பாகிஸ்தானின் சொர்க்கம்
லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமானத் தளத்தில், 1984'ஆம் ஆண்டில் அப்துல் மொபாட் என்பவர் தனது கடவுச் சீட்டை சமர்ப்பித்தார். அதில் அவருடைய பிறந்த ஆண்டு 1832 என்றிருந்தது. அப்போது அவருக்கு 152 வயது ஆகியிருந்தது. தவறுதலாக இருக்கலாம் என அலுவலர்கள் ஆராய்ந்தபோது, அது உண்மை எனத் தெரிய வந்தது. அவர் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான ஹுன்சா சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
'ஹுன்சா', 'ஹுன்சுகுச்', 'புருஷோ' என்றெல்லாம் அழைக்கப்படும் மக்கள் வடக்கு பாகிஸ்தானில் உள்ள யசின், ஹுன்சா நகர் பள்ளத்தாக்குகளில் வசிக்கின்றனர். அவை கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடிக்கும் மேல் உயரமுடைய காரகோம் மலைத் தொடரை ஒட்டி அமைந்த பகுதிகளாகும்.
கிரேக்க மன்னர் அலெக்சாண்டரின் வழிவந்தவர்கள் என்றும் சொல்லப்படும் இவர்களுடைய மக்கள் தொகை சுமார் 87 ஆயிரம். 'புருஷாஸ்கி' என்ற மொழியைப் பேசுகின்றனர். விவசாயம் முக்கிய தொழில்.
ஹுன்சா சமுதாயத்தில் 150 ஆண்டு வாழ்க்கை இயல்பாக இருக்கிறது.
1900'ஆம் ஆண்டு வரை உலகில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் சுமார் 32 ஆக இருந்தது. மருத்துவ முன்னேற்றத்தால் 2022'ஆம் ஆண்டில், அது 72 ஆக உயர்ந்தது. ஆனால், ஹுன்சா சமுதாயத்தில் பெண்களின் சராசரி ஆயுள்காலமே நூறு வயது. எழுபது வயதுடைய பெண்களும் 30 வயது இளம் பெண்கள் போல் காட்சியளிக்கின்றனர். 65 வயது பெண்களுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன.
நீண்ட ஆயுளுக்கும் இளமையான தோற்றத்துக்கும் உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்வியல் முறைகளுமே காரணம் என்று சொல்லப்படுகின்றன.
இங்கு விளையும் ஆப்ரிகாட் பழம் (பாதாம்), அதன் விதைகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் எண்ணெயை இவர்கள் பயன்படுத்துகின்றனர். காலை ஐந்து மணிக்கே விழித்து எழும் இவர்கள், எந்த வாகனங்களையும் பயன்படுத்துவதில்லை. பனிப் பாறைகளில் இருந்து வரும் அதிக அபூர்வமான தாதுக்களை கொண்ட'கிளேசியர்' நீரைப் பயன்படுத்துகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் தொடுவதில்லை. போட்டிகளோ, பொறாமைகளோ இருப்பதில்லை. முதியோர் இல்லங்களும் இல்லை. அமைதியும் திருப்தியும் நிறைந்த வாழ்வைக் கடைப்பிடிக்கின்றனர். பாகிஸ்தானிலும் ஒரு சொர்க்கம் உண்டு என்றால், அது 'ஹுன்சா பள்ளத்தாக்கு' பகுதியில்தான்!
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஐந்து பசுக்கள்
பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் நடுவே உள்ள நாடான 'உருகுவே' என்பதற்கு வர்ணம் பூசப்பட்ட பறவைகளின் நதி என்பது பொருள். தலைநகர் மாண்டிவிடியோ. பெரும்பாலோர் ஸ்பானிஷ் மொழியைப் பேசுகின்றனர்.
இங்குள்ள வியக்கத்தக்கச் செய்தி என்ன தெரியுமா? ஒவ்வொரு குடிமகனுக்கும் 4 பசுக்கள் சொந்தம். உருகுவேயின் மக்கள் தொகை சுமார் 34 லட்சம். நாட்டில் பசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சத்துக்கும் மேல்!
தென் அமெரிக்கக் கண்டத்தின் இரண்டாவது சிறிய நாடான இதன் பரப்பளவு 1,76,215 சதுர கி.மீ. ஆகும். அரசியல், பொருளாதார அடிப்படையில் நிலையான தன்மை கொண்ட நாட்டில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். அரிசி ஏற்றுமதியில் உலகின் நான்காவது இடத்தையும், சோயா பீன்ஸ் ஏற்றுமதியில் ஆறாம் இடத்தையும், மாட்டிறைச்சியில் ஐந்தாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. தானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது .
ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயப் பொறியாளர்கள் ட்ரோன், செயற்கைக் கோள், சாட்டிலைட் வாயிலாக விவசாயிகளின் நடைமுறைகளைக் கண்காணிக்கின்றனர். உற்பத்தி குறையும் இடத்தில், உடனே அதை நிவர்த்தி செய்கின்றனர்.
ஒவ்வொரு பசுக்களின் காதிலும் 'எலக்ட்ரானிக் சிப்' வைக்கப்பட்டிருப்பதால், அது மேயும் இடம், எடை, ஆரோக்கியம் போன்றவை தரவு மையத்தில் கண்காணிக்கப்படுகின்றன.
கால்பந்தாட்டத்தை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். உலகக் கோப்பைப் போட்டியை இந்த நாடு நடத்தியதுடன் இரண்டு முறை தங்கப் பதக்கமும் பெற்றுள்ளது.
நாட்டின் தேசியச் சின்னம் சூரியன். பசுக்கள், கால்நடைகளை வதைப்பது சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டிருக்கிறது. கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால், கருணைக் கொலை மூலம் இறப்பைப் பெற்றுக்கொள்ள சட்டம் வழிவகை செய்கிறது. அதேபோல், கருக்கலைப்பு, ஒரே பாலினத் திருமணத்துக்கும் சட்ட அனுமதி உள்ளது.
இந்த நாட்டின் தேசிய கீதம் மிகப் பெரியது. ஆறு நிமிடங்கள் நீளம் கொண்டது என்றாலும், தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள சுருக்கப்பட்ட பதிப்பும் உள்ளது.
முனைவர் ஜி.குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.