தினமணி கதிர்

அற்புதக் கதைகள் சொன்ன: அடிமை ஈசாப்...

புகழ்பெற்ற ஈசாப் கதைகளைத் தெரியாதவர்கள் யார்? அந்த அற்புதக் கதைகளையெல்லாம் சொன்னவர் அடிமையான ஈசாப்.

டி.எம். இரத்தினவேல்

புகழ்பெற்ற ஈசாப் கதைகளைத் தெரியாதவர்கள் யார்? அந்த அற்புதக் கதைகளையெல்லாம் சொன்னவர் அடிமையான ஈசாப்.

ஈசாப் பிறந்தது கிரேக்க நாட்டில் உள்ள பிரீசியா. அங்கு ஆட்சிபுரிந்த அயத்மோனுக்கு அடிமையாக்கப்பட்ட ஈசாப், சிறந்த அறிவாளி. வாழ்க்கையில் தான் கண்டு, கேட்டவைகளை நகைச்சுவை கலந்து, கதைகளாக்கி அறிவு புகட்டுவதில் மேதாவியானார்.

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் (ஈசாப்) உதிர்த்த சில கதைகள் இன்றும் ஆலமரம் போல விழுதுவிட்டு உலகம் முழுவதுமே பரவியுள்ளது. அவை திரும்பத் திரும்ப 'பொன் முட்டையிடும் வாத்து', 'முயலை ஆமை ஜெயித்தது' போன்ற அற்புதமான குட்டி குட்டி கதைகளைக் கையாண்டு உதாரணங்களாகக் காட்டப்பட்டு, வருகின்றன. அப்படிப்பட்ட கதாசிரியரை ஏன் 'அமரன்' என்று வர்ணிக்கக் கூடாது.

கிரேக்க அரசர் குரோஷஸ் அவையில் சில காலம் விதூஷகனாக விளங்கினார் ஈசாப். அங்கு ஏற்பட்ட அனுபவங்கள் கதைகளாய் பிரதிபலித்தன.

குரோஷஸ் மிதமிஞ்சிய செல்ந்தர், ஆனால் பலகீனமானவர் என்பதோடு, படுமுட்டாளும் கூட! இந்த நாட்டைச் சூழ்ந்த பிற நாட்டு அரசர்களோ பலசாலிகள் மட்டுமல்ல; அரசியலிலும் போர்த் தந்திரங்களிலும் நிபுணர்களாக விளங்கினர்.

தன் குறைகளை உணராத குரோஷஸ் அடிக்கடி எதிரிகளுடன் மோதி காயம்பட்டுதான் மிச்சம். இந்த நிகழ்ச்சியை அப்படியே ஈசாப் எழுதிவிட்டார் ஒரு கதையாக? 'நதியில் பானையும் இரும்புக் குடமும்' மோதிய கதைதான் அது. அரசருக்கு மட்டுமா? மக்களையும் ஈசாப் விட்டுவைக்கவில்லை.

சாதுவான தங்களது அரசனை அலட்சியப்படுத்துவதும் ஒரு கதையாக முளைத்தது. 'மதியூகியான அரசர் தங்களுக்கு வேண்டும்' என்றும் 'சற்று மந்தபுத்தி உடைய அரசர் தேவையில்லை' என்று ஒதுக்கியதை 'கொக்குக்கு இரையாக்கிவிட்ட தவளைகள்' என்று கதையாக்கினார் ஈசாப்.

அரசியலிலும் ஈசாப்புக்குப் பெரும் பங்குண்டு. பல ஆண்டுகள் குரோஷஸ் ஆட்சிபுரிந்துவந்த கிரேக்க நாடு பகை அரசர்களுக்கும் ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்துக்கும் இரையாகாமல் இருந்தது என்றால் அதுவும் ஈசாப் உருவாக்கிய 'கதை'யின் போதனைதான்.

சதா சண்டையிட்டுக் கொண்டிருந்த தன் மகன்களைக் கூட்டி தந்தை சொன்னது, 'ஒரு சுள்ளிக் குச்சியை உடைப்பது எளிது; ஆனால் சுள்ளிகள் இணைந்த ஒரு கட்டையை உடைக்க முடியாது' என உணர்த்தியே 'ஒற்றுமையே பலம்' என போதித்தார். இதன்மூலம் நாட்டைக் காப்பாற்றிய பெருமை ஈசாப்புக்கு உண்டு.

கிரேக்கர்கள் சுதந்திரப் பிரியர்கள் மட்டுமல்ல; அதில் 'வெறி' கொண்டவர்கள். 'சுதந்திரம் எங்களது பிறப்புரிமை' என்பது அவர்களது தலையாயக் கொள்கைகளிலும் ஒன்றாக இருந்தது. இந்த உணர்வுக்கும் தீனி போட்டவர்தான் ஈசாப். அதற்கும் ஒரு கதை. வழக்கம்போல், கதாநாயகர்கள் பிராணிகள்தான்.

இதில், ஒரு சொகுசு நாய், காட்டு ஓநாய் ஆகிய இரண்டுதான். நாய்க்கு வேளைக்கொரு உணவு எஜமானனே தட்டில் வைப்பான். ஓநாய் பாவம் காட்டில் சரியான வேட்டை இல்லாமல், ஒடுங்கி உலர்ந்துவிட்டது. தன் நண்பன் நாயிடம், அது சொகுசாக வாழும் மர்மத்தை வினவ, அலட்சியமாக நாயிடமிருந்து பதில் வந்தது.

