தினமணி கதிர்

நான் என்றும் நாடகக்காரன்தான்!

நாடகம், நாடக இயக்கம், திரைப்படம், நடிப்பு என்று பல்வேறு தளங்களில் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வருபவர் நாடகச்சுடர், கலைமாமணி பேராசிரியர் மு. ராமசாமி.

தினமணி செய்திச் சேவை

அருள்செல்வன்

நாடகம், நாடக இயக்கம், திரைப்படம், நடிப்பு என்று பல்வேறு தளங்களில் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வருபவர் நாடகச்சுடர், கலைமாமணி பேராசிரியர் மு. ராமசாமி. 35 நாடகங்கள், 45 நூல்கள் எழுதியவர் .

கல்விப்புலப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், கலைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அண்மையில் ஒரே நாளில் வெளிவந்த 'ப்ரீடம்' , 'மாயக் கூத்து' என்ற இரண்டு படங்களிலும் மு.ராமசாமி நடித்துள்ளார். அவரைச் சந்தித்தபோது நீங்கள் திருநெல்வேலிச் சீமைக்காரரா ?

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது எனக்கும் பொருந்தும். எனக்குப் பூர்விகம் திருநெல்வேலி என்றாலும், மதுரையோ, தஞ்சையோ, சென்னையோ வாழ்கிற ஊரையே சொந்த ஊராகக் கொண்டவன் நான். இதுவே எனது கொள்கை.

தமிழ் இலக்கியம் படித்தவர்... உங்களுக்குள் நாடகம் எப்படி வந்தது?

இது திடீரென்று வந்ததில்லை. நான் மூன்றாம் வகுப்பு படித்த போதே நாடகத்தில் நடித்திருக்கிறேன். அப்போது , போரஸ் மன்னனின் மந்திரியாக நடித்த ஞாபகம் உள்ளது. என் தாத்தா வீட்டில் குடியிருந்த குடும்பத்தில் உள்ள அக்காமார்கள் எங்களையெல்லாம் வைத்து வீட்டு முற்றத்திலேயே நாடகம் நடிப்பார்கள். அப்போது அவர்களுடன் கூட சேர்ந்து நடிப்பதுண்டு. என் மாமா கோவிந்தன், அத்தான் முத்துகிருஷ்ணன் இருவரும் நாடகக்குழுக்களில் இயங்கி வந்தார்கள். அவர்களுடன் நான் கோயில் மைதானத்தில் நடந்த நாடகத்தில் நடித்த ஞாபகம் உள்ளது.

நான் எம்.ஏ. படித்தபோது 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தை தமிழில் இங்கர்சால் என்பவர் உருவாக்கினார். அதில் காஸ்காவாக நடித்தேன். சீசராக நடித்த அவர், 'சொர்க்கம்' படத்தின் சிவாஜியைப் பின்பற்றி நடித்திருப்பார். நான் நாடகத்தில் நடித்ததைப் பார்த்து எல்லோரும் நன்றாக இருக்கிறது என்று ஊக்கம் கொடுத்தார்கள். தமிழ் இலக்கியம் படித்தாலும் இப்படி நாடகம், நடிப்பு என்பது என் சிறுவயதிலிருந்தே எனக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

தமிழக நாடகங்கள் பற்றிய பதிவில்லாததால் அவற்றை எல்லாம் பதிவு செய்து வந்தேன். இப்படி வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக் கொடி, கட்டபொம்மன் போன்று பல நாடகங்களைப் பதிவு செய்தேன்.

மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முனைவர் பட்டத்துக்காக முதலில் 'தமிழக நாட்டார் நாடகங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்தேன். ஒருமுறை தோற்பாவைக் கூத்து பார்க்க பேராசிரியர் முத்து சண்முகம் அவர்களை அழைத்துச் சென்றேன். அவரது அறிவுறுத்தலுக்குப் பிறகு தோற்பாவை நிழற்கூத்தை மட்டும் தனித்த ஆய்வாக மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

நவீன நாடகத்திற்குள் எப்படி வந்தீர்கள்?

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஜி. ராமானுஜம் அழைப்பின் பேரில் ஜி.சங்கரப் பிள்ளையின் 'மீனிங் ஃபுல் தியேட்டர்' என்ற உரையைக் கேட்டேன். அதன் பிறகு நாம் நடத்துவதெல்லாம் நாடகம் அல்ல என்று தோன்றியது. அது எனது வாழ்க்கையில் பெரிய திறப்பை அளித்தது.

