செல்போன் பத்திரம்...
'செல்போனை கவனமாகப் பராமரித்தாலே போதும். சைபர் கிரைம் குற்றங்களில் தற்காத்துகொள்ளலாம்'' என்கிறார் சைபர் கிரைம் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹர்ஷா இ.தென்னரசு.
'செல்போனை கவனமாகப் பராமரித்தாலே போதும். சைபர் கிரைம் குற்றங்களில் தற்காத்துகொள்ளலாம்'' என்கிறார் சைபர் கிரைம் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹர்ஷா இ.தென்னரசு.
பெங்களூரில் எச்.கே. ஐ.டி. செக்யூரிட்டி சொல்யூஷனஸ் நிறுவனரான இவர், கர்நாடகத்தில் உள்ள பல்கலைக்கழங்கள், கல்வி நிலையங்களில் மாணவர்கள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு 'சைபர் கிரைம் குற்றங்களில் தப்பிப்பது எப்படி?' என்பது குறித்து பயிற்சிகளை அளித்துவருகிறார்.
அவரிடம் பேசியபோது:
Advertisement
'நிறுவனங்களும், தனிநபர்களும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. முன்னெச்சரிக்கையாக நாம் இருந்தால், சைபர் கிரைம் குற்றங்களைத் தவிர்க்க முடியும்.
நிறுவனங்களில் 'ஹாக்கர்ஸ்' நுழைந்துவிட்டால், அந்த நிறுவனம் பெரிய அளவில் பொருளாதார இழப்பைச் சந்திக்கும். இதோடு, பணம் கேட்டு மிரட்டுதல், நிறுவன ரகசியங்கள், ஆவணங்களைப் பிறருக்கு விற்றல் போன்ற செயல்களை மேற்கொள்வர்.
எனவே, நிறுவனங்கள் தங்களது சைபர் கிரைம் ஆராய்ச்சியாளர்களை அணுகி, பயிற்சி பெற்றால் அவர்கள் தங்களது நிறுவனத்தில் உள்ள தவறுகளைச் சரி செய்துகொள்ளலாம். 'ஃபயர்வால்' எனும் சாஃப்ட்வேரை பதிவு செய்துகொண்டால், நிறுவனங்களின் இணையத்தை ஹாக் செய்வதில் இருந்து தப்பிக்க முடியும். இதுதவிர, சிசி டிவி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம்.
நிறுவனங்களை 'ஹாக்கர்ஸ்' கையகப்படுத்துவதில் கவனத்துடன்தான் இருக்கின்றனர். தனிநபர்கள்தான் சைபர் கிரைம் குற்றங்களில் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தேவையற்ற ஆஃப்ஸ்களை செல்போனில் வைத்திருக்கக் கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் முகமறியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகள், தகவல்களைப் புறக்கணிக்க வேண்டும். சமூக ஊடகங்களின் வாயிலாக, பெண்கள் பேசினால் ஆண்கள் அதற்கு மயங்கிவிடக் கூடாது.
சமூக ஊடகங்களில் பரிசு விழுந்திருப்பதாக வரும் தகவல்களை நம்பி, அதை 'கிளிக்' செய்தால், பண இழப்பைச் சந்திப்பீர்கள்.
பொது இடங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'ப்ரீ வைஃபை' பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதோடு, 'ப்ரீ ஃவைபை' பயன்படுத்தி, பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளக் கூடாது. இந்த வகையில்தான் சைபர் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.
இதைத் தவிர்க்க 'ஆன்டி வைரஸ் சாப்ஃப்ட்வேர்' செல்போனில் பதிவேற்றம் செய்தால், சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போனில் ஊடுருவலை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும். பணப் பரிமாற்றம் ஓ.டி.பி. வாயிலாகவே நடைபெறும் நிலையில், ஹாக்கர்ஸ் எப்படி வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடிகிறது என்ற கேள்வி எழும். கோடிக்கணக்கில் பணத்தை வங்கிக் கணக்கில் இருக்கும் நிறுவனங்களுக்கு சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது. ஆனால், தனிநபர்களின் நிலைதான் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில், இணையத்தையோ, ஏ.டி.எம். அட்டைகளையோ பயன்படுத்தினால் ஓ.டி.பி. தேவைப்படாது. பொது இடங்களில் நாம் பைகளிலோ, பேன்ட் பாக்கெட்டுகளிலோ வைத்திருக்கும் பர்ஸ்களில் உள்ள பணப்பரிமாற்ற அட்டைகளை அருகேயிருக்கும் நபர் தங்கள் உடலில் வைத்துள்ள பிரத்யேக இயந்திரங்களின் வாயிலாக, ஸ்கேன் செய்து தகவல்களை ஊடுருவ முடியும். அந்தத் தகவல்களை வைத்து, நகல் அட்டைகளைத் தயார் செய்து வெளிநாடுகளில் பணம் எடுத்துவிடலாம். இதைத் தடுக்க, வங்கிக் கணக்கில் உள்நாட்டில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதைத் தேர்வு செய்துவிடுவது நல்லது.
ஏ.டி.எம். அட்டைகள், கிரெடிட் கார்டுகள், ஆதார் அட்டை, பான் அட்டை போன்ற ஆவணங்களை அலுமினியம் சில்வர் பையில் அடைத்து வைத்தால், 'ஸ்கிம்மர்' வாயிலாகத் தகவல்கள் திருட்டுகளைத் தவிர்க்க முடியும்.
சைபர் கிரைம் வாயிலாகப் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக, சைபர்கிரைம் இணையதளத்தில் புகாரை பதிவேற்றம் செய்துவிட வேண்டும் அல்லது அருகேயுள்ள சைபர் கிரைம் காவல் துறையில் புகார் செய்வதும் நல்லது.
சைபர் கிரைம் வழக்குகளால் பணத்தை இழந்தவர்கள் புகார் செய்திருந்தாலும், அவர்களுக்கு பணம் கிடைப்பது தாமதமாகிறது. சைபர் கிரைம்களால் பண இழப்புக்குள்ளாவது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டியது வங்கிகளின் கடமையே தவிர, பாதிக்கப்பட்டவர்களின் கவனக்குறைவு கிடையாது.
கேரள உயர்நீதிமன்றத்தில் 2023-இல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, நீதிமன்றம் வாயிலாக வழிகாட்டுதலைப் பெற்று வங்கிகளை அணுகினால் பாதிக்கப்பட்டோர் பணத்தைப் பெற முடியும்.
ஏ.டி.எம்., நெட் பேக்கிங், போன்ற பணப் பரிமாற்றங்களைச் செய்வோரும், செல்போன் உள்ளே நுழைவதற்கான பாஸ்வேர்டுகளில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அதிகபட்ச எழுத்துகளைக் கொண்டதாகவும், எண்கள், பெரிய எழுத்துகள், ஸ்பெஷல் கேரக்டர் போன்ற எளிதாக அறிய முடியாத வகையில் பாஸ்வேர்டை பயன்படுத்துவதும், அவ்வப்போது மாற்றுவதும் சிறந்தது.
செல்போன் உபயோகிக்கப்பாளர்கள் அவ்வப்போது 'சாப்ட்வேர் அப்டேட்' வரும்போது, உடனுக்குடன் செய்துவிடுவதாலும் சைபர் குற்றங்களில் இருந்துத் தப்பிக்கலாம்'' என்கிறார் ஹர்ஷா இ.தென்னரசு.