கண்டது
(சென்னை மயிலாப்பூரில் ஒரு தள்ளுவண்டி கடையில் எழுதியிருந்தது)
'பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும்தான்!''
- கோ. செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.
(மதுரை மாவட்டத்தில் ஒரு சிற்றூரின் பெயர்)
'ஊர்மெச்சிக்குளம்.''
-குலசை.நஜிமுதீன், மாம்பாக்கம்.
(திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
'பெட்டிக்கடை.''
-ஆர்.ரமேஷ் பாபு, புதுச்சேரி.
கேட்டது
(விழுப்புரம் திரு.வி.க. ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் இரு ஆண்கள் பேசியது...)
'மழைவிட்டு வெயில் அடிக்க ஆரம்பிச்சுதுன்னாவே பயமாயிருக்கு...''
'ஏன் உங்களுக்கு வெயில் ஆகாதா?''
'அதில்லை... என் மனைவி என்னை லீவு போடச்சொல்லி, மாடியில் வத்தல், வடாகம் போடுறது மட்டுமல்லாமல், காயும்போது காவல் இருக்கவும் சொல்லுவா!''
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
(திருவல்லிக்கேணி மார்க்கெட் அருகில் இரு நண்பர்கள் )
'இருபது வயசுல போலீஸ் வேலைக்கு இன்டர்வியூக்குப் போனபோது நான் செலக்ட் ஆகலை... ஏன் தெரியுமா?''
'அவங்க கேள்வி கேட்கும்போது நீ திருட்டு முழி முழிச்சிருப்பே!''
-தீபிகா சாரதி, சென்னை- 5.
(சென்னை, கே.கே. நகரில் ஒரு பெட்டிக் கடையில்...)
'ஏம்பா, நல்ல நோட்டுக்குள்ள கிழிஞ்ச நோட்டை மறைச்சு வச்சுக் கொடுக்குறீயே... இந்தக் கிழிஞ்ச நோட்டு செல்லாட்டி உன் கடையிலதான் கொடுப்பேன்!''
'அதுக்குத்தானே சார் அப்படிக் கொடுக்கிறது... நம்ம கடைக்கு திரும்பத் திரும்ப நீங்க வரணும்ல..?!''
-மல்லிகா அன்பழகன், சென்னை-78.
யோசிக்கிறாங்கப்பா!
சிலரிடம் சில விஷயங்களைப் புரிய வைக்கக் கஷ்டப்படுவதைவிட
சிரித்துவிட்டுக் கடந்து செல்வது நல்லது.
-பி. நாகலட்சுமி பழனிசாமி, கிழக்கு தாம்பரம்.
மைக்ரோ கதை
'மாலா, உன்னை நான் உயிருக்கு உயிரா விரும்பறேன்...'' என்றான் தங்கராஜ்.
'அப்படியா... அப்ப என்னை உங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறீயா?'' என்றாள் மாலா.
'எதுக்கு டியர்?'' என்றான் புரியாமல் தங்கராஜ்.
'நான்தான் உங்க வருங்கால மனைவின்னு உங்க வீட்டுல இருக்கிறவங்கக்கிட்ட அறிமுகப்படுத்தமாட்டியா?''
'கொஞ்சநாள் போகட்டுமே!'' என்றான் தங்கராஜ்.
'உயிருக்கு உயிரா லவ் பண்ற என்னை அறிமுகப்படுத்தறதுல உனக்கு என்ன தயக்கம்?''
பதில் சொல்லத் தயங்கியவனிடம், 'நான் சொல்லவா... உனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சு. போலியா என்னைக் காதலிச்சி ஏமாத்த நினைச்சே, சரியா?'' என்று கோபமாக கேட்டாள் மாலா.
'சாரி... சாரி!'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நழுவினான் தங்கராஜ்.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எஸ்எம்எஸ்
பிழைக்க விரும்பினால் உழைக்க விரும்பு.
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
அப்படீங்களா!
வாட்ஸ்ஆப் பயன்பாடு எந்த அளவுக்கு நவீன மயமாகி வளர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு மோசடிகளும் அதிகமாகி வருகின்றன.
பொதுவாக இணைய மோசடிகள் என்றால் கடவுச்சொல்லைத் திருடி நடத்தப்படும் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் கோஸ்ட்
பேரிங் என்ற முறையில், ஃபேஸ்புக் பதிவைப் படிக்க லிங்க் கிளிக் செய்யப்பட்டு, கைப்பேசி எண்ணைக் கேட்டு, சரிபார்க்க அனுப்பப்படும் கோட் கேட்கப்படும்.
இதைப் பதிவிட்டதும், இதை ஏதோ நமது கைப்பேசியில்தான் நாம் பதிவிடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவோம். ஆனால், மற்றொரு கைப்பேசியை நமது வாட்ஸ்அப் கணக்குடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.
இந்த இணைப்பு குறித்த எச்சரிக்கை தகவல் ஏதும் வராது என்பதால், வேறு நபர்கள் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை உங்களுக்குத் தெரியாமலேயே பயன்படுத்தலாம்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க புதிய கணினிகளுடன் வாட்ஸ்ஆப்பை இணைக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரட்டைப் பாதுகாப்பை அனைவரும் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸிஸ் ஆன் செய்துவைத்திருக்க வேண்டும்.
வாட்ஸ்ஆப் சரிபார்ப்பு கோட் யாருக்கும் பகிரக் கூடாது. உங்கள் சமூகஊடக கணக்கையே காண உங்கள் கைப்பேசி எண்ணைக் கேட்டால் பகிரக் கூடாது.
தெரியாத கருவிகளில் வாட்ஸ்ஆப் கணக்கை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரம் மற்றும் எச்சரிக்கும் தகவல்களைப் பகிர்ந்து உங்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்த கடவுச் சொல் பதிவிட கோருவதையும் ஏற்கக் கூடாது.
மேலும், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு எந்தந்தக் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை செட்டிங்ஸில் சென்று பார்த்து, தேவையில்லாதவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். இதை எல்லாம் செய்தால் வாட்ஸ்ஆப் கணக்கை சற்று பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.