சக்தித் திருமகனுக்கு ஷங்கர் பாராட்டு!
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் அவரின் 25-ஆவது படமாக 'சக்தித் திருமகன்' கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
'அருவி', 'வாழ்' ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களிடத்திலும் இப்படத்துக்கு நல்ல 'ரீச்' கிடைத்தது.
இவ்வாறிருக்க, அக்டோபர் 24-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் சக்தித் திருமகன் வெளியானது. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை ஓ.டி.டி.யில் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஷங்கர், 'ஓ.டி.டி.யில் சக்தித் திருமகனைப் பார்த்தேன். சிந்தனையைத் தூண்டக்கூடிய படம். இயக்குநர் எழுப்பியிருக்கும் கேள்விகள் எனக்கு மிகவும் நியாயமானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன.
நிறைய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் தீவிரம் எதிர்பாராத வகையில் கூடிக்கொண்டே சென்றது. அருண் பிரபு, விஜய் ஆண்டனி என மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்!'' என்று பதிவிட்டிருக்கிறார்.
விஜய்யுடன் பிரதீப் சந்திப்பு!
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'டுயூட்'.
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் டுடே', 'டிராகன்' பட வெற்றியைத் தொடர்ந்து 'டுயூட்' படமும் ரூ.100 கோடியைக் கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது.
இந்த ஹாட்ரிக் வெற்றி குறித்துப் பேசியிருக்கும் பிரதீப் ரங்கநாதன், 'முதல் மூன்று படத்துக்கு ஹாட்ரிக் 100 கோடி வசூல் வெற்றி. இதற்கு என்னை வாழ்த்தின எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்த வெற்றிக்குக் காரணம் நான் இல்லைங்க, நீங்கதான். நீங்க எனக்குக் கொடுத்த ஆதரவு, அன்புக்கு, என்னை உங்க வீட்ல ஒருத்தனாகப் பார்த்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
தமிழ் மக்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழி ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.'' என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். படக்குழுவினருக்கும் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, 'டிராகன்' படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். 'டிராகன்' படத் தயாரிப்பாளரும், விஜய்யின் 'கோட்' படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.
விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப், 'கலக்குறீங்க ப்ரோ' தளபதியிடமிருந்து வந்த அந்த வார்த்தை எனக்குள் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'இது எங்களின் டிராகன் மொமன்ட். எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி சார். வாழ்வின் அர்த்தமுள்ள தருணம் இது!' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சாணம் அள்ளிய கைகளோடு விருது - நித்யாமேனன்!
நடிகை நித்யா மேனன் நடித்திருந்த 'இட்லி கடை' திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்துக்காகக் கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மேனன் பெற்றிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளைக் கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும், அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் நித்யா மேனன், 'இது நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. என் நகங்களில் மண்ணுடன் நான் தேசிய விருது விழாவுக்குச் சென்றேன். அதற்கு முந்தைய நாள் படப்பிடிப்பில் என் கைகளால் சாணத்தை அள்ளினேன். இந்த விஷயம் முழுவதும் கவித்துவமாக இருந்தது.
நான் என் நண்பர்களிடம், 'கை நகங்களில் சாணம் படிந்திருந்ததோடு சென்று குடியரசுத் தலைவரிடம் நான் விருது பெற்றேன்' எனக் கூறினேன். இந்தப் பதிவில் இருப்பவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நல்ல நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் நாங்கள் எப்போதும் குடும்பமாக இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.