மலையாளப் படங்களில் 1950களில் பிரபலமான நடிகையாக இருந்த பிரேமாவுக்கும், கே.பி. மேனனுக்கும் 1962, செப்டம்பர் 23ஆம் தேதி மகாலெட்சுமி என்ற ஷோபா பிறந்தார். சந்திரபாபுவின் 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'உத்ராத ராத்திரி' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நான் 1977இல் இயக்குநர், தயாரிப்பாளராகி என் 'அச்சாணி' நாடகத்தைப் படமாக்க முடிவு செய்தபோது, என் மலையாளப் பட 'அச்சாணி'யில் நடித்த ஆரம்ப கால ஹீரோயின் சுஜாதாவை சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டர் அருகே இருந்த ஒரு வீட்டில் சந்தித்து, அதே பாத்திரத்தில் நடிக்கச் சொன்னேன்.
'கே. பாலசந்தரிடம் ஒப்பந்தத்தில் இருக்கிறேன். அவரிடம் அனுமதி பெற்றால் நடிக்க விரும்புகிறேன்'' என்று கூறினார்.
'கே. பாலசந்தர் என் வேண்டுகோளை ஏற்க மாட்டார்' என்று முடிவு செய்த நான், என் நாடகத்தில் அறிமுகமான படாபட் ஜெயலெட்சுமியைச் சந்தித்து, கால்ஷீட் வாங்கித் துவக்க நாளை முடிவு செய்தேன்.
படாபட்டும் கால்ஷீட்டைப் பிரச்னையாக்கினார். ஒன்றும் புரியாத நிலையில் 'அச்சாணி'யில் முத்துராமனுடன் நடிக்க இருந்த லட்சுமியை தெலுங்குப் படப்பிடிப்பில் வாஹினி ஸ்டூடியோவில் சந்தித்து, என் பிரச்னையைச் சொன்னேன். அங்கே இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ், பாலுமகேந்திரா இருவரும் இருந்தார்கள். லட்சுமி என்னிடம், 'காரைக்குடி, ஒரு நல்ல ஆர்ட்டிஸ்டை நான் சொல்கிறேன். புதுமுகம் என்று யோசிக்க வேண்டாம். நல்ல நடிகை'' என்று எனக்கு ஷோபாவைப் பற்றிச் சொல்லி, பாலு மகேந்திராவிடம் சிபாரிசு செய்தார்.
அவரும் உடனே டெலிபோனில் ஷோபா அம்மாவிடம் என்னைப் பற்றிச் சொல்லி சிபாரிசு செய்தார்.
நான், கே. கே. நகரில் ஓர் அமைதியான தேவதையாக இருந்த ஷோபாவைச் சந்தித்தேன். 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன்.
படப்பிடிப்பில் ஷோபா இருக்கும் இடம் தெரியாது. கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பார். 'ஷாட் ரெடி' என்றால் அவர் நடிக்கத் தயாராவார். ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால், என்னிடம் தனியாக வந்து கேட்பார். ஒரு சமயம் 'அங்கிள், நான் உங்கள் மலையாள வெற்றிப் படம் 'அச்சாணி' பார்த்தேன். அதில் இந்தக் காட்சி எல்லாம் இல்லையே?''என்று ஒரு குழந்தை போலக் கேட்டார்.
தமிழில் சில மாற்றங்கள் செய்திருப்பதாகக் கூறி நடிக்கச் சொல்லுவேன். முதல் நாள் ஷோபாவுக்கு அண்ணன் ஸ்ரீகாந்த் இறந்த செய்தி வர, அவரைப் போகவிடாமல் கோபாலகிருஷ்ணன் தடுக்கும் காட்சி. மூன்று நிமிடம் ஓடும் அந்தக் காட்சிக்கு ஒரே ஷாட் வைத்ததும் வி. கோபாலகிருஷ்ணன் என்னைத் தனியே கூப்பிட்டு, ' ஷோபா புதுமுகம். இவ்வளவு நீளமான ஷாட் தேவையா? அவள் மிஸ் பண்ணினால் ஃபிலிம் வேஸ்ட், டயம் வேஸ்ட். தனியாக எடுங்கள்!'' என்று கூறினார்.
'இரண்டு தடவை பார்க்கலாம்'' என்று கூறிவிட்டு எடுத்தேன்.
ஒரே ஷாட்டில் ஷோபா ஊதித் தள்ளினார். வி. கோபாலகிருஷ்ணன் கைத்தட்டி வாழ்த்தினார். அவரும் ஒரு காலத்தில் ஹீரோ இல்லையா!
இதன் பின் டைரக்டர் பி. மாதவனின் 'ஏணிப்படிகள்' படப்பிடிப்பில் ஷோபாவைச் சந்தித்தேன். பாதி மேக்கப் போட்ட நிலையில் என்னிடம் வந்து, ' அங்கிள், கே. பாலசந்தரும் நீங்களும் எனக்கு ஏணிப்படிகள்'' என்று சொன்னதும், அமைதியான ஷோபா எப்படி அருமையாகப் பேசுகிறார் என ஆச்சரியப்பட்டேன்.
1978இல் கே.பாலசந்தர் இயக்கிய 'நிழல் நிஜமாகிறது' வெளியாக இரண்டு மாதங்கள் தாமதமான போது, என் படம் முந்திக் கொண்டது. நான் 'அறிமுகம் ஷோபா' என்று 'அச்சாணி' டைட்டிலில் போட்டேன். என் படம் இரண்டு ஊர்வசிகள் நடித்த ஒரே படமானது.
பிறகு துரையின் 'பசி' படத்தில் தேசிய விருது பெற்றார். இவருக்கும் பாலு மகேந்திராவுக்கும் ரகசியத் திருமணம் என்ற கிசுகிசுப்பில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் நிலையில் 1980, மே 1இல், தமது 17ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இவர் தாயார் பிரேமாவும் அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். திரை வானில் ஜொலித்த இரண்டு நட்சத்திரங்களும் ஒளியிழந்து உதிர்ந்து போயின.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.