FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

குரல்தான் அழகு...

'மேடைகளில் இசை நிகழ்ச்சிகளும் அளித்து வந்தேன். காலப்போக்கில், சங்கீத ரசிகர்களின் பார்வை மாறியது எனது அதிர்ஷ்டம்.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:10 am IST
பகிர்:

'மேடைகளில் இசை நிகழ்ச்சிகளும் அளித்து வந்தேன். காலப்போக்கில், சங்கீத ரசிகர்களின் பார்வை மாறியது எனது அதிர்ஷ்டம். எனது முகத்தை அவர்கள் ஒதுக்கி, குரலுக்கு முக்கியத்துவம் அளித்தனர். 1982-இல் 'தரங்' என்ற கலாசார அமைப்பினர் 'வாரணாசியின் லதா மங்கேஸ்கர்' என்ற பட்டத்தை எனக்கு அளித்தனர். இந்தக் குரல்தான் 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றுத் தந்துள்ளது' என்கிறார் முனைவர் மங்களா கபூர்.

இவரது 11-ஆம் வயதில், அமிலத் தாக்குதல் நடைபெற்று, அவருடைய முகத்தை மட்டுமல்ல; எதிர்காலத்தையே சிதைத்தது. அந்தச் சோகத்திலிருந்து மீண்டு எழுந்த மங்களா கபூர் இசைத் துறையில் சாதித்தார். அவர் கூறியது:

'மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் நான் ஒரே மகள். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் அதிக முக்கியத்துவம் குடும்பத்தில் அளிக்கப்பட்டது. எனது மாமா மேற்கொண்ட தொழிலில் ஏற்பட்ட போட்டி, பொறாமையால் அவரை பழி வாங்க என் மீது அமிலத்தை இரவில் வீசினர். முகம், கழுத்து, மார்பு வரை பாதிக்கப்பட்டது. வடுக்களோ இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. கோர வடுக்களை ஓரளவு மேம்படுத்த 37 அறுவைச் சிகிச்சைகள் தேவைப்பட்டன. மிக அதிகமான பணச் செலவானது.

Advertisement

Advertisement

விளையாட்டு மைதானங்களைவிட மருத்துவமனைகள்தான் பரிச்சயமான இடங்களாக மாறின. வகுப்பறைகள் விரோதமானவையாக மாறின. முகம் பார்க்கும் கண்ணாடிகள் எதிரிகள் ஆயின. நரக வேதனையை அனுபவித்தேன். பள்ளி நல்ல புகலிடமாக அமையவில்லை. சக மாணவ மாணவியர் எனது தோற்றத்தைக் கண்டு அச்சமுற்றனர். சிலர் கேலியும் செய்தனர். தனிமையைத் தேடினேன். சோகமும், விரக்தியும் சுமையாக என்னை அழுத்தின.

'வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா?' என எண்ணத் தொடங்கினேன். 'நீ தற்கொலை செய்துகொள்ளப் பிறக்கவில்லை. உன்னால் சாதிக்க முடியும்' என்ற தந்தையின் வார்த்தைகளே என்னை விழித்து எழச் செய்தது.

வாரணாசியின் குறுகிய தெருக்களில் கோயில் மணிகள் தினமும் முழங்கும். கங்கையைப் போலவே இசையும் இயல்பாகப் பாயும். கோயில் மணி ஓசை, வாய் பாடு, இசைக் கருவிகளிலிருந்து எழும் இசை போன்றவற்றின் சங்கமத்தைக் கேட்டு ரசித்தபோது, துயரத்தை ஓரளவு மறக்க முடிந்தது.

சமூகம் தந்த வலிகள் வாழ்க்கையை விரக்தியை நோக்கி நடத்தின. இசை அனைத்தையும் மறுவடிவமைத்தது. இந்துஸ்தானி இசையின் பழமையான, கடுமையான மரபுகளில் ஒன்றான குவாலியர் கரானாவில் பயிற்சி பெற்றேன். என்னிடமிருந்து விடை பெற்ற அழகு இனிய குரலாக மீண்டு வந்து என்னை சோகத்திலிருந்து மீட்டது. இருண்ட வாழ்க்கைக்கு சாஸ்திரீய இசையை விளக்காகத் தேர்ந்தெடுத்தேன்.

இசையே உயிர் வாழ்வதற்கான ஒரு வழியாக மாறியது. கல்வியை இடைவிடாமல் தொடர்ந்தேன். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை, முதுகலைத் தேர்வுகளில் தங்கப் பதக்கம் பெற்றேன். முனைவர் பட்டமும் பெற்றேன். மஹிளா மகா வித்யாலயாவில் குரலிசை விரிவுரையாளராக 1989-இல் பணி அமர்த்தப்பட்டேன். இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று, 2019-இல் ஓய்வு பெற்றேன். மாநிலங்களவையும் என்னைக் கௌரவப்படுத்தியது.

2007-இல் விபத்தில் எனது இரண்டு தொடை எலும்புகளும் முறிந்து, நீண்ட கால சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அதை வாழ்க்கையின் இடைவேளையாக நினைத்து மீண்டேன்' என்கிறார் மங்களா கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments