தினமணி கதிர்

ஆஸ்கர் வென்ற அனிமேஷன் கதை!

மனித கதாபாத்திரங்கள் இல்லை, வாய்ஸ் ஓவர்களும் இல்லை, ஆடம்பரத் தொழில்நுட்பங்களும் கிடையாது.

அசோக்

மனித கதாபாத்திரங்கள் இல்லை, வாய்ஸ் ஓவர்களும் இல்லை, ஆடம்பரத் தொழில்நுட்பங்களும் கிடையாது. மினிமலிச பாணியில் சாதாரண லேப்டாப்பை வைத்து உருவாக்கப்பட்ட 'ஃப்ளோ' என்கிற லாட்வியா அனிமேஷன் திரைப்படம், இன்று உலக ஆடம்பர அனிமேஷன் படங்களை ஓரம் கட்டி ஆஸ்கர் விருதினை சொல்லி அடித்திருக்கிறது.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கைவிடப்பட்ட மரவீட்டில் வசித்து வருகிறது தங்க நிறக் கண்கள் கொண்ட ஒரு கருப்புப் பூனை. அது எதேச்சையாக வீட்டைவிட்டு வெளியே வர, நாய்கள் கூட்டம் கொலை வெறியுடன் துரத்துகிறது. இதனால் பயத்தில் ஓரிடத்தில் மறைந்திருக்கிறது பூனை. அப்போது மான்கள் கூட்டம் வேகமாக ஓடிவர, அடுத்து என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பதற்குள் சுனாமியைப் போன்ற ஆழிப்பேரலைகள் பூனையை அடித்துச் செல்கிறது.

உயிர்பிழைக்கத் தத்தளிக்கும் பூனை ஒரு சிலையில் தஞ்சம் அடைகிறது. ஆனால் அந்தச் சிலையும் மூழ்கும் சூழலில், ஒரு படகு வந்து அதனைக் காப்பற்றுகிறது. அங்கே எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் கேபிபரா என்ற விலங்கு ஏற்கெனவே இருக்க, நேரம் செல்லச் செல்ல குப்பைகளை சேகரிக்கும் லெமூர், பூனையிடம் நட்பாக துடிக்கும் லேப்ரடார் நாய் ஆகியவை வந்து சேருகின்றன.

இப்படியாக சென்றுகொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே 'ஃப்ளோ' படத்தின் கதை.

பல அடுக்குகளாக வைக்கப்பட்ட இந்தப் படத்தின் அனிமேஷன் பின்னணி, ஆரம்பத்தில் மனிதர்கள் வாழ்ந்து மறைந்த எச்சத்தைக் காட்டி, பின்னர் இயற்கையின் சீற்றங்களால் உலவும் ஜீவராசிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. அதிலும் அப்பாவியாக நடமாடும் அந்த பூனைக்கு, என்ன நடக்குமோ என்கிற 'திக்' உணர்வு திரை எழுத்தில் அட்டகாசமாக பிரதிபலித்திருக்கிறது.

பிரமாண்டமான படங்களைப் போலவோ, ஜப்பானிய அனிமேஷன் பாணியிலோ இல்லாமல் புதுவித உணர்வினைத் தந்து வெள்ளத்தின் நடுவே இருக்கும் கருப்புப் பூனையைத் தொடரச் செய்கிறது.

குறிப்பாக, பூனையின் மென்மையான இயக்கங்கள், நீரில் பாயும் சிற்றலைகள், நீருக்கு அடியே இருக்கும் வண்ண வண்ண மீன்கள், மேஜிக்கல் ரியலிசம் பாணியில் தோன்றும் உலகம் ஆகியவை கண்களில் ஒத்திக்கொள்ள வைக்கும் அழகியல் அனுபவம்.

இந்த அற்புதப் படைப்பு பிளெண்டர் எனும் ஓபன் சோர்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 4 மில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டது என்ற தகவலை அறியும்போது, மெய்யாகவே நம் கண்கள் விரிகின்றன.

ஏனெனில் ஆஸ்கர் விருதுக்கு இப்படத்துடன் போட்டியில் இருந்த பல அனிமேஷன் படங்களை விட 30 மடங்கு முதல் 50 மடங்கு குறைவான பொருள்செலவில் உருவாகியிருப்பதே அதற்குக் காரணம்.

இயக்குநரே படத்தின் இசையமைப்பாளராக இருக்க, பின்னணி இசை கதையோடு ஒன்றிச் செல்லும் பரவச நிலையைக் கொடுக்கின்றது.அன்புடன் எழுதப்பட்ட இந்த வார்த்தையில்லா திரைப்படம், காலநிலை மாற்றம் என்பது உயிரினங்கள், அவற்றின் பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றுக்கு எவ்வாறு தீங்குகளை விளைவிக்கிறது என்பதை உயிர்ப்போடு பேசுகிறது.

விலங்குகளை வைத்து நகரும் கதையின் கருப்பொருளை, அப்படியே மனித நடவடிக்கைகளுக்கும் பொருத்திக் கொள்ளலாம். அதிலும் திரைக்கதையில் மனிதர்கள் அடையும் துன்பத்தைக் காட்டாமல் விலங்குகள் படும் இன்னல்களைக் காட்டிய விதத்தில், குற்றவுணர்வு நம்மைப் பற்றிக்கொள்கிறது.

ஏனெனில் எல் நினோ, புவி வெப்பமயமாதல், காட்டுத்தீ, மழை வெள்ளம் என்று உலகே இன்று இயற்கை சீற்றத்தால் தடுமாறுகிறது. இதை மேலோட்டமாகப் பார்த்தலே சுற்றுச்சூழலைப் பற்றிய மனிதனின் அலட்சியம் புலப்படும். குழந்தைகள் ரசிக்கும்படியான திரைமொழியில் உருவாக்கப்பட்டாலும், பெரியவர்களிடமும் அத்தனை கேள்விகளை விட்டுச் செல்கின்றன.

முதலில் அந்நியர்களாக இருக்கும் விலங்குகள் பின்னர் நண்பர்களாக மாறுகின்றன. குறிப்பாக மிகவும் பயந்து கொண்டிருந்த பூனை படிப்படியாக மற்ற விலங்குகளைத் தோழர்களாகப் பார்க்கிறது.

அதுவும் தன்னுடைய இயற்கை எதிரி என்று சொல்லும் விலங்கிடமே நட்பு பாராட்டுகிறது. உயிரைப் பணயம் வைத்து மீன்களைப் பிடித்து மற்ற விலங்குகளுக்கு உணவைக் கொடுக்கிறது. எவ்வித அசாதாரணமான சூழலிலும் ஒற்றுமை, இரக்கம் ஆகிய குணங்கள், அமைதியை மீட்டுருவாக்கம் செய்யும் என்கிற பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.

இது பிரிவினைகளைச் சுமந்து செல்லும் மனித மனதில் இருக்கும் அழுக்குகளை ஆழிப்பேரலை போல அடித்துச் செல்லவும் தயங்கவில்லை என்றே சொல்லலாம்.மொத்தத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத இந்த அற்புதப் படைப்பு, படம் முடிந்த பின்னரும் நம் மனதுக்குள் ஆயிரம் தத்துவங்களைப் பேசிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT