கொத்தமங்கலம் சுப்பு 
தினமணி கதிர்

கொத்தமங்கலம் சுப்பு! - நான் சந்தித்த பிரபலங்கள்: 11

கொத்தமங்கலம் சுப்பு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

DIN

கொத்தமங்கலம் சுப்பு

தமிழ் திரையுலகின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரால் அப்பா என்று சொல்லப்பட்ட கே. சுப்பிரமணியத்திடம் மாதச் சம்பளத்தில் உதவி இயக்குநராக இருந்தவரை ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் 'பாவ மன்னிப்பு' படத்தில் ஒரு நாட்டு வைத்தியராக நடித்ததுதான் எனக்குத் தெரியும்.

1941இல் வெளிவந்த 'மதன காமராஜன்' படத்தில் ராஜகுருவாக நடித்தார். இவர் 1944இல் கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கிய படம் 'தாசி அபரஞ்சி', 1945இல் 'கண்ணம்மா என் காதலி' வந்தது. ஜப்பானியக் குண்டு வீச்சைப் பிரதி எடுத்த படம். 1947இல் இவர் கதை, இயக்கத்தில் 'மிஸ் மாலினி' வெளிவந்தது. இதில்தான் ஜெமினி கணேசன் அறிமுகமானார்.

இந்தியத் திரை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, 725 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி, வீடு வாசல் பெற்ற தாயின் நகைகள் என எதையும் பொருட்படுத்தாமல் பிரம்மாண்டத்தின் உச்சத்தைத் தொட்டு, முதலில் ஹிந்தியில் ஒரு தமிழ்ப் படத்தை வெளியிட்டு ஆங்கிலத்திலும் சப் டைட்டில் காட்டிய ஜெமினியின் இமாலய வெற்றிப் படமான சந்திரலேகாவின் கதாசிரியர். இரும்புத்திரை, வஞ்சி கோட்டை வாலிபன் எல்லாவற்றிக்கும் மேலாக ஆனந்த விகடனில் தொடராக வந்து கோடிப் பேர்களுக்கு மேல் பார்த்து ரசித்த காவியம் தில்லானா மோகனாம்பாள் மறக்க முடியுமா!

இவரை நான் ராயப்பேட்டையில் 1968இல் சந்திக்க இவர் வீட்டுக்குப் போனேன். இவரை எனக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானே தேடிப் போனேன். அவரைச் சந்தித்தேன். என் பெயர் காரைக்குடி நாராயணன் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டேன்.

அவர் உடனே 'நான் கொத்தமங்கலம்' என்றார். ஜாவர் எனக்குச் சொன்னதைச் சொன்னேன். என்னைச் சிறிது நேரம் அவர் வீட்டு வாசலில் இருக்கச் சொல்லி விட்டு அவர் நாடகமாக எழுதி வைத்திருந்த 'கை விளக்கு' என்ற நாடகத்தின் கைப்பிரதியை என்னிடம் தந்தார். 'இந்த நாடகத்தைப் படித்து விட்டு உனக்கு பிடித்ததை, பிடிக்காததை ஒரு ரசிகனாக என்னிடம் வந்து சொல்ல வேண்டும்' என்று கூறி அனுப்பினார்.

அப்போது எனக்கு தங்க இடமில்லை. காரைக்குடியில் என்னுடன் பள்ளியில் படித்து என் வீட்டுக்கு எதிரே இருக்கின்ற முத்துப்பழனி என்பவர் வேலை பார்த்த பிராட்வே பகுதியில் பிடாரி அம்மன் கோயில் தெருவில் இருந்தார், அவருடன் ஓசியில் தங்கி வந்தேன். அவரிடம் அனுமதி கேட்டு இரவு விளக்கில் ஒரே மூச்சாகப் படித்து முடித்தேன்.

அடுத்த நாள் அவர் வீட்டிற்குத் தேடிப் போனேன். 'ஒரே ராத்திரியில் படிச்சிட்டியா என்று சந்தேகத்துடன் கேட்டார். எங்கே படித்த நாடகத்தை சொல்' என்றார். எனக்குள் ஜாவர் இருந்து என்னைத் தட்டி கொடுத்துத் தைரியம் சொல்வதாக உணர்ந்தேன்.

நான் படித்த 'கை விளக்கு' நாடகத்தில் பிடித்ததையும், பிடிக்காததையும் சொன்னேன். அதற்குக் காரணங்கள் கேட்டார். எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். 'என் கதையின் கருவை உன் பாணியில் சொல்' என்றார். நாளைக்குப் பௌர்ணமி வரப் போகிறது என்று அன்னைக்குக் கையிலிருக்கும் லாந்தர் விளக்கைத் தூக்கி எறிந்து விடாதே என்பதுதான் உங்கள் நாடகத்தின் கரு என்று கூறினேன்.

அதன் பின் இரண்டொரு மாதங்களில் நான் எழுதிய முதல் நாடகம்தான் 'வீட்டுக்கொரு விவேகானந்தர்'. இவர் நினைவாக நான் வசனம் எழுதிய வெற்றிப் படமான 'தீர்க்க சுமங்கலி' படத்தில் 'எங்க ஊரு கொத்தமங்கலம் கிராமத்தில் கொத்து மல்லி கறிவேப்பில்லை சும்மா தருவாங்க நீ என்ன இதுக்கும் காசு கேக்குற' என்று கே.ஆர். விஜயா காய்கறிகாரியிடம் சொல்லுவார்.

இவர் விகடனில் எழுதிய தில்லானா மோகனாம்பாள் உரிமையை அதன் நிறுவனர் எஸ்.எஸ். வாசனிடம் சென்று ஏ.பி. நாகராஜன் சில ஆயிரங்கள் கொடுத்து அதைப் படமாக்கப் போவதைச் சொன்னார்.

அதை வாங்கிக் கொண்ட எஸ்.எஸ்.வாசன் கதை எழுதிய சுப்புவுக்கும் சில ஆயிரங்கள் கொடுக்கச் சொன்னார். ஏ.பி.என் அடுத்த சில மணி நேரங்களில் சுப்புவைத் தேடிச் சென்று அவருக்கான பணத்தைக் கொடுத்தார். அப்போது சுப்பு சிரித்தபடி, நீங்கள் இங்கே வருவதற்குள் எஸ்.எஸ்.வாசன் தனக்கு தந்த பணத்தையும் என் வீட்டிற்குக் கொடுத்தனுப்பி விட்டார்' என்று சொன்னார்.

அந்தக் காலத்தில் படைப்பாளிகளுக்குக் கிடைத்த கௌரவம், மரியாதைக்கு இதை விட வேறு என்ன சாட்சி சொல்ல முடியும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்எஸ்சி தோ்வா்கள் மீது பலப் பிரயோகம்: போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

SCROLL FOR NEXT