தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றில் மப்புநிலை குணமாக?

என் வயது நாற்பத்து ஏழு. வீட்டிலுள்ள சூழ்நிலையால் அதிக ரத்த அழுத்தம், மனத் துயரத்தால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, உடல் முழுவதும் வீக்கம், வயிற்றில் மப்பு நிலை, குமட்டல், சிறுநீர் சரிவர வெளியாகாத நிலை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன்.

தினமணி செய்திச் சேவை

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் வயது நாற்பத்து ஏழு. வீட்டிலுள்ள சூழ்நிலையால் அதிக ரத்த அழுத்தம், மனத் துயரத்தால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, உடல் முழுவதும் வீக்கம், வயிற்றில் மப்பு நிலை, குமட்டல், சிறுநீர் சரிவர வெளியாகாத நிலை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். நான் குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

-ஜெரால்டு, பாண்டிச்சேரி.

உடல் முழுவதும் பரவியுள்ள நிலை, த்ரிதோஷங்களாகிய வாத, பித்த, கப தோஷங்களால் உண்டானது மற்றும் ஆமம் எனப்படும் மப்பு நிலையை வயிறு உணர்த்தக் கூடிய நிலையில், முதலில் உடலை இளைக்கச் செய்யும் உபவாசம் எனும் பட்டினியிருத்தல் முறையை நீங்கள் முதலில் செய்துகொள்ள வேண்டும்.

ஓரிரு நாள்கள் உணவு ஏதும் ஏற்காமல், சுக்கு தட்டிப் போட்ட வென்னீரை மட்டுமே அருந்த வேண்டும். இதனால் வயிற்றிலுள்ள மப்புநிலை விரைவில் மாறி, பசி நன்றாக எடுக்கத் தொடங்கியவுடன் எளிதில் செரிக்கக் கூடிய உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

புழுங்கலரிசிக் கஞ்சி, சூடான மிளகு ரசம் சாதம், கறிகாய் சூப், பருப்புகள், வேகவைத்த கஞ்சி போன்றவை உடல் வலுவை இழக்காமல் கவனித்துகொள்ள கூடிய நல்ல வகை உணவுகளாகும். த்ரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை கொண்டு கஷாயம் தயாரித்து, அதனுடன் சிலாஜித் கேப்ஸ்யூஸ் சாப்பிட, உடல் உட்புற நீர்த்தேக்கத்தை சிறுநீரகம் வழியாக வடிகட்டி வெளியேற்றும். இதனால் உடல் உட்புற சுத்தமானது மேம்படுத்தப்படும்.

இதனால் உங்களுக்கு மறுபடியும் பசி மந்தம், மப்பு நிலை, தடையுடன் கூடிய பேதி போன்றவை ஏற்பட்டால் சம அளவு வெல்லம் கலந்த சுக்குப் பொடியை சிறிது சிறிதாக வாயினுள் போட்டுச் சுவைக்க இந்த உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

வீக்கம் உள்ளவர்கள் வயிற்றில் மப்புநிலை நீங்கி, பசி நன்றாக எடுக்கத் தொடங்கி, மலம், சிறுநீர்த் தடை தொடருமானால் பசு அல்லது எருமைப்பாலையே உணவாக ஏழு நாள்கள் எடுத்துகொள்ள வேண்டும். ஓமம், ஜீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றைக் கொண்டு காய்ச்சிய வென்னீரையே பருக வேண்டும்.

வீக்கம் வடிவதற்காக, ஆயுர்வேத லேகிய மருந்து ஒன்று இருக்கிறது. பத்து வேர்களைக் கொண்ட தசமூலகஷாயத்தில் நூறு கடுக்காய்களை இட்டு வேகவைத்துக் கலந்து, வெல்லம், லவங்கப்பட்டை, லவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, திரிகடுகம், யவக்ஷôரம் என பல மருந்துகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனையிலுள்ள இந்த லேகியத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவுக்கு முக்கால் மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிட்டு வர வேண்டும்.

இதனால் முதிர்ந்த வீக்கம், காய்ச்சல், சர்க்கரை உபாதை, குன்மம், இளைப்பு, எலும்புகள் இணையுமிடத்தில் ஏற்படும் வீக்கம், வலி, நெஞ்செரிவு, ரத்தக் கசிவு உபாதை, நிறமாற்றம், சிறுநீர், வாயு, விந்து இவற்றில் ஏற்படும் கெடுதிகள், மூச்சிரைப்பு, உணவில் ருசியின்மை, மண்ணீரல் வீக்கம், இடுவிஷஉதரம் எனும் வயிற்றில் ஏற்படும் நீர்சேர்ந்து வரக் கூடிய வீக்கம் ஆகியவற்றை நீக்கும்.

தசமூலம் எனும் கஷாயம் விற்பனையிலுள்ளது. அதில், பழைய பார்லி, பழைய அரிசி சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சாதத்துடன் பயத்தம் பருப்பு கஞ்சி சாப்பிட உகந்தது. கொள்ளு ரசத்தில் திப்பிலி சூரணம் கலந்து சாதமாகச் சாப்பிடுவது வீக்க நோயில் ஏற்ற புளிப்பில்லாத மோர், புனர்நவாஸவம், லோஹாஸவ போன்ற ஆயுர்வேத மருந்துகள் அருந்துவதற்காகப் பயன்படுத்தலாம்.

மூக்கரட்டைக் கீரை, நெருஞ்சில் குடிநீர் ஆகியவற்றின் தொடர் உபயோகத்தால் வீக்கத்தை உடலின் உட்புறத்திலிருந்து வடித்து வெளியேற்றலாம். தயிரைப் பயன்படுத்தக் கூடாது. கடைமோராகப் பருகலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT