ஸ்பெயின் நாட்டில் இரண்டு வருடம் தங்கியிருந்து வேலை செய்து வந்த என்னுடைய 26 வயது மகன், இப்போது சென்னை திரும்பி விட்டான். அங்குள்ள சாப்பாடு அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ருசியின்மை, வயிற்றோட்டம், அஜீரண பேதி, பித்த வாந்தி, உணவு செரியாமை என்றெல்லாம் கஷ்டப்படுகிறான். வீட்டில் எந்த உணவு கொடுத்தால் இந்த உபாதைகளைக் குணப்படுத்தலாம்?
மல்லிகா, சென்னை80.
பத்தியச் சமையலில் கறிவேப்பிலைத் துவையலுக்கு முக்கிய இடமுண்டு. வயிற்றோட்டம், அஜீரண பேதி, சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் வேகம் ஏற்படுதல்... இப்படிப்பட்ட குடல் நோய் உள்ளவர்கள் இத்துவையலுக்கு முதலிடம் கொடுக்கலாம். மிகக் கனமான விருந்துண்ண விரும்பும் சாப்பாட்டு ரசிகர்கள், உண்ண ஆரம்பிக்கும் முன் இதன் துவையல் சேர்த்து ஓரிரு கவளம் ஏற்றுப் பின் மற்றவற்றைத் திருப்தியாகச் சாப்பிடுவதைக் காணலாம். பத்திய உணவாக இதன் துவையலைத் தயாரிக்கும்போது சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் கூட்டி அரைப்பது நல்லது.
மகனுக்கு ஏற்பட்டுள்ள ருசியின்மை, வயிற்றோட்டம், பித்த வாந்தி, உணவு செரியாமை, வயிற்றுளைச்சல் குணமாக, இந்தத் துவையலைச் சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் கலந்து, சிறிது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து முதல் உணவாகச் சாப்பிட, காலையில் கொடுக்கவும்.
இதேபோல், இலையை நிழலிலுலர்த்தி அத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு, பெருங்காயம் இவற்றைக் கூட்டிப் பொடித்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பிக்கும்போது முதல் சில கவளங்களுடன் நெய் சேர்த்துப் பிசறிச் சாப்பிடலாம். மற்ற சாமான்கள் எல்லாம் சேர்த்து ஒரு பங்கு, கறிவேப்பிலைத் தூள் ஒரு பங்கு என்ற அளவில் ருசிக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பசியும் ஏற்படும்.
வெந்தயக் கீரையை வேக வைத்து வெண்ணெய் போட்டு வதக்கிச் சாப்பிட பித்தக் கிறுகிறுப்பு, பித்த வாந்தி குறையும். வயிற்று உப்புசம், பசியின்மை, ருசியின்மை நீங்கும். காங்கை, வறட்டு இருமல், கபம் உறைந்து வெளியேறாமல் ஏற்படும் வறட்டு இருமல் ஆகியவற்றைத் தீர்க்கும்.
குடலோட்டமுள்ளவர்கள் தினமும் இரவில் தயிரில் வெந்தய விதையை ஊற வைத்து மறுநாள் காலை சிறிது தேன் சேர்த்தோ சர்க்கரை சேர்த்தோ அல்லது அப்படியோ சாப்பிடுவதுண்டு. வயிற்றுப்போக்கு, அழற்சியுள்ளவர்கள் அரிசியுடன் இதைச் சேர்த்து ஆட்டுக்கல்லில் ஆட்டி மறுநாள் (மாவு புளித்ததும் வெந்தயத்தின் கசப்பு குறைந்து விடும்) தோசையாக வார்த்துச் சாப்பிடுவதுண்டு. உளுந்தும் சேர்ப்பதுண்டு.
ஹிங்க்வஷ்டக சூரணம் பொரித்த பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கருஞ்சீரகம், சீரகம், இந்துப்பு என்று எட்டுச் சரக்குகள் வகைக்கு 20 கிராம். இவற்றை லேசாக வறுத்துக் கொண்டு தூளாக்கி அரை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடும்போது முதல் கவளத்தில் நெய்யுடன் கலந்து பிசறிச் சாப்பிடலாம். தனித்து மோரிலும் தேனீலும் சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தி தரும். அஜீரண பேதி, வயிற்று உப்புசம் நீங்கும்.
இஞ்சி முரப்பா முரப்பா என்பது யுனானி பெயர். உதிரும் பதத்தில் கெட்டியாகக் காய்ச்சிய பாகு பதத்தில் எடுப்பது முரப்பா. இஞ்சிச்சாறு 100 மில்லி, சர்க்கரை அல்லது கற்கண்டு அல்லது வெல்லம் 300 கிராம். இதைப் பாகாக்கி மைசூர் பாகு பதத்தில் இறக்கி வில்லைகளாக்கிக் கொள்ளலாம்.
இஞ்சியின் சூடும் காரமும் தாங்காதவர்கள் அதே அளவில் இஞ்சிச் சாற்றுடன் பசுவின் பால் 200 மில்லி லிட்டர் சேர்த்துப் பாகாக்கிக் கொள்வர். பித்த மயக்கமுற்றவர்களும் குடலோட்டமுள்ளவர்களும் இரவில் படுக்கும் முன் இதில் 1 3 கிராம் அளவுள்ள வில்லைகளைச் சாப்பிட்டு, மேல் காய்ச்சிய பால் அல்லது வெந்நீர் சாப்பிடலாம்.
தாளீசாதி வடகம், தாடிமாஷ்டகச் சூரணம், காலசாகாதி கஷாயம், வில்வாதி குளிகை, முஸ்தாரிஷ்டம், வில்வாதி லேஹியம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் மகனுக்குப் பலன் அளிக்கக் கூடியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.