தினமணி கதிர்

யோகா என்பது வாழ்க்கை முறை

யோகா என்பது தத்துவம், ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்ற பார்வை மாறி, அறிவியல் ரீதியாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

அருள்செல்வன்

யோகா என்பது தத்துவம், ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்ற பார்வை மாறி, அறிவியல் ரீதியாகப் பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் சென்னையிலேயே பத்து இடங்களில்தான் பயிற்சி மையங்கள் இருந்தன. 25 பேர்தான் நிபுணர்கள் இருந்தனர். தற்போது யோகாவை ஒரு வாழ்க்கை முறை என்று மக்கள் நினைக்கிறார்கள். இன்று சென்னையிலேயே நூற்றுக்கு மேற்பட்ட மையங்கள் இருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். 191 நாடுகளில் 200 கோடி பேருக்கு மேல் யோகா விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஸ்டூடியோ, ஜிம் போன்ற இடங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள். கரோனா காலத்துக்குப் பின்னர் ஏராளமானவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

உலக அளவில் மக்களில் பணி அழுத்தம், மன அழுத்தம் என்று 86 சதவீதம் பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்திய அளவில் 89 சதவீதம் பேர். அதற்கு பெரிய தீர்வாக யோகா இருக்கிறது' என்கிறார் யோகா துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்ற முனைவர் ஆர். இளங்கோவன்.

இவர் தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் யோகா துறைத் தலைவராகப் பணியாற்றியவர், அகில இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர், பல கல்வி நிறுவனங்களில் யோகா பாடத் திட்ட வடிவமைப்பில் பங்காற்றியவர் எனப் பல்வேறு சிறப்புகளை உடையவர்.

யோகாசனம் அதன் அனுபவங்கள் குறித்து, இளங்கோவனிடம் பேசியபோது:

'எனது அப்பாவுக்குச் சொந்த ஊர் வைத்தீஸ்வரன்கோவில். அம்மாவுக்கு சிதம்பரம். நான் படித்ததும், வளர்ந்ததும் பெருந்துறையில்தான். ஏனென்றால், அங்கே தான் அப்பா ஆசிரியராகப் பணியாற்றினார்.

சிறு வயதிலிருந்து விளையாட்டு, தியானம் மீது ஆர்வம் உண்டு. கிரிக்கெட்டிலும் மிகுந்த ஈடுபாடு. பள்ளி விடுமுறை நாள்களில் வீட்டில் இருந்து ஒரு கி.மீ. நடந்து பள்ளிக்குச் சென்று தியானம் செய்வேன். பின்னர், உடற்கல்வி படித்தவுடன் யோகா மீது பெரிய ஈடுபாடு இருந்தது. நிறைய அமைப்புகளில் பயிற்சிகளுக்குச் சென்றேன். அப்படியே அந்தத் துறையில் பணியாற்றத் தொடங்கினேன். ஆறு ஆண்டுகள் பள்ளியிலும், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் 33 ஆண்டுகளும் பணியாற்றினேன்.

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகத்தில் யோகா பேராசிரியராகப் பணி அமர்த்தப்பட்ட முதல் நபர் நான். தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக் கழகத்தில் யோகாவுக்கு படிப்பைத் தொடங்கினோம். ஆய்வியல் நிறைஞர், முனைவர் படிப்பு வரை கொண்டு வந்தோம். 51 முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி இருக்கிறோம். 130 பேர் என் வழிகாட்டலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். யோகா நெட் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பாளராக 5 ஆண்டுகள் பணியாற்றினேன்.

தமிழ்நாட்டில் யோகாவுக்கான 5 கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். அந்த வகையில் பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. யோகா தெரபி படிப்பை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. யோகா படிப்பு சம்பந்தமாக பாட வடிவமைப்பில் பங்காற்றி இருக்கிறேன்.

ஓய்வு பெற்றவுடன் யோகா தெரபி ஆலோசகராக இலவசமாகப் பணியாற்றி வருகிறேன். இந்திய யோகா அமைப்பில் நிர்வாகக் குழுவின்15 உறுப்பினர்களில் ஒருவராகவும், தமிழ்நாடு மாநிலச் செயலாளராகவும் இருக்கிறேன்.

ஆன்மிகமா யோகா?

நாங்கள் இருந்தது அரசு சார்ந்த துறை என்பதால், தத்துவத்துடன் கூடிய அறிவியல் முறையாகத்தான் யோகா பார்க்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் அறிவியலுக்கு முக்கியம் கொடுத்து சொல்லிக் கொடுக்கும்போது, மாணவர்கள் எளிதில் ஈர்க்கப்பட்டு புரிந்து கொள்கிறார்கள். இப்போது யோகாவை தொடர்புபடுத்தி ஜீன்ஸ், ஹார்மோன், ரத்தக் குழாய், திசுக்கள், செல்கள் என்று சொல்லிக் கொடுப்பதால், சுலபமாகப் புரிந்துகொள்கிறார்கள். உள்ளுறுப்புகள் சார்ந்த விழிப்புணர்வோடு யோகாவைப் பார்க்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதால் அந்தப் போக்குப் பிடித்து நிறையப்பேர் படிப்பில் சேருகிறார்கள்.

