இந்தியாவின் ஒரே ஆண் நதி
'பிரம்மபுத்ரா' நதியே நாட்டில் உள்ள ஒரே ஆண் நதி. இதன் பொருள் 'பிரம்மாவின் மகன்'. 2,900 கி.மீ. நீளம் கொண்டது. திபெத்தின் மானசரோவர் அருகே உற்பத்தியாகிறது. அங்கு அதன் பெயர் ஷொங்போ.
கிழக்கே ஓடி தெற்கே திரும்பி,துபாங்,லுகிட் நதிகளை இணைத்துகொண்டு, பிரம்மபுத்ராவாகி மிசிமி குன்றுகளிடையே ஓடி வந்து அஸ்ஸாமில் நுழைகிறது.அஸ்ஸாமில் 1,350 கி.மீ. ஓடி அஸ்ஸாமின் வாழ்வுக்கு ஜீவிதமாக உள்ளது.
அஸ்ஸாம், அருணாசல பிரதேசத்தில் புண்ணிய நதி. சீனா தன் பகுதி பிரம்மபுத்ராவில் புதிய அணை கட்டுகிறது. 'வெள்ளம் வரும்போது அணையிலிருந்து தண்ணீரை சீனா திறந்து விட்டால், இந்தியப் பகுதிகள் பெரும் வெள்ளத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்' என்று இந்திய அரசு கருதுகிறது.
மிகப் பெரிய பச்சை அனகோண்டா பாம்பு
அமெரிக்காவின் மிக வெப்பக் காடுகளில் காணப்படும் நச்சுத் தன்மையற்ற உலகின் மிகப் பெரிய பாம்பு 'அனகோண்டா' என்பதாகும். அமேசான் ஆறு இதன் தாயகம். பெரும்பாலும் நீரிலேயே வாழும். இந்தப் பகுதியில் 'பச்சை அனகோண்டா' அதிகம். இதனை ஆங்கிலத்தில் 'யுனெக்டஸ் முரினஸ்' என அழைக்கின்றனர். மஞ்சள், கரும்புள்ளி அனகோண்டா வகைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை 30 அடி நீளம் வரை வளரும்.
24 அடிக்கு மேல் நீளம் கொண்ட அனகோண்டா கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது 24.6 அடி(7.5 மீட்டர்) நீளம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு 'யூனெக்டஸ் அகாய்மா' என்ற பெயரை சூட்டி உள்ளனர். இதுவே 'உலகின் மிக நீண்ட அனகோண்டா' எனவும் அறிவித்துள்ளனர்.
வேட்டை நுட்பம், திருட்டுதனம், வலிமைக்கு இவை பிரபலம். சேற்று நீரில் பொறுமையாக வேட்டையாடுகிறது. தாக்கப்பட்ட இரையைச் சுற்றி சுருண்டு எலும்புகளை நசுக்கி இரையை முழுமையாக விழுங்குகிறது. மீன்கள், கோழிகள், ஆடுகள், குதிரைகளையும் பதம் பார்க்கும்.
பரவசப்படுத்தும் பலவான் தீவு
நீயூஸ் & வேர்ல்ட் அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டின் உலகின் மிகச் சிறந்த தீவாக 'பலவான்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரே தீவு பலவான். பிலிமாபீலி மாகாணத்தில் அமைந்துள்ள இந்தத் தீவுக் கூட்டத்துக்குள் சுமார் 1780 உள்தீவுகள் உள்ளன.
வட கிழக்கில் மின்டோரா தீவுக்கும் தென் மேற்கில் போர்னியோவுக்கும் இடையில் நீண்டு உள்ளது. தென் திசை கடலுக்கும் சுலு கடலுக்கும் இடையில் உள்ளது. 450 கி.மீ. நீளத்துடன், 60 கி.மீ. அகலத்துடன் சுமார் 2 ஆயிரம் கி.மீ. ஒழுங்கற்ற கடற்கரையை கொண்டது. இங்கு ஆறுமாதம் வறண்ட காலம். மீதி ஆறுமாதம் மழைக் காலம். ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கடும் மழை உண்டு.
இங்கு அழிந்து வரும் கடல் ஆமைகள் அதிகம். கரடுமுரடான சுண்ணாம்புப் பாறைகளால் சூழப்பட்ட ஏழு ஏரிகள், கொரோன் திட்டுகள்,இரண்டு யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள்,கடலுக்கு அடியில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் சதுர கி. மீ. பவழப் பாறைகள்,இயற்கை கடற்காட்சிகள், அழகிய நிலப் பரப்புகள்,ஊதா நிற நண்டுகள், குகைகள் என பல பார்க்க உண்டு. பிலிப்பைன்ஸை சார்ந்திருந்தாலும் தன்னாட்சிப் பகுதி. மார்ச் முதல் ஜூன் வரை சுற்றுலா செல்வதற்கு உகந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.