தினமணி கதிர்

தேங்காய் சிரட்டைக்கு வந்த வாழ்வு...

தேங்காய் சிரட்டை குறித்து....

DIN

வீடுகள், ஹோட்டல்களில் தேங்காய்களைத் துருவி விட்டு சிரட்டையை குப்பை என்று தூக்கி எறிந்து விடுவார்கள். அந்த சிரட்டைகளின் மதிப்பும் தற்போது கூடியுள்ளது.

தேங்காய் விலை அதிகரித்திருப்பதற்கு தேங்காய் விளைச்சல் குறைந்தது மட்டும் காரணம் இல்லை. சிரட்டையை காசு கொடுத்து வாங்கி ஏற்றுமதி செய்து வருவதாலும் சிரட்டையின் தேவை அதிகரித்துள்ளதும்தான் காரணம்.

பேக்கரிகளில், பலகாரம் பொறித்து எடுக்கும் ஸ்நாக்ஸ் கடைகளில் சிரட்டைகளை எரிபொருளாகப் பயன்படுத்திவந்தனர். காஸ் அடுப்புகள், மின்சார அடுப்புகள் வந்துவிட்டதால் சிரட்டைகளின் மவுசு குறைந்துவிட்டது. ஆனால் மறுபடியும் சிரட்டைக்கு முக்கியத்துவம் வந்துவிட்டிருக்கிறது. முன்பு சிரட்டை கிலோ 9 ரூபாய் வரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தவர்கள் தற்போது இரு மடங்கு வரை விலை தருகின்றனர்.

சிரட்டையை எரித்து கிடைக்கும் கரி, வெளிநாடுகளில் நீர் சுத்திகரிப்புக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாலி, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு சிரட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 500 கிலோ வரை ஏற்றுமதியான சிரட்டைகள், இப்போது 2000 கிலோ வரை ஏற்றுமதியாகின்றன. முகவர்களும் சில்லறை விற்பனையாளர்களும் ஒரு கிலோ சிரட்டைக்கு ரூ.18 வரை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது கேரளத்தில் அதிகம் சிரட்டைகள் விற்பனை ஆகின்றன. தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் சிரட்டை விற்பனை தொடக்க நிலையில் உள்ளது.

பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சிரட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் தும்கூரில் சிரட்டைகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. கேரளத்தில் சுமார் 40 நிறுவனங்கள் சிரட்டையைக் கரியாக்கி ஏற்றுமதி செய்துவருகின்றன. விரைவில், சிரட்டைகளுக்கு பெரிய அளவில் தேவை அதிகரிக்கும். ஆகவே, பத்திரமாக வைத்தால் வருமானம் நிச்சயம்.

இதுகுறித்து வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒலகாசியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ஆர்.வி.ஹரிகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''முதலில் அடுப்புகளில் எரிக்கவே வாங்கிக் கொண்டு சென்றனர். தற்போது காங்கேயம் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கும் ஊதுவத்தி தொழிற்சாலைகளில் ஊதுவத்திகள் தயாரிக்க ஒருபொருளாகவும் சேர்க்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் ஏற்றுமதிக்காகவும் வாங்கிச் செல்கின்றனர். முதலில் ரூ.2-க்கு விற்பனையாகத் தேங்காய் சிரட்டைகள் தற்போது தரத்தைப் பொறுத்து பத்து ரூபாய்க்கு மேல்விற்பனையாகிறது'' என்கிறார்.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT