முகப்பு
தினமணி கதிர்

விளையாட்டை நோக்கிய பயணம்!

'ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் தொடக்கத்திலிருந்தே பயம் எதுவுமில்லை. மாறாக, விருப்பமே நிறைந்திருந்தது.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:08 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 8:27 PM

'ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் தொடக்கத்திலிருந்தே பயம் எதுவுமில்லை. மாறாக, விருப்பமே நிறைந்திருந்தது. விளையாட்டுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தலைமுடியை வெட்டிக்கொண்டேன். காலை 5 மணிக்கு எழுந்து அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு, சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று விடுவேன்.

மீண்டும் மாலை வந்து போகவேண்டும். நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி வருகிறேன்.' என்கிறார், ஜிம்னாஸ்டிக்ஸ், யோகா, கல்வி என அனைத்திலும் அசத்தி வரும் திருச்சி பெரியகடை வீதி பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி தி.மா.யோ. மரகத கல்யாணி. போட்டி, பயிற்சி எதுவாயினும், தவறாமல் அவருக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து வருகின்றனர் அவரது பெற்றோர்.

மரகத கல்யாணியிடம் பேசியபோது:

Advertisement

'அப்பா மாரியப்பன் ரியல் எஸ்டேட் பணிசெய்கிறார். அம்மா யோகேஸ்வரி பல்வேறு கலை சார்ந்த பயணத்தில் தனக்கென்று முத்திரைப் பதித்தவர். அதனால் வீட்டில் பல்வேறு மாணவர்களுக்கு வீணை கற்றுக் கொடுத்து வருகிறார். என்னையும் கலைப் பயணத்தில் உள்ளே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அம்மாவுக்கு உண்டு. ஆனால், நான் எப்போதும் விளையாட்டை நோக்கித் தான் பயணம் செய்தேன்.

நான் தற்போது திருச்சி செயின்ட் ஜோசப் பெண்கள் ஆங்கிலப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே, விளையாட்டின் மீது ஆர்வம் உண்டானது. சண்முகா நகர் பகுதியில் இயங்கும் திருவருள் குருகுலம் பயிற்சி மையத்தில் ராஜசேகர், முத்துசங்கரேஸ்வரி ஆசியர்களிடம் ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

முதல் போட்டி: என்னுடைய முதல் விளையாட்டுப் போட்டி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி தான். அதன் பின், திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற ஜூனியர் ப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கு பெற்று முதலிடம் பெற்றேன்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினவிழா-குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குறுவட்ட அளவிலான தனிநபர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதலிடம் பெற்றேன். 2024-ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் சான்றிதழும் பெற்றேன்.

தங்கப் பதக்கம்: 2024-ஆம் ஆண்டு மே-5-ஆம் தேதி திருவருள் குருகுலம் அகாதெமி சார்பில் நடைபெற்ற 8-ஆவது மாநில திறன் மேம்பாட்டுப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் முதலிடம் பெற்றேன். 2025, மே 18-ஆம் தேதி கோவை ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் யோவா-யோகா அமைப்பு சார்பில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றேன். திருச்சிராப்பள்ளி யோகாசன விளையாட்டுத் திறன்மேம்பாட்டு சங்கம், விவேகானந்தர் இளைஞர் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில யோகாசனப் போட்டியில் 14-16 வயதுக்குள்பட்ட பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றேன்.

2025, மே 17-ஆம் தேதி கோவை ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் யோவா-யோகா அமைப்பு சார்பில் நடைபெற்ற 3-ஆவது ஓபன் யோகா சாம்பியன் போட்டியில் பட்டம் பெற்றேன். 2025, டிசம்பர் 27-28 ஆகிய நாள்களில் காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா தனிநபர் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.

தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிகமான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனால், விரைவில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்போகிறது. அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு, போட்டிகளில் கலந்துகொள்வேன்' என்கிறார், தி.மா.யோ.மரகத கல்யாணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.