யோகா 20' ஆம் நூற்றாண்டில் பெரிய எழுச்சியைப் பார்த்தது. உடல், உள்ளம், உணர்ச்சி, சமூகம், பண்பாடு, ஆன்மிகம் என அனைத்துக் கோணத்திலும் வேலை செய்கிறது. யோகாவுக்கு ஏமாற்றத் தெரியாது. அந்தப் பயிற்சி செய்யும்போது, பல்வேறு அம்சங்களும் மேம்படும். 'ஹோலிஸ்டிக் பர்சனாலிட்டி' எனப்படும் ஒட்டுமொத்த ஆளுமை வளர்கிறது. வெறும் இடப்பெயர்ச்சி செய்யும்போது, தசைகள் விரிந்து விம்முவது போல் தெரியும். யோகா பயிற்சி செய்யும்போது அந்த நிலை இருக்காது. உடல் இறுக்கம் குறைவதுடன் அழுக்குகள் வெளியேறும்.

உடற்பயிற்சியில் உடல் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பின்னர்தான் மனதைப் பற்றி நினைப்பார்கள். ஆனால், யோகாவில் தெய்வீக ஆற்றல் எனப்படும் சக்திக்குத்தான் முதலிடம். அது சரியாக இருந்தால், மனம் சரியாக இருக்கும். மனம் சரியாக இருந்தால், உடல் நன்றாக இருக்கும் என்பது இதன் அடிப்படை.

தெய்வீகம் என்பதை மத ரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. 'ஸ்பிரிச்சுவாலிட்டி' என்பது கடவுள் நம்பிக்கைக்கும் மேலானது. ஒழுக்கம் சம்பந்தமானது. நல்ல பண்புகளோடு வாழ்வதுதான் தெய்வீகம். மதம் கடந்து, சித்தாந்தம் கடந்து அனைவரும் யோகா செய்கின்றனர்.

இயேசுவுக்கு பௌர்ணமி இரவில் தியானம் செய்வது பிடிக்கும். பைபிளில் தியானம் பற்றி 22 இடங்களில் வருகிறது. புத்தர் தியானத்துக்கு முக்கியத்துவம் தந்தவர். இப்படி மாமனிதர்கள் யோகாவை ஒரு பயிற்சியாகத் தொடர்ந்திருக்கின்றனர்.

காலத்துக்கேற்ப யோகாவில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. சுமார் 125 கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகளில் யோகா செய்கிறார்கள். முன்பு யோகாவை அரச குடும்பத்தினர், ஆன்றோர், சான்றோர், ராணுவத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்தார்கள். இப்போது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் யோகா செய்ய மாட்டார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. சீனாவில் 90 சதவீதம் பேர் பெண்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவில் 146 கோடியில் 17 கோடி பேர் யோகா செய்கிறார்கள். அதில் பெண்கள் 40 சதவீதம் பேர். முன்பு சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே செய்தார்கள். இப்போது அனைவரும் செய்கிறார்கள். இன்று ஏ.ஐ. வாயிலாக, யோகா கற்றுக் கொடுக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.

இளங்கோவன்

யோகாவில் மரபு

யோகா மரபு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் சிவன் தியானம் செய்வது போல் உள்ளன.

'மூலபங்கா' , 'பதகோணாசனா' போன்றவை உள்ளன. வேத காலத்தில் இருந்ததற்கான அதிகாரபூர்வமான பதிவுகள் உள்ளன. உலக அளவில் வெளிநாடு சென்று பேசிய விவேகானந்தருக்குப் பிறகு யோகாவின் பெருமை கூடியது.

இந்தியாவில் தோன்றிய யோகா, புத்தர் காலத்துக்குப் பிறகு உலகம் எங்கும் பரவியது. ஷாஜகான் மன்னரின் மகன் தாரா என்பவர் உபநிஷதங்களை பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்தார். பின்னர், ஆங்கிலத்துக்குச் சென்றது. ஆங்கிலேயர் காலத்தில் வுட் ரூஃப் என்பவர் யோகாவின் சம்ஸ்கிருத நூல்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.

மரபு வழியில் முதலில் தியானத்துக்கும், பிராணாயாம பயிற்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிற நாடுகளுக்குச் சென்றபோது ஆசனங்களை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு பின்பற்ற ஆரம்பித்தார்கள். அமெரிக்கர்கள் பிராணாயாம, தியானப் பயிற்சிக்கு முக்கிய இடம் கொடுக்கிறார்கள்.

2014'ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21' ஆம் தேதியைக் கொண்டாடுகிறோம். இரண்டு ஆண்டுகளாக 'மெடிட்டேஷன் டே' என்று டிசம்பர் 21' ஆம் தேதியைக் கொண்டாடுகிறார்கள். ஐ.நா. சபையில் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று 71 நாடுகள் கூறிவருகின்றன. இப்படி மரபு வழியாக இருந்தாலும், மெல்ல மெல்ல மாற்றங்களும் காலத்துக்கும் மனிதர் வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்ப மாறுதல்களோடு வளர்ந்து வருகிறது.

