சிக்கந்தர் தோல்வி குறித்து ராஷ்மிகா!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாயின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்துக்கு ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்புக் கிடைத்தது. ஆனால், பாலிவுட் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்துக்குப் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. சல்மான்கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல சினிமா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாக ராஷ்மிகா பேசிய விஷயம், இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், 'சிக்கந்தர்' படம் குறித்து முருகதாஸூடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பிறகு நடந்தவையெல்லாம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் திரைக்கதையைக் கேட்ட போது, அது மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
பொதுவாக சினிமாவில் இது போன்றவை நடப்பது வழக்கம்தான். ஒரு கதையை நாம் கேட்கும்போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால், படப்பிடிப்பின் போது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கதை மாற்றங்கள் ஏற்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். 'சிக்கந்தர்' படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது.'' எனக் கூறியிருக்கிறார்.
தொடர் விமர்சனங்களுக்கு லோகேஷ் பதில்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'கூலி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
அப்போது, 'கூலி' திரைப்படம் 35 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. அதற்கு மக்களுக்கு நன்றி. அந்தப் படத்தை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. அதிலிருந்துதான் என்னிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் அதைச் சரிசெய்ய முயற்சிப்பேன்.
'கூலி' படத்துக்குப் பிறகு 'கைதி 2' படம்தான் என்னுடைய திட்டம். 'கூலி' படம் வெளியாகும்போது ரஜினி - கமல் என இருவரையும் சந்தித்தேன். 'இருவரும் சேர்ந்து வரும்படியான ஒரு படம் இயக்கலாம்' எனக் கூறினார்கள்.
இந்த வாய்ப்பு அடுத்து எப்போது கிடைக்குமோ எனக் கருதி, 'கைதி 2' நிறுத்திவிட்டேன். மேலும், ரஜினி - கமல் இணைந்து நடிப்பதற்கான கதையை எழுதினேன். இருவரிடமும் தனித்தனியே கதை கூறினேன். இருவருக்கும் கதை பிடித்திருந்தது.
ஆனால், இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படமாகவே நடித்து வருகிறார்கள் என்பதால், ஆக்ஷன் படம் இல்லாமல் லேசனா உணர்வான படமாகக் கேட்டிருந்தார்கள். அப்படியான கதை எனக்கு வராது என்பதால் அதை அவர்களிடம் கூறி, அதிலிருந்து வந்துவிட்டேன்.
நிறைய சம்பளம் கேட்டேன். அதற்கு மறுத்ததால் நான் விலகிவிட்டேன் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுதான் உண்மை.
நடிகர் அமீர்கான் மற்றும் நான் இணைந்து ஒரு படம் வேலை செய்வதாக இருந்தது. அது குறித்து இப்போதும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். எனக்கும் அவருக்கும் தற்போது நிறையப் பணிச்சுமைகளும், ஒப்பந்தங்களும் இருப்பதால், அந்தப் படம் எப்போது தொடங்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ஆனால், அதற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கிறது.'' என்றார்.
புத்தக வடிவில் திரைக்கதை!
எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெளியான படம் 'குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்'. இயக்குநர் ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன், ஏ.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். யுவன் ஷங்கர்ராஜா இசையில் இப்படத்துக்காக வெளிவந்த பாடல்கள் இப்போதும் பிரபலம்.
இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. அறம் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இப்புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் ராஜகுமாரன் இப்புத்தகத்தை வெளியிட, இயக்குநர் விஜய் மில்டன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் ராஜமோகன் பேசும் போது, 'நல்ல விமர்சனங்களை தந்த இந்தப்படம் ஒரு சிறந்த திரைக்கதை என்பதை கர்வத்துடன் சொல்லிக் கொள்வேன். இயக்குநராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்த என் அண்ணன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் படிப்பை முடித்தோம்.
ஒரு கட்டத்தில் என் தம்பி என்னை சினிமாவுக்குச் செல்ல ரொம்பவே ஊக்கம் கொடுத்து வற்புறுத்தினார். அப்போதுதான் இயற்கையே என்னை கவிதை, கதை எழுதுவதற்கு தயார்படுத்தியது.
அதன்பின் சென்னை வந்து இயக்குநர் ராஜகுமாரனிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினேன். என்னை அவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவரிடம் பணியாற்றிய அனுபவத்தில் நான் இயக்குநராக மாறினேன். ஒளிப்பதிவையும் சேர்த்து கற்றுக் கொண்டேன். சினிமாவில் எனக்கு ஒரு நந்தவனம் அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும் தான்.
நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சமயங்களில் என்னுடன் நட்பாகப் பழகிய புரொடக்ஷன் மேனேஜர் சின்னசாமி என்னிடம் இருந்த கதையைக் கேட்டுவிட்டு என்னை விட அதிக இடங்களுக்கு அந்தக் கதையைச் சுமந்து சென்றார். அப்படி நான்கு இடங்களில் எனக்குப் படம் இயக்க வாய்ப்புக் கிடைத்த போது, அதில் அழகாக அமைந்த வாய்ப்பு தான் கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. சரண் இந்தப் படத்தை தயாரித்தது. இப்படத்தில் வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று வரை அந்தப் பாடல்கள் பேசப்படுகின்றன. இந்தப் புத்தகம் வெளியாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.