அஸ்ஸாமில் உள்ள மிகப் பெரிய நதித் தீவு மஜுலி. தெற்கிலும் கிழக்கிலும் பிரம்மபுத்ராவாலும் மேற்கில் சுபன்சிரி நதியாலும் வடக்கே பிரம்மபுத்ரா கிளை நதிகளாலும் ஆண்டுதோறும் இது பாதிக்கப்படுகிறது. மஜுலி உள்ளேயே டோரியா, செர்கோபீடியா என ஆறுகள் ஓடுகின்றன. இதன் பரப்பளவு 880 சதுர கி.மீ. ஆகும். கெளகாத்தியிலிருந்து வடக்கே 250 கி.மீ பயணம் செய்து ஜோர்காட்டை அடைந்து அங்கிருந்து மஜுலிக்கு படகில் பயணிக்க வேண்டும்.
1750-ஆம் ஆண்டில் பிரம்மபுத்ராவில் பெரும் வெள்ளம் வந்து உருவானதே மஜுலி தீவு. ஜோர்காட்-மஜுலி இடையே ஒரு நாளைக்கு ஆறு தடவை படகுகள் சென்று திரும்பும். மூடுபனி நிறைந்த காலையில் வெறும் காலுடன் முன்முனி தனது தோளில் மரக்கன்றுகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் படகில் ஏறுகிறாள்.
நதியின் நீரோட்டத்தை அலட்சியம் செய்து இவர் பயணம் செய்துவருகிறார். 'வன ராணி' என அழைக்கப்படும் அவர், தரிசு நிலங்களை பசுமையான மொலாய் வனப் பகுதியாக மாற்றிய இந்தியாவின் வன மனிதன் ஜாதவ் பங்கியின் மகள். இந்த வனராணிக்கு பத்மஸ்ரீ பட்டத்தை மத்திய அரசு வழங்கி, கெளரவம் தந்தது.
அவர் கூறியது:
'எனது பயணம் 2022-இல் தொடங்கியது. சுமார் 60 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளோம். மஜுலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூர்விக உயிரினங்களை மட்டுமே பயன்படுத்தி, மீண்டும் வனப் பகுதியை வளர்ப்பது தான் எங்களுடைய திட்டமாகும். நாங்கள் இத்திட்டத்தை தொடங்கியபோது மரங்கள் இல்லை.
இப்போது மெதுவாக நிலம் மாறி வருகிறது.
தினமும் எங்களது குழுவினர் உணவுப் பொருள்கள், மரக் கன்றுகள், கருவிகள், விதைகளை படகில் ஏற்றி நதியைக் கடந்து நடவு மண்டலங்களை அடைகிறோம். மார்ச் முதல் மே வரை நடவு பகுதியில் உயிர் வாழும் விகிதம் அதிகமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு 3000 கன்றுகளை நடுகிறோம்.
இந்தக் குழு மொலாய் வனப் பகுதிகளில் விதைகளைச் சேகரித்து நர்சரிகளில் அவற்றை வளர்த்து, அரிப்பு ஏற்படக்கூடிய மணல் திட்டுகளிலும் ஆற்றுத் தீவுகளிலும் நடுகிறது. அவை எப்படியுள்ளன எனப் பார்வையிட்டு, வளர்ச்சியைக் கண்காணிக்கிறோம். தேவைப்படும் இடங்களில் மீண்டும் நடவும் செய்கிறோம். 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு மில்லியன் மரக் கன்றுகளுக்கு மேல் நட்டுவிட்டோம்.
தொடக்கத்தில் எங்கள் முயற்சிக்கு விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு வந்தது. 'விலங்குகள் வரும். பயிர்கள் நாசமாகும்' என்பது அவர்கள் வாதம். இப்போது அவர்கள் மாறிவிட்டனர்.
பூமியைக் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல; இங்கேயே வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்கிறார் முன்முனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.