யோகாதெரபி

பதஞ்சலி முனிவர் காலத்தில் யோகாதெரபிக்கு முக்கிய இடம் கொடுத்தார்கள். நாதமுனி எழுதிய 'யோகா ரக ஸ்யா' போன்ற பல நூல்களில் இதுகுறித்தெல்லாம் பேசப்பட்டுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை பிரச்னைகளுக்கு யோகா நல்ல பலன் தருகிறது என்று கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் 'ட்ரெடிஷனல் காம்ப்ளிமென்ட்ரி இன்டெகரேட்டட் மெடிசன்' என்ற அமைப்பை உருவாக்கி, அதில் யோகாதெரபிக்கு இடம் அளித்துள்ளது. யோகாசனங்களும் யோகச் சிகிச்சையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

உடற்கூறு, உளவியல் சார்ந்து யோகா சொல்லிக் கொடுப்பது புதிய பாணியாக இருக்கிறது. யோகா

தெரபி 2.0 இப்போது பிரபலம். தனியாள் சம்பந்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முறை. நோய் முன் தடுப்பு மருத்துவம் போன்ற சிகிச்சையும் யோகாதெரபியில் அளிக்கப்படுகிறது. யோகாதெரபி நோய்க்கான மருந்து அல்ல. நோய் வரும் காரணத்துக்கான தீர்வாக இருக்கும். அதாவது பயிற்சியுடன் சரிவிகித உணவும் வலியுறுத்தப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு 20 வகையான பயிற்சிமுறைகள் உண்டு. இன்று மாறி வரும் உலகில் யோகாவின் அவசியம் பெரியதாகிக் கொண்டிருக்கிறது.

யோகா கற்க நிபந்தனைகள்

யோகா கற்பிப்பவர் நல்ல அறிவோடு இருக்கவேண்டும். கால மாற்றங்களைப் புரிந்திருக்க வேண்டும். அதற்கான குறிக்கோள், அறம் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். மனிதாபிமானம் உள்ள சாத்வீகமான குணம் கொண்டவராக இருக்க வேண்டும். அக்கறையும் பொறுமையும் கொண்டு சொல்லிக் கொடுப்பவருக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். சாப்பிடுவதற்கு அரை நேரம் முன்பும், சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். அதிகாலைப் பயிற்சி நல்லது. மாலை 6 மணிக்கு முன்பு செய்வது நல்லது. கவனச் சிதறல் கூடாது. மனதில் பொறுமை, கவனம் வேண்டும். உடல் மீது பொறுப்பு இருக்க வேண்டும். மனப்பயிற்சியும் தேவை.

1900'க்கு முன் ஆசனங்கள் வயதுக்கேற்றபடி, செய்தொழிலுக்கு ஏற்றபடி மாறும். யோகா என்பது தனியாள் சம்பந்தப்பட்ட கவனத்துடன் பயிற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருந்தது. இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கிரானைட் போன்ற வழவழப்பான தரையில் புழங்குவதால் நமது உட்காரும், நிற்கும் நிலையே மாறி உள்ளது. 80 சதவீதம் குழந்தைகளுக்கு உட்காரும், நிற்கும் நிலையே மாறி இருக்கிறது என்றும், அதற்குப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் பேட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சில உபகரணங்களை கையாண்டு, யோகா பயிற்சி செய்வதற்கு மாற்றங்கள் கொண்டு வரலாம்.

35 வயது வரை ஆசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நடுத்தர வயது 40'க்கு மேல் 60 வரை ஆசனத்துக்கான நேரத்தைக் குறித்து பிராணாயாமத்துக்கு அதிக இடம் கொடுப்போம். அறுபதுக்கு மேல் தியானத்துக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை யோகா பயிற்சி தனிநபர் சம்பந்தப்பட்டது என்று கூறுகிறோம்.

உலக அளவில் யோகா

உலகம் முழுதும் உள்ள உளவியல் நிபுணர்கள் பிராணாயாம பயிற்சியை வேறொரு பெயரில் கொடுப்பதே யோகாவுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும்.

'ஜோன் ஜீரோ' என்ற பயிற்சியை விரைவாகச் செய்யாமல் மெதுவாகச் செய்வது அதன் நோக்கம். அதைப் பார்த்தால் ஆசனங்களில் அடிப்படையில் உள்ளது. கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள் கொடுக்கும் பயிற்சிப் பட்டியலில் யோகாவின் ஆசனங்கள் வெவ்வேறு வகையில் உள்ளன. ஸ்டோன்போர்ட் பல்கலைக்கழகமும் தினமும் ஐந்து நிமிடங்கள் பிராணாயாமம் செய்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியப் பாரம்பரியமிக்க யோகா உலகம் முழுக்கப் பரவி வருகிறது.

அமெரிக்கா, சீனா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர், துபை போன்ற நாடுகளுக்கு நான் சென்று, யோகா பயிற்சிகளைஅளித்துள்ளேன். என்னுடைய மாணவர்கள் உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான பேர் இருக்கின்றனர் என்பதே பெருமை' என்கிறார் ஆர். இளங்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT