மார்க் ஜுக்கர்பெக்கை முந்திய சூர்யா மிதா!
வணிக வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலில் இருபத்திரண்டு வயது இந்திய தொழில்முனைவோரான சூர்யா மிதா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வணிக வட்டாரத்தில் பெரிதும் மதிக்கப்படும் ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலில் இருபத்திரண்டு வயது இந்திய தொழில்முனைவோரான சூர்யா மிதா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனியார் முதலீட்டாளர்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய செயற்கை நுண்ணறிவு பணியமர்த்தல் ஸ்டார்ட் அப் 'மெர்கோர்' நிறுவனத்தை தனது நண்பர்களான பிரெண்டன் ஃபுடி, ஆதர்ஷ் ஹிரேமத் இணைந்து உருவாக்கியிருக்கிறார் சூர்யா மிதா.
மூவரில் மிதாதான் இளையவர். இணை நிறுவனர்களும் குறைந்த வயதினர்தான்.
மிதாவின் சொத்தின் நிகர மதிப்பு தற்போது 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது அவரை மிக அதிக செல்வத்தைக் குறைந்த வயதில் ஈட்டிய தொழில்நுட்ப தொழில்முனைவோர்களில் ஒருவராக தனித்துக் காட்டியுள்ளது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருபத்துமூன்று வயதில் 'பில்லியனர் பட்டியலில்' முதன்முதலில் இடம் பிடித்து சாதனை படைத்த மார்க் ஜுக்கர்பெர்க்கை சூர்யா மிதா, தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பின்னுக்குத் தள்ளியுள்ளனர். மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்திருக்கின்றனர்.
பிரபல சமூக பிணைப்பு வலைதளமான ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் எலியட் ஜுக்கர்பெர்க். 2008 -இல் 'டைம்' இதழ், உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக ஜுக்கர்பெர்க்கை தெரிவு செய்தது. 2010-இல் ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான சொத்து மதிப்புடன் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த சாதனையைத்தான் சூர்யா மிதா உடைத்திருக்கிறார்.
யார் இந்த சூர்யா மிதா?
சூர்யா மிதாவின் பெற்றோர் தில்லியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். சான் ஜோஸில் பிறந்தார் மிதா. பள்ளிப் பருவத்தில் படிப்பிலும் பேச்சுத் திறனிலும் முன்னணியில் இருந்தார். உயர்கல்வியை ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அதே நேரத்தில், அவரது இணை நிறுவனர் ஹிரேமத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். இதற்கிடையில் நண்பர் ஃபுடி ஜார்ஜ்டவுனில் பொருளாதாரத்தில் முதன்மைப் படிப்பைப் படித்து வந்தார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியமர்த்தலை 'மெர்கோர்' இலகுவாக்கியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிப்போரின் திறன்கள், கல்வித் தகுதியின் பொருத்தத்தை மதிப்பிடும் யுக்தியை வடிவமைத்திருக்கிறது. மனுதாரர்களைத் திறமையைத் தேடும் நிறுவனங்களுடன், குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியில் அமர்த்துகிறது 'மெர்கோர்' நிறுவனம். செயற்கை நுண்ணறிவுத் துறையின் விரைவான வளர்ச்சி இளம் பில்லியனர்களை - கோடீஸ்வரர்களை உருவாக்கி வருகிறது.