'மை கேட்'
அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் பணிகளில் சேர வேண்டும் என்ற கனவு காணுபவர்களுக்கு இடையில், 'கோல்ட்மேன் சாக்ஸ்' நிறுவனத் துணைத் தலைவர் வேலையை விட்டுவிட்டு முற்றிலும் மாறுபட்ட பாதையைத் திடீரென்று தேர்ந்தெடுத்து, தினமும் 14 மணி நேரம் பாதுகாப்புக் காவலாளியாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார் அபிஷேக் குமார்.
பாதுகாப்புக் காவலாளிகளுக்கு சம்பளம் குறைவும் அதிக நேர வேலையும் உள்ள நிலையில், தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வைக் காணவும், அவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்களை அனுபவபூர்வமாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கும் அபிஷேக் குமார் ஐஐடி -கான்பூர், ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனங்களில் படித்தவர்.
திடீர் பணியால் 'மை கேட்' என்ற செயலியை உருவாக்கி, அதை நிர்வகிக்கும் நிறுவன இணை உரிமையாளராக அபிஷேக் குமார் இருக்கிறார். தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளில் பாதுகாப்புக் காவலாளியாக ஈடுபட்டுள்ளவர்கள் 'மை கேட்' செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
அடுக்குமாடி, வணிக வளாகத்தில் காவலர்களாக இருப்பவர்களின் அன்றாட வேலைகளான, தொலைபேசி அழைப்புகளைக் கையாளுவது முதல் பார்வையாளர் விவரங்களைப் பதிவு செய்தல், அவற்றை பாதுகாப்பாக வைத்திருத்தல், குடியிருப்பவர்கள் புகார்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றை தொழில்நுட்ப ரீதியாகக் கையாளுவதில் 'மை கேட்' செயலி உதவுகிறது. செயலியின் செயல்திறனை அவ்வப்போது அதிகரிக்கச் செய்ய வேண்டிய தீர்வுகளைத் தீர்மானிக்க இடைஇடையே காவலராக அபிஷேக் பணிபுரிந்து வருகிறார்.
ஒட்டிப் பிறந்தவர்களில் ஒருவருக்குத் திருமணம்!
கருப்பையிலேயே இரண்டு குழந்தைகளின் உடல்கள் ஒட்டியவாறே வளர்ந்து பிறக்கும் குழந்தைகள் 'சயாமிஸ் இரட்டையர்கள்' என்று அழைக்கபடுவர். பிறந்தவுடன் இரட்டையர்களில் சிலர் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கப்படுவார்கள். பல உறுப்புகள் பொதுவாக அமைந்துவிட்டால், அந்த இரட்டையர்களைப் பிரிக்க முடியாது.
மெக்சிகோவைச் சேர்ந்த சயாமிஸ் இரட்டையர்கள் கார்மென், லூபிடா அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இருவருக்கும் சொந்தமாக இதயம், நுரையீரல், வயிறு தனித்தனியே உள்ளது. இருந்தாலும், அவர்களின் உடல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு இடுப்பு மட்டுமே. தனித்தனியாக இரண்டு கைகள் இருந்தாலும், ஆளுக்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. இந்த இரட்டையர் நிற்பதைப் பார்த்தால், ஒருவர் நிற்க அவரது இடுப்பில் இன்னொருவர் அமர்ந்திருப்பதாகத் தோன்றும்.
2020-இல் கார்மென் டேட்டிங் செயலியால் டேனியல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. நட்பு காதலாக மாறி, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டு முடித்தவுடன், 'எனது வாழ்க்கையில் முக்கிய அத்தியாயத்தை எழுதி முடித்திருக்கிறேன்' என்று சமூக ஊடகங்களில் கார்மென் பதிவு செய்துள்ளார்.
இன்னொருவரான லுபிடா, 'முதலில் டேனியல் நண்பர் மட்டுமே என்றுதான் கார்மென் சொன்னார். திருமணம் செய்து கொள்ளப் போவதை என்னிடம் சொல்லவில்லை. கார்மென் குடும்ப வாழ்க்கையை நடத்த விரும்புகிறார். நாங்கள் ஒருவருடன் ஒருவர் ஒட்டியிருந்தாலும், கார்மென் திருமணம் செய்து கொண்டதை நானும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகச் செல்ல முடியாது. நான் இந்த நிலையையே தொடருவேன்' என்கிறார்.
பார்வை குறைபாடுள்ள பெண் பட்டயக் கணக்காளர்
இந்தியாவில் பட்டயக் கணக்காளரான 'முதல் பார்வைக் குறைபாடுள்ள பெண்' என்ற பெயரை மும்பையில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ரஜினி கோபால் பெற்றுள்ளார்.
மிகவும் கடினமான பட்டயக் கணக்காளர் தேர்வை எழுதி,தேர்ச்சி பெற்றது எப்படி என்பது குறித்து ரஜினி கூறியது:'இந்தியா, அமெரிக்காவில் பொதுவாக ஏற்கப்பட்ட வணிக கணக்கியல் நடைமுறைகளில் எனது பணி தொடர்கிறது. பி.காம். படிக்கும்போது சளி பிரச்னையால் அவதிப்பட்டேன். மாத்திரைகளின் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்திருக்கும். கண் ஒவ்வாமை பிறருக்குத் தொற்றுமோ? என்ற பயத்தில் பலரும் என்னைத் தவிர்த்தனர்.
தனிமையை வெல்ல படிக்கும் பழக்கத்தை வளர்த்துகொண்டேன். பல நேரங்களில் அழுகை வரும். எல்லா உணர்ச்சிகளையும் எனக்குள் அடக்கினேன். எனது கண் குறைபாடு காரணமாக நண்பர்கள் குறைந்துவிட்டனர். சிலர் மட்டும் படிக்க உதவினார்கள். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைத்தது.
வலது கண்ணில் பார்வையை இழந்தேன். எனது பார்வைக் குறைபாடு காரணமாக வேலைக்கான எனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. கண்ணியமான வேலையைப் பெற எனக்கு சிறந்த கல்வி தேவை என்பதை உணர்ந்தேன். பார்வைக் குறைபாடுடன் பி.காம் படிக்க முடிந்தால், ஏன் சி.ஏ. படிக்கக் கூடாது என்று நினைத்தேன்.
நீண்ட நேரம் படிப்பது சிரமமாக இருந்தது. புத்தகத்தை கண்களுக்கு அருகில் வைத்துக்கொண்டு படிக்க வேண்டியிருந்தது. சாதிக்க வேண்டும் என்பதற்காக சிறிது நேரம் படித்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டு படித்ததை நினைவுபடுத்த முயற்சிப்பேன். இந்த முறையில் கண்ணுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைத்தது.
சில மாதங்களில் என் இடது கண்ணிலும் பார்வை கோளாறுகள் ஏற்பட்டன. யோகா, தியானம் மன அமைதியைத் தந்தது. பதற்றமாக இருப்பதற்குப் பதிலாக, சூழ்நிலையை ஏற்றுகொண்டு முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்தேன். திரை வாசிப்புக்கான மென்பொருளைப் பற்றி அறிந்துகொண்டு, கணினிகளை எப்படி இயக்குவது என்பதைக் கற்றேன். சதுரங்கம் விளையாடுகிறேன்.
வீணை வாசிக்கவும் கற்றேன். இசை நிகழ்ச்சிகளைக் கேட்பேன். இரு கண்களிலும் பார்வை இழந்த நேரத்தில், என் தந்தைக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நான் முற்றிலும் இடிந்துப் போனேன். என்னை மீட்க தியானம் செய்தேன். ஒரு வாரத்துக்குள் என்னால் சமநிலையை அடைய முடிந்தது. அந்தப் பக்குவம், வாழ்க்கையில் அதிக வலிமையுடனும் நம்பிக்கையுடனும் முன்னேற உதவியது' என்கிறார் ரஜினி.
இன்னொரு ஹீரா வேண்டாம்...
பன்னிரண்டு வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்ட ஹீரா, தற்போது குடிசைப் பகுதிகளில் நான்கு ஆண்டுகளில் ஒன்பது குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளார். காப்பாற்றப்பட்ட சிறுமிகளைப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்.
புவனேசுவரத்தின் பிரபலமான கதாலி கோடம் சேரியில் வசிக்கும் ஐம்பது வயதாகும் ஹீரா கூறியது:'குழந்தைத் திருமணத்தில் சிக்கிக் கொண்டேன். நான் அனுபவித்த வலியை இதர சிறுமிகள் அனுபவிக்கக் கூடாது. இளம்வயதில் பிரசவம் என்பது ஒரு சாபக்கேடு.
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் நோயால் கணவர் இறந்துவிட்டார். நான் படிக்கவில்லை. எனது ஐந்து குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக குப்பைகளை, கழிவுப் பொருள்களைச் சேகரிக்கிறேன்.
அதேநேரத்தில், பெண்களைக் கடத்தும் ஆபத்துகளில் இருந்தும், இளம்பெண்களைப் பாதுகாப்பதிலும், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பவதிலும் அரசு சாரா நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறேன்.
படிக்க விரும்பும் சிறுமிகளுக்கும், சுய தொழில் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் கிடைக்க உதவுகிறேன்.
எனது மூத்த மகன் எப்படியோ போதைபொருள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான். அவனை மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்து மீட்டு வந்தேன். இப்போது அவன் பத்தாம் வகுப்பு தேறியுள்ளான். மேலும் படிக்க வைப்பேன். மாலை நேரங்களில் எனது குடிசையில் சிறார்களை படிக்கச் செய்கிறேன்.
வறுமைக்கு இடையில் பிறந்ததற்கு நான் கொடுத்த விலை பெரியது. அதனால் படிக்காத மற்ற சிறுமிகள், இளம் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை என்னால் உணர முடியும். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கண்ணியத்துடன் வாழ்ந்ததால், நான் எனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டேன். இன்னொரு ஹீரா பிறப்பதை நான் விரும்பவில்லை' என்கிறார் ஹீரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.