெண்டு நாள்ல உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாதீங்க, உடம்ப பாத்துக்கோங்க'' என்றாள். 'சரிங்க சிஸ்டர்'' என்று ராஜநாயகம் கை கூப்பினார்.
பின்னர் இருவரும் இதய அறுவைச் சிகிச்சை வார்டை விட்டு விட்டு வெளியே வந்தனர். வெளியே வரும்போது மல்லிகா, 'இங்க பாரு பாபு இப்பெல்லாம் இதய நோயைக் கண்டு பயப்படவே வேணாம். ஏன்னா அருமையான மருந்து மாத்திரைகள் கண்டுபிடித்து விட்டார்கள். எனவே, இதயத்தில் கோளாறு என்றால் பயப்பட வேண்டியதில்லை'' என்றாள்.
அந்த ஒரு நிமிடம் நடையை நிறுத்தி மல்லிகாவை பார்த்த பாபு, 'இதய நோயைக் கண்டு பயப்பட வேண்டாம். சரி, ஆனால் உடைந்த இதயங்களை ஒட்ட வைக்க முடியுமா மல்லிகா..''என்றான். பாபுவின் கைகளை இருக்கமாய் பிடித்த மல்லிகா, 'ஏன்டா இத்தனை வருஷமாயும் எதையும் நீ மறக்கலையா... இங்க வா காத்தாட உட்காருவோம்'' என்று அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
'நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலியே மல்லிகா'' என்றான் பாபு.
'இங்க பாருடா பாபு, எங்க அக்கா கல்யாணத்தப்ப நீ என்ன சொன்னன்னு நினைச்சுப் பாரு. நம் ஆசை வேற, எதார்த்தம் வேறன்னு சொன்னேல்ல... இத்தனை வருஷமும் நான் அதை சரியா புரிஞ்சுகிட்டதுனால நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கேன். உனக்கேதான் தெரியுமே... உன்னோட ரெண்டு அக்காக்கு கல்யாணம் முடிஞ்சு, உனக்கு ஒரு வேலை கிடைச்சு, என் இரண்டு அக்காளுங்க அவங்க கல்யாணம் முடிஞ்சு, நமக்கு கல்யாணமாகியிருந்தா நான் அவ்வையாராகி இருப்பேன்.
ஆனா நீ தெளிவா சிந்திச்சு என் உணர்ச்சிகளுக்கு ஒரு சரியான வழிகாட்டியாக இருந்தே... இன்னைக்கு பாரு எத்தனையோ வருஷம் கழிச்சு சந்திக்கிறோம். மனசுல நம்ம பள்ளிக்கூட காலத்துல இருந்த அதே உணர்வும் மகிழ்ச்சியுமா இருக்கு. நான் என் புருஷன், மகனோட எங்கையோ வாழ்ந்துகிட்டு இருக்கேன். நீ இந்த பெரிய பட்டணத்தில் ஒரு மூலையில் உன் குடும்பத்தோட வாழ்ந்துகிட்டு இருக்க. எங்க அக்கா கல்யாணத்தப்ப நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி, நம்ம ரெண்டு குடும்பங்களை எல்லாம் மீறி, நாம கல்யாணம் பண்ணி இருந்தோம்னா நிம்மதியா வாழ்ந்து இருப்போம்ன்னு நினைக்கிறியா? நிச்சயமா இருக்காது. அதனால பாபு எது அமைந்ததோ அதை ஏத்துக்கிட்டு வாழறோம் பாரு, அதுதான் சரி'' என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள் மல்லிகா.
'எல்லாம் சரிதான் மல்லிகா, ஆனால் என்னால எதையும் மறக்க முடியலை.''
'கரெக்ட்தான் பாபு. எதையும் மறக்காதே... ஒன்னாம் கிளாஸ்ல இருந்து சேர்ந்து படித்ததையும், தினமும் பையை தூக்கிக்கிட்டு பள்ளிக்கூடம் போனதையும், பள்ளிக்கூட வாசல்ல அந்த பாட்டிகிட்ட ஜவ்வுமுட்டாய் வாங்கித் தின்னதையும், பள்ளிக்கூடம் விட்டு வரப்ப நீ வாடாமல்லி செடியை எடுத்துக்க, நான் தக்காளி செடியை எடுத்துட்டு வந்து, நட்டு வளர்த்ததுன்னு எதையும் மறக்கத்தான் முடியாது பாபு..''
'நல்லா அழகா பேசுற மல்லிகா... ஆனா என் மனசுலதான் இத்தனை வயசிலேயும் ஆழத்தில் ஒரு ஏமாற்ற உணர்ச்சி இருந்துகிட்டே இருக்கு..''
'அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை பாபு, நாம எல்லாரும் உணர்ச்சிகள், ஆசைகளுக்கு ஆட்படுற சாதாரண மனுஷங்கதானே. ஆனா ஒன்னு புரிஞ்சிக்கோ... எந்த மனுஷனும் ஏமாற்ற உணர்ச்சி, நிராசை போன்றவற்றோடு வாழலாம். ஆனால் குற்ற உணர்ச்சியோடு வாழக் கூடாது. அந்த வயசுல உணர்ச்சி வசப்பட்டு காதல், கல்யாணம்னு ஏதாவது பண்ணி அம்மா, அப்பா குடும்பத்த விட்டு பிரிந்திருந்தோம்னா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப்பார்... குடும்பத்தை நோகடிச்ச குற்ற உணர்ச்சி நம்மளை கொன்றே இருக்கும். உன்னோட அறிவும் நிதானமும்தான் நம்மளை காப்பாத்திச்சு... நிச்சயமா நீ கிரேட்தான்!'' என்று சொல்லி பாபுவின் கைகளை பற்றி குலுக்கிளாள் மல்லிகா.
கொஞ்ச நேரம் வேறு கதைகள் பேசியவுடன், இருவரும் விடைபெற தருணம் வந்தது.
'பாபு, நல்ல வேளை கடவுளா பாத்துதான் உன்னை இங்கே கொண்டாந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஏன்னா என்னோட ட்ரெயினிங் இன்னையோட முடியுது. நாளைக்கு ரிலீவிங் லெட்டர் வாங்குற வேலை மட்டும்தான். அட்ரஸ். போன் நம்பர் எல்லாம் பத்திரமா வச்சிக்கோ. அப்பப்ப பேசு. கண்டிப்பா குடும்பத்தோட மதுரைக்கு வா. உன்னை எல்லாருக்கும் நான் காட்ட வேண்டும், நம்ம பால்யகாலத்தை. அந்தக் கதைகளை எல்லாருக்கும் சொல்லிச் சொல்லி சிரிக்க வேண்டும்..''
'சரி மல்லிகா. நாளைக்கு நான் உன்னை ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிறேன்...''
அடுத்த நாள் கையில் ஒரு வயர் கூடையுடன் பாபு எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். மல்லிகா சொன்ன கோச்சை தேடி கண்டுபிடிக்கும்போது. ஜன்னல் ஓரமாக, முகம் புதைத்தபடி மல்லிகாவும் பாபுவை எதிர்பார்த்திருந்தாள்.
'நல்லவேளை நேரத்துக்கு நீ வந்த பாபு,, வராமல் போயிருவியோன்னு மனசு படபடப்பா இருந்ததுடா..''
'அது எப்படி மல்லிகா வராமல் போக முடியுமா என்னால...'' என்றபடி கையில் இருந்த வயர் கூடையை மல்லிகா கையில் கொடுத்தார் பாபு.
'என்ன இது?''
'டேய் பாபு சத்தியமா சொல்றேன்டா.. உன்ன மாதிரி ஒருத்தன் இந்த உலகத்துல இருக்கவே முடியாதுடா.. இந்த வாடாமல்லி செடியை எங்க. எப்படி கண்டுபிடிச்சு வாங்கிட்டு வந்தே?''
'என் மாடி தோட்டத்தில் வாடாமல்லி செடி இல்லாத காலமே கிடையாது. இந்தச் செடி எனக்கு உன்னை இத்தனை வருஷமும் ஞாபகப்படுத்தியபடியே என் கூடவே இருக்கு. இந்தச் செடியின் அழகு, பெயர்... இது எல்லாம் நம் உயிரோடும் உணர்வோடும் கலந்ததுன்னு நான் சொன்னா நீ இல்லைன்னா சொல்லபோறே..''
கொத்தாய் பூத்திருந்த வாடாமல்லி பூக்களை பார்த்தபடி இருந்த மல்லிகா பாபுவின் கைகளை இறுகப் பிடித்தபடி தலைகுனிந்திருந்தாள். சில நிமிடங்கள் மல்லிகாவின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தது.
'பாபு, இந்த நிமிடத்து சந்தோஷத்தை என் வாழ்க்கையில் இதற்கு முன்னும் இனியும் நான் உணர முடியும் என்று நினைக்கவில்லை.. இதை அன்பு, பாசம், பிரியம், நட்பு ஏன் காதல்ன்னு கூட நீ எப்படி வேணாலும் வச்சுக்கோ... வாழ்க்கையில் ரொம்ப பெருசுடா இது. யாருக்கும் கிடைக்காதது...''என்று மல்லிகா சொல்லும்போது வைகை எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கான ரயிலின் விசில் சத்தம் கேட்டது.
அவசரமாக இறங்கிய பாபு, ஜன்னல் வழியாக மல்லிகாவை பார்த்தபடியே நின்றிருந்தான். ஏதேதோ பேச நினைத்தும் பாபுவால் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்த மல்லிகா ஒரு பலகீனமானத் தொனியில் கைகளை ஆட்டி விடை கொடுத்தாள். பாபுவுக்கு தொண்டை கட்டியது. கண்கள் கலங்கின.
மல்லிகாவுடன், வாடா மல்லி செடியையும் சுமந்தபடி வைகை எக்ஸ்பிரஸ் மெல்ல நகர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.