1977 ஜூனில் காந்திகிராமத்தில் ராமானுஜம் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறை, நவீன நாடகங்கள் பற்றி எனக்கு ஒரு தூண்டுதலைக் கொடுத்தது.

1978 நவம்பர் 1 முதல் ஜனவரி 10 வரை 70 நாள்கள் பன்சிகவுல் நடத்திய பயிற்சி முக்கியமானது. அதில் 'பிணந்தின்னும் சாத்திரங்கள்' நாடகத்தில் துரியோதனனாக நான் நடித்தேன்.

1980 செப்டம்பர் 1 முதல் 10 வரை பாதல் சர்க்கார் நடத்திய 'மூன்றாம் அரங்கு' பயிற்சியிலும் அதன் அடுத்த கட்ட பயிற்சியிலும் கலந்து கொண்டேன் . பெங்களூரில் தேசிய நாடகப் பள்ளி சார்பில் நாடகத் தொழில்நுட்பம் சார்ந்த 28 நாள் பயிற்சி நடைபெற்றது. இயக்குநராக ராமமூர்த்தி நடத்தினார். இப்படி நான் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறைகள் நவீன நாடகத்தை நோக்கி என்னை மேலும் தீவிரப்படுத்தி இதில் ஈடுபட வைத்தன.

கிரேக்கத்தில் நாடகத்திற்கு கி.மு. 420-லிருந்து வரலாறு உண்டு. நமக்கு அப்படிப்பட்ட பதிவுகள் எதுவுமே இல்லை. நிறைய தவற விட்டு விட்டோம். ஆங்கிலேயர் காலத்தில் புராண இதிகாச நாடகங்கள் தான் நடைபெற்றன. திராவிட இயக்கம் தலையெடுத்த பிறகுதான் அந்தப் புராண இதிகாசக் கருத்து

களுக்கு எதிர்கருத்தாக, சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு என்று கருத்துகள் நாடகங்களில் வர ஆரம்பித்தன. அதில் ஒரு பிரச்சார கோணம் இருந்தாலும் அது பெரிய மாற்றம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நாடக இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் ?

1978 -இல் நிஜ நாடக இயக்கம் தொடங்கியதிலிருந்து இயங்கி வருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடக விழா நடத்தி வருகிறேன். இன்றும் பல அமைப்புகளின் அழைப்பின் பேரில் நாடகப் பயிற்சி அளித்து வருகிறேன்.

திறந்தவெளியில் நாடகம் நடத்துவது ஏன்?

வசதி கருதித்தான் திறந்தவெளியில் நடக்கின்றன. சில நேரம் வசதிகள் இல்லாமையாலும் கூட என்றும் சொல்லலாம். நான் அரங்குகள், திறந்தவெளிகள் இரண்டிலும் நடித்திருக்கிறேன். திறந்த வெளியில் நடத்துவது ஒரு சவால்.

பின்புலப் பொருள்கள் இல்லாத நிலையில் கற்பனையைக் கூடுதல் ஆக்கிக் கொண்டு அதற்கு ஏற்ற உடலசைவுகளை வெளிப்படுத்தி, வசதிக் குறைவாகும் போது இருக்கிற சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு நடிக்க வேண்டும். அப்படியே நாடகத்தையும் நடத்த வேண்டும்.

திரைப்படத்திற்கும் வந்துவிட்டீர்கள்...

நானாக வரவில்லை அழைத்து வரப்பட்டேன். திரைப்படம் வேறு ஒரு வடிவம். நமக்கு அது சரிப்பட்டு வராது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு முறை

கவிஞர் இளையபாரதியும் கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். 'தென்பாண்டிச் சிங்கம்' தொலைக்காட்சி தொடரில் நடிக்க அழைத்தார்கள். நான் மிகவும் தயங்கினேன். நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். நான் தயங்கியபோது என் துணைவியார், இவ்வளவு தூரம் கேட்கிறார்கள். உங்களை மதித்து வந்திருக்கிறார்கள். நடித்தால் தான் என்ன? அது ஒரு அனுபவமாக இருக்கட்டுமே என்றார்கள்.

அப்படி நான் அதில் வல்லத்தரையன் பாத்திரத்தில் நடித்தேன். எனக்கு எதிராக வாளுக்கு வேலி பாத்திரத்தில் நாசர் நடித்தார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்படவே, அவர் தனது 'தேவதை' படத்தில் நடிக்க வைத்தார். பிறகு 'மாயன்' படத்திலும் அவரது தந்தையாக நடித்தேன். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் பாலா தொலைபேசியில், 'நந்தா' படத்திற்கு அழைத்தார். அடுத்து 'பிதாமகனி'லும் வாய்ப்புக் கொடுத்தார். இப்படி வரிசையாகப் படங்கள் வர ஆரம்பித்தன.

நாடகம் சினிமா ஒப்பிடுங்கள்...

நாடகம் நடிகனின் கலை; திரைப்படம் நெறியாளுநரின் கலை. நடிகன் இல்லாமல் நாடகம் இல்லை. ஒளிப்பதிவுக் கருவி இல்லாமல் திரைப்படம் இல்லை. நாடகத்தில் கடைசி இருக்கைப் பார்வையாளனுக்கு நடிக்க வேண்டும். திரைப்

படத்தில் மிக இயல்பாக நடிக்க வேண்டும். இரண்டும் வெவ்வேறான கலைகள். திரைப்படம் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்க முடிகிற பலம் கொண்டது. நாடகத்தைப்போல் நேரிடைப் பரிவர்த்தனைக்குத் திரைப்படத்தில் வாய்ப்பே இல்லை.

இரண்டையும் ஒப்பிடுவது சரியில்லை. நாடகத்தின் பலம் திரைப்படத்தின் பலவீனத்தில் இருக்கிறது. திரைப்படத்தின் பலம் நாடகத்தின் பலவீனத்தில் இருக்கிறது. அதுதான் உண்மை!

நீங்கள் நடிக்கும்போது உங்களுக்குள் உள்ள பேராசிரியர் எவ்வாறு செயல்படுவார்?

திரைப்படத்தில் நடிக்கும்போது நான் எந்த இயக்குநர் சொல்வதைக் கேட்கும் ஒரு நடிகராக மட்டுமே இருப்பேன். அப்போது நான் நாடக நடிகராகக்கூட இருக்க மாட்டேன். ஏனென்றால், இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள்.

இன்னும் சொல்லப்போனால் புதிய புதிய இளைஞர்களிடம் இயக்கத்தின் நடிக்கும் போது அவர்களிடம் நான் கற்றுக் கொள்கிறேன். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அவர்கள் ஆற்றும் பணி வியக்க வைக்கிறது.

திரைப்படங்களில் உங்கள் தேர்வு எப்படி இருக்கும்?

திரைப்படங்கள்தான் என்னைத் தேர்வு செய்கின்றன என்று சொல்வேன்.

நாடக நடிப்பு, சினிமா நடிப்பு இரண்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாடகம் உருவாக்குவதற்குக் கூட்டு விசை தேவை. அப்போது அந்த ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

நான் பாலா இயக்கத்தில் 'நந்தா' படத்தில் நடிக்கும்போது சற்று உரத்து வசனம் பேசினேன். அவர் ஏன் இப்படி ? இவ்வளவு சத்தம் தேவை இல்லை என்றதும், நான் நாடகத்திலிருந்து வந்தவன்; நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்றேன்.

அப்போதுதான் கூறினார். எனக்குத் தேவையானது வரும் வரை நான் விடமாட்டேன். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அப்படி நான் நடித்த 30 திரைப்படங்களும் எனக்கு அனுபவம் தான். ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்கிறேன்.

நாடகத் துறையில் பணியாற்றியதில் உங்களது திருப்தி தரும் அனுபவம் எது?

1978 -இல் நாடகக் குழுக்களில் ஐந்தாறு சிறு சிறு நாடகங்களை ஒரே நாளில் போடுவோம். அப்படி ஒருமுறை மதுரை திருநகரில் திறந்த

வெளிப் பூங்காவில் நடத்திய நாடகத்தை முடித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒரு சிறுவன் வேகமாக என் அருகில் ஓடிவந்து, இரண்டு ரூபாய் கொடுத்தான். 'என்னப்பா' என்றேன். 'இந்த நாடகத்தில் நீங்கள் நடித்தீர்கள் அல்லவா... உங்களுக்காக' என்றான். உனக்கு ஏன் சிரமம்? அங்கேயே கொடுக்க வேண்டியதுதானே என்றேன்.