'ஓநாயாரே.. ஒரு சிரமமும் இல்லை. அங்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் அந்நியர்கள் யாராவது வந்தால் குரல் கொடுப்பது ஒன்றுதான்'' என்றது. கேட்ட ஓநாய்க்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை. கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் நாயின் பின்னாலேயே வந்துவிட்டது. வழியில் கொஞ்ச தூரம் சென்றதும், நாயின் கழுத்தைச் சுற்றி ஏதோ ஒரு போல் வளையமாயிருந்ததை ஓநாய் பார்த்துவிட்டது.

'அது என்ன காயமா?'' எனக் கேட்க, 'ச்சீசீ... அதெல்லாம் ஒன்றுமில்லை. எஜமானன் பிரியத்தோடு கட்டிப் போடும் கனமான சங்கிலிப் பட்டை அழுத்தி அழுத்தி இப்படியாகிவிட்டது'' என்றது நாய். அவ்வளவுதான் அதைக் கேட்டதும் ஓநாய் அப்படியே நின்றுவிட்டது.

'கட்டிப் போட்ட' என்ற சொல், ஓநாயின் காதில் விழுந்ததும் அலறி அடித்துகொண்டு திரும்பிப் பார்க்காமல் தரித்திர தேசத்துக்கே ஓடிவிட்டது. 'இதைவிட சுதந்திர வேட்கையை எப்படி அழுத்தமாக விளக்க முடியும். இப்படி தீவிர சுதந்திர வேட்கையை உடையவர்கள் கிரேக்கர்கள்' என ஈசாப் கூறும் கதையாகும்.

உயர்ந்த தத்துவங்களையும் அறிவுரைகளையும் குட்டிக் கதை வடிவில் எளிய முறையில் புகட்டுவதில் வல்லவராகத் திகழ்ந்தார் ஈசாப்.

ஒருசமயம் பலர் கூடி நான்கு நாள் பயணமாக ஓர் ஊருக்குப் பிரயாணப்பட்டனர். ஏராளமான மூட்டை முடிச்சுகள் இருந்தன. அவற்றை ஆளுக்கொன்றாய் தூக்கிச் செல்வது என முடிவு செய்தனர். எல்லாமே கனமான மூட்டைகள். பொதுவாக, எல்லோரும் லேசான மூட்டைகளைதான் தேடுவர். ஆனால் ஈசாப்போ, மிகக் கனமான மூட்டை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

அதைத் தூக்கிக் கொண்டு தள்ளாடியபடியே சுமந்தார். உடன் வந்தவர்களோ ஈசாப்பைக் கண்டு நகைத்தனர். ஆனாலும், ஈசாப் சந்தோஷத்துடன் அந்தக் கனமான மூட்டையைச் சுமந்தவாறு சென்றார். ஏன் என்றால் அந்த மூட்டையில் இருந்தது அனைவருக்குமான உணவு.

அந்தச் சோற்று மூட்டை முதல்நாள் பளுவாக இருந்தது. மறுநாள் பாதி கனம் குறைந்தது. அப்புறம் ஒன்றுமே இல்லை. கையை வீசிக் கொண்டு ஜாலியாக நடந்துவந்தார் ஈசாப். இதைக் கண்டு மற்றவர்கள் கனமான சுமைகளுடன் பயணித்தவாறு ஈசாப்பின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தனர்.

இதெல்லாம் சரி; இந்த மகா அறிஞனின் கடைசிக் காலம் என்ன?

கீரிஸ் நாட்டில் டெல்பி என்ற ஓர் இடம் உண்டு. அங்கே ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மகான் ஒருவர் அருள்வாக்கு சொல்வார். மகானுக்கு மக்கள் காணிக்கை அளிப்பர். அதன்படி, குரோஷஸ் அரசரிடம் ஏராளமான மக்கள் காணிக்கைகளைக் கொடுத்து விடுவார்கள். அரசர் அவற்றையெல்லாம் மொத்தமாக மகானுக்கு அனுப்பி வைப்பார்.

அப்படியொரு முறை டெல்பியில் உள்ள மகானிடம் காணிக்கைகளைச் சேர்க்கும் பொறுப்பு ஈசாப்புக்கு வந்தது. அரசரின் ஆணைப்படி, ஈசாப் அந்தக் காணிக்கைகளை எடுத்துச் சென்றார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தக் காணிக்கைகளை ஈசாப், மகானிடம் சேர்க்க மறுத்துவிட்டான். பலன் விபரீதமாகியது.

அரசர் வெகுண்டு எழுந்து, தெய்வ நிந்தனை புரிந்துவிட்டதாக ஈசாப் மீது குற்றம் சாட்டினார். ஈசாப்புக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நாட்டு வழக்கப்படி, ஈசாப்பின் கை, கால்கள் கட்டப்பட்டு செங்குத்தான மலைஉச்சியில் இருந்து அதள பாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார். ஈசாப்பின் கதை முடிந்தது.

இந்தக் கொடுமை நிகழ்ந்தவுடனேயே கீரிஸ் தேசத்தில் 'பிளேக்' எனும் கொள்ளை நோய் வெகுவேகமாகப் பரவி, மக்களைக் காவு கொண்டது. அநியாயமாக அப்பாவி ஈசாப்பைக் கொன்றுவிட்டதால், நோய் பரவியது என்று அனைவரும் வருந்தினர்.

ஏதன்ஸ் நகரில் இருந்த லிஸிபஸ் என்ற புகழ்பெற்ற சிற்பக் கலைஞரைக் கொண்டு, ஈசாப்புக்கு ஒரு முழு உருவச் சிலை செய்து நகரின் முக்கிய இடத்தில் நிறுவி அஞ்சலி செலுத்தினர்.

'ஈசாப் குட்டிக்கதைகள்' என்று இலக்கிய உலகமோ தங்களது மொழிகளில் பதிப்பித்து, ஈசாப்புக்கு இன்றும் பெரும் புகழைத் தேடி தந்துகொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT