தினமணி கதிர்

சோ - நான் சந்தித்த பிரபலங்கள் - 23

சோ பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒற்றை எழுத்தில் பெயர் கொண்டு நாடகம், சினிமா, நகைச்சுவை, அரசியல் நையாண்டி, நடிப்பு, கதாசிரியர், 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் என்று சுற்றி அடித்த சூறாவளி சோ. மனதில் உறுதியுடன் என்ன தோன்றுகிறதோ அதை மடை திறந்த வெள்ளம் போலப் பேசக் கூடியவர்.

இவர் 'முகமது பின் துக்ளக்' நாடகத்தைத் திரைப்படமாக்கியபோது டைரக்ஷன் முயற்சி என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தன் பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் முடித்தார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், 1962 முதல் டி.டி.கே. கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.

14 திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி, நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில், 'மனம் ஒரு குரங்கு', 'உண்மையே உன் விலை என்ன?', 'யாருக்கும் வெட்கமில்லை', 'மிஸ்டர் சம்பத்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ராமநாத அய்யர் என்பவர் மிகச் சிறந்த வழக்கறிஞர். அவரிடம் ஒரு கொலைகாரன் வந்து, 'ஐயா, இரண்டு கொலைகள் செய்த என்னைக் காப்பாற்றுங்கள்... எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்'' என்றான். 'கொலைகாரர்களைக் காப்பாற்றும் தொழிலா செய்ய வேண்டும்'' என்று வருந்தியவர், அன்று முதல் கோட் போடவில்லை: 'காசியில் பிச்சை எடுத்தாவது சாப்பிடுவேன். அநியாயத்தை நியாயப்படுத்த மாட்டேன்'' என்று சொன்ன ராமநாத அய்யரின் வம்சாவளி பேரன்தான் சோ.

சட்டம் குறித்து 'தி லா லெக்சிகன்' என்ற புத்தகத்தை எழுதினார். அதை பாரத நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி பல இடங்களில் குறிப்பிட்டார்.

'காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது 28 ரூபாய். அத்துடன் என் 'துக்ளக்' பத்திரிகை!'' என்று சோ பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து என்னுடைய மூன்று படங்களில் நடித்தார். இவர் நாடகம் எழுதிய காலத்தில் நானும் எழுதினேன். ஒரு நாள், ராஜா அண்ணாமலை மன்றத்தில் அவர் நாடகம் நடந்த போது என்னை மேக்கப் அறைக்குக் கூப்பிட்டு, 'காரைக்குடி உங்ககிட்ட மட்டும் பேனா இல்லை... எங்கிட்டேயும் இருக்கு. ஞாபகம் வச்சுக்குங்க!'' என்றார். நான் உடனே 'சோ சார்... உங்ககிட்ட இருப்பது தங்கப் பேனா. என்னிடம் இருப்பது பிளாஸ்டிக் பேனா'' என்றேன்.

இன்னொரு நாள் என்னைக் கூப்பிட்டு, 'என் துக்ளக்கில் உங்க நாடகங்களை 'ஆஹா' 'ஒஹோ' என்று புகழ்ந்து மகேந்திரன் விமர்சனம் எழுதுகிறாரே, எப்படி?'' என்று கேட்டார்.

'நானும் புகழ் பெற்ற டைரக்டரான மகேந்திரனும் மிக நெருங்கிய நண்பர்கள்'' என்று கூறினேன். ஒரு சமயம், என் பால்ய கால நண்பர் பழ. கருப்பையாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து, துக்ளக் இதழில் கட்டுரைகள் எழுதக் காரணமாக இருந்தேன்.

மனோரமாவை சோ, 'பெண் சிவாஜி' என்பார். என் படத்தில் மனோரமாவிடம் 'சோடா'' என்று சோ தர, மனோரமா பதிலுக்கு 'போடா'' என்று சொல்லுவது போல வசனம் எழுதியிருந்தேன். என்னிடம் மனோரமா வந்து, 'சோ சாரை நான் போடா என்று சொல்ல மாட்டேன்'' என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால், 'மக்கள் ரசிப்பார்கள்'' என்று மனோரமாவைச் சொல்ல வைத்தார் சோ. மக்களும் தியேட்டரில் 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' படத்தில் இந்தக் காட்சியை ரசித்தார்கள்.

ஏவி.எம். பொன் விழாவில் எல்லோருக்கும் விருது கொடுக்கப்பட்ட போது தமிழக முதல்வர் கருணாநிதி எனக்கும் விருது கொடுத்தார். அப்போது மேடையில் இருந்த சோ, 'உங்ககிட்டேயும் தங்கப் பேனா இருக்கு'' என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.

இவர் பத்திரிகைத்துறைப் பணிக்காக 1985-இல் மேவாரைச் சேர்ந்த ராஜா மஹாராணா வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-இல் வீரகேசரி விருதும் , 1994-இல் கோயங்கா விருதும், 1998-இல் நசிகேதஸ் விருதும் பெற்றார்.

பகீரதன் எழுதிய 'தேன்மொழியாள்' நாடகத்தில் ராமசாமி என்பவர் 'சோ' என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்தார். அது முதல் ராமசாமி 'சோ'வாகி, பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பினராகி, 1999 -ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை பணியாற்றி, 2016 டிசம்பர் 7-இல் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: 10 பயணிகள் காயம்

அனைத்து கட்சிக் கூட்டம்! தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பு! | DMK | SIR

பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி

இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

SCROLL FOR NEXT