அப்போது 'உங்கள் நாடகத்தைப் பார்த்த போது என் அக்கா கையில் காசு இல்லை. வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டு வரச் சொன்னாள்' என்றான். நான் வாங்கிய அந்த இரண்டு ரூபாய் எனக்கு விருதை விடப் பெரிதாக இருந்தது. இப்போது நினைத்தாலும் கண்ணில் ஈரம் கசிய வைக்கிற நெகிழ்ச்சியான சம்பவம் அது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் பேராசிரியாகப் பணியாற்றிய போது, முதல் துணைவேந்தராக வ.ஐ. சுப்பிரமணியம் எனது அறிவை விரிவு செய்தவர்.மற்றொரு துணைவேந்தர் ம. இராசேந்திரன் என் செயலை விரிவு செய்தவர். அவர்கள் என்னை ஊக்குவித்த விதம் மறக்க முடியாது. அங்கே மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளிக்க வாய்ப்பில்லை.ஏனென்றால் அது ஆய்வுத் துறைக்கானது.

கசப்புகள்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் நாடக விழா நடத்துவேன். 1992 -இல் அப்படி நடத்திய போது கடைசி நேரத்தில் இரண்டு நாடகங்கள் அரங்கேற்ற முடியாமல் போகவே சாரு நிவேதிதா நிகழ்த்திய 'இரண்டாவது ஆட்டம்' என்கிற வேறொரு புதிய நாடகத்திற்கு அனுமதித்தேன்.அதை அவர்கள் அரங்கேற்றிய

போது பெரும் எதிர்ப்பு வந்தது. பெரிய அடிதடி கலாட்டாவாகிவிட்டது. எங்களை அனுமதித்த பள்ளி நிர்வாகத்திற்குப் பெரிதும் சிக்கலாகி விட்டது.எல்லோரும் என்னை வசை பாடினார்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள். என் மீது தவறு இல்லை என்றாலும் அந்த நாடகத்தை அனுமதித்த குற்றத்திற்காக நான் மிகவும் மனமுடைந்து மன்னிப்பு கேட்டேன்.அதன் பிறகு பெரிதும் மனச்சோர்வடைந்திருந்தேன். அப்போது கோமல்

சுவாமிநாதன் சென்னை நாடக விழாவிற்காக நான் நாடகம் போட வேண்டும் என்றார். மீண்டும் 'ஸ்பார்ட்டகஸ்' நாடகம் தயார்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எங்கிருந்துதான் வந்ததோ எனக்கு அப்படி ஒரு பலம் வந்தது. அந்த கூட்டு விசை தந்த பலத்தை அன்று உணர்ந்து கொண்டேன். நாடகம் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தையும் ஊக்கத்தையும் ஆற்றலின் விசையையும் பார்த்து எனக்கே வியப்பாக இருந்தது.

பேராசிரியர், நாடக செயற்பாட்டாளர், நெறியாளுநர், நாடக ஆசிரியர், நாடகப் பயிற்றுநர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இதில் எப்படி அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள்?

எனக்குக் கிடைத்திருக்கும் எல்லா பெருமைகளும் நாடகத்தின் மூலம் வந்தவைதான்.நிச்சயமாக நான் ஒரு நாடகக்காரன் என்பதில் தான் பெருமை கொள்கிறேன்.நாடக நடிகர், நாடகாசிரியர், பயிற்றுநர் எதுவாக இருந்தாலும் நான் என்றும் ஒரு நாடகக்காரன் தான்.அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.

எதிர்காலத் திட்டம் என்ன?

'நாடகக் கலைச்சொல் கலைக்களஞ்சியம்' உருவாக்கி இருக்கிறேன். அடுத்ததாக 'மெய்ப்பாட்டியல்' என்கிற ஒரு நூல் எழுத வேண்டும். 'காரல் மார்க்ஸ்' சார்ந்து பெரிய அளவில் நாடகம் உருவாக்க வேண்டும். இதுதான் எனது இப்போதைய திட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்குறளுக்கு உள்ள பெருமை வேறு எந்த அற நூலுக்கும் இல்லை: கவிஞா் வைரமுத்து

SCROLL FOR NEXT