முகப்பு
தினமணி கதிர்

கடலுக்குள் நடனம்!

கடல் மாசு அதிகரிப்பு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக, ராமேசுவரம் கடலில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் ஆராதனா, பதினான்கு வயதான அஸ்வின்பாலா ஆகிய இரண்டு பேரும் மூச்சைப் பிடித்தவாறு ஒருசில நிமிடங்கள் நடனமாடினர்.

Updated On : 4 மே, 2025 at 12:18 AM
பகிர்:
Updated On : 3 மே, 2025 at 10:39 PM

கடல் மாசு அதிகரிப்பு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக, ராமேசுவரம் கடலில் 20 அடி ஆழத்தில் நீருக்கடியில் பதினொன்று வயதான தாரகை ஆராதனா, பதினான்கு வயதான அஸ்வின்பாலா ஆகிய இரண்டு பேரும் மூச்சைப் பிடித்தவாறு ஒருசில நிமிடங்கள் நடனமாடினர்.

உலக நடன தினமான ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதுகுறித்து தாரகை ஆராதனா கூறியது:

Advertisement

'கடலுக்குள் செஸ் ஆடுதல், சைக்கிள் ஓட்டுதல், பிரத்யேக நோட்டு புத்தகத்தில் எழுதுதல் போன்ற சாதனைகளைச் செய்துவருவதுடன் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஸ்குபா டைவிங் பயிற்சியையும் அளித்து வருகிறார் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த எனது தந்தை அரவிந்த் தருண்ஸ்ரீ. அவர் கடலுக்குள் இரண்டு காதல் திருமணங்களையும் நடத்தியுள்ளார்.

அவர்தான் எனக்கு கடலுக்கு அடியில் பயணிக்க ஸ்குபா டைவிங் கற்றுகொடுத்தார். பரத நாட்டியம், திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுதல் ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்று வருகிறேன்.

Updated On : 3 மே, 2025 at 10:43 PM

கடலில் நடனமாட ராமேசுவரம் அக்காமடத்துக்கு அருகில் பனந்தோப்பு என்னும் இடத்தை எனது தந்தை தேர்ந்தெடுத்தார். அவர் அங்கே 'ஸ்குபா டைவிங்' பயிற்சி வழங்க பள்ளி ஒன்றைக் கட்டிவருகிறார். கடலுக்குள் பவள பாறைகள் சூழ்ந்த இடத்தின் நடுவே வெள்ளி மணல் திடல் 20 அடி ஆழத்தில் இருக்கிறது.

என்னைப் போன்ற சிறார்களுக்கு 20 அடி ஆழம் ஆபத்துதான். எனக்கு ஸ்குபா டைவிங் தெரியும் என்பதால் அப்பா என்னை நடனம் ஆடச் சொன்னார். என்னுடன் எனது உறவினரான அஸ்வின் பாலாவையும் ஆடச் செய்தார்.

கரையிலிருந்து படகில் நடனம் ஆட வேண்டிய இடம் வரை பயணித்தோம். முதலில் பரதநாட்டிய உடைகளை அணிந்து, கடலில் குதித்து மணல் பரப்பை அடைந்தேன். மூச்சு முட்டும் வரை பரதநாட்டியம் ஆடி, 'இனி தாக்கு பிடிக்க முடியாது' என்ற நிலையில் கடலின் மேற்பரப்புக்கு வந்தேன்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்துகொண்டு திரைப்படப் பாடலுக்குப் பொருத்தமான உடைகளை அணிந்து கொண்டு இருவரும் கடலில் குதித்து மணல் வெளிக்கு மூழ்கிச் சென்று மூச்சு முட்டும் வரை நடனம் ஆடி மேலே வந்தோம். இவற்றை எனது தந்தை கடலுக்குள்ளிலிருந்து விசேஷ காமிரா கொண்டு படம் பிடித்தார்.

கடலுக்குள் நடனத்தை உடல் பயிற்சியாகவும் பயிலலாம் என்ற கருத்தைப் பரப்புவதற்காகவும், கல்வி முறைகளில் நடனத்தை ஒரு பாடமாக வைக்க வலியுறுத்தவும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி கடலுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன், கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு என்ற 'தீம்'களையும் இணைத்துகொண்டோம்'' என்கிறார் தாரகை ஆராதனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.