'காலத்தால் அழியாத காலாவதியாகாத கருத்து மாத்திரையான திருக்குறளை எதிர்வரும் தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். வள்ளுவமே வாழ்வியல். வள்ளுவனார் வழித்தடத்தில் பயணிப்போம். குறள் படித்தால் குவலயம் ஆளலாம். இந்தக் கோட்பாடுகளோடு மாணவர்கள் மனதில் பதிய வைக்கப் பணியாற்றுகிறேன்' என்கிறார் மெ.செயம்கொண்டான்.
காரைக்குடி வள்ளுவர் பேரவையின் நிறுவனத் தலைவர், பேச்சாளர், தமிழ்நாடு அரசின் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் சிவகங்கை மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர், வித்யாகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளோடு இயங்குபவர் மெ.செயம்கொண்டான்.
'தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது' உள்ளிட்ட 50'க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று, தமிழ்த் தொண்டில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசியபோது:
'நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றேன். 'புலால் மறுத்தல்' என்று அன்றைக்கு ஒப்பித்த நான் இதுவரை புலால் உண்பதில்லை.
வள்ளுவர் பேரவையின் மூலம் 'கிராமங்கள்தோறும் திருக்குறள்' எனும் திட்டத்தைத் தொடங்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் திருக்குறள் கற்றுக் கொடுக்கிறேன்.
தருண் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, நாடு முழுவதும் 133 மாணவர்களைத் தேர்வு செய்து 'நாடாளுமன்றத்தில் திருக்குறள்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து, என்னிடம் கற்ற 8 மாணவர்களுடன் புதுதில்லிக்குச் சென்றேன். நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியுடன் தேநீர் அருந்தினோம். வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கியது திருக்குறள்தான்.
இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் ஈர்க்கப்பட்டு கைப்பேசியில் மூழ்கி, புத்தகம் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. இதற்காக மாணவர்களிடத்தில் தன்னார்வத்தைத் தூண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை திருக்குறளில் முதல் 38 அதிகாரமான அறத்துப்பாலை மனனம் செய்ய வைத்து 'அறம்' விருதை வழங்கி வருகிறேன்.
மாதம்தோறும் திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, கதை, விநாடி'வினா போன்ற பல்வேறு போட்டிகளை நடத்துகிறோம். ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று திருக்குறள் ஆர்வலர், அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து 1,330 ரூபாய் பொற்கிழியாக வழங்கி வருகிறோம். மாதம்தோறும் திருக்குறள் முற்றோறுதல் நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஞாயிற்றுக்கிழமை அன்று கட்செவி அஞ்சலில் திருக்குறள் முற்றோறுதல் நடைபெறுகிறது.
காரைக்குடி செக்காலைப் பகுதியில் 2021'ஆம் ஆண்டு அக்டோபர் 24'ஆம் தேதி தாமரைப் பீடத்துடன் திருவள்ளுவருக்கு கற்சிலையை அமைத்து 'வள்ளுவர் அரங்கம்' என பெயர் சூட்டினேன். பலரும் இங்கு வந்து திருக்குறள் சொல்லித் தியானம் செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் குறள் பரிசுத் திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற காரணமாகவும் இருந்துள்ளேன். சிங்கப்பூர், மலேசியா, துபை போன்ற நாடுகளிலும் பேசியிருக்கிறேன். வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு இலக்கண வகுப்புகளை எடுத்துள்ளேன்.
சொற்பொழிவு, வழக்காடு மன்றம், பட்டிமன்றம், கவியரங்கம், குடமுழுக்கு, நேர்முக வர்ணனை எனப் பல மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறேன். சிந்தனை மிகுந்த கருத்துகளை விதைக்கிற வாய்ப்பைக் கடவுள் அளித்ததாக உணர்கிறேன். தனியார் தொலைக்காட்சிகளில் பங்கேற்றுள்ளேன். நேர்நிலைச் சிந்தனையை மக்களிடம் பேசுவதே என்னுடைய மேடைப்பேச்சின் முக்கிய நோக்கம். 'குறளமுது', 'வெற்றிப்படி' என இரண்டு மின்னிதழ்களை மாதம்தோறும் வெளியீடு செய்து வருகிறேன்.
நான் எழுதிய 'அழகப்பர் அந்தாதி' எனும் நூல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.லிட் படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது. அதுபோல், 'குறளோடு விளை(டை)யாடு', 'வள்ளுவமே வாழ்வியல்', 'நாளும் எட்டும் 15', 'படிக்கத் தீட்டிய வைரங்கள்', 'யாதும் தமிழே யாவரும் நலமே', 'மாண்புமிகு மகாத்மா', 'கடைக் கோடி தந்த முதல் மனிதர்', 'மனப்பாடம் என்பது ஒரு கலை', 'பிழையின்றி தமிழ்ப் பிழைக்க' உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளேன்.
15 மணி நேரத் தொடர்த் தமிழ் வகுப்பு, 24, 72 ஆகிய மணி நேரங்களில் தொடர்ச் சொற்பொழிவு, 24 மணி நேரக் கவியரங்கத்தை நடத்தியிருக்கிறேன். 3522 வரிகளில் நீண்ட கவிதையை எழுதியிருக்கிறேன்.
எனது முன்னேற்றத்துக்குக் காரணம் பெற்றோர் கரு.மெய்யப்பன்'உமையாள், மனைவி' அங்கம்மை ஆகியோர். அதுபோல மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினரும் பின்புலமாக இருந்து வருகின்றனர்' என்கிறார் மெ.செயம்கொண்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.