தினமணி கொண்டாட்டம்

ஒரத்தூர் மாணவர்களுக்கு உதவிய "சாட்டை'

DIN

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "சாட்டை' திரைப்படத்தில் ஆசிரியர் தயாளனாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். படத்தில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகக் காட்சிகள் வரும். "சாட்டை' படத்தை பார்த்த ஒரத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே. பால சண்முகம், அதைத் தொடர்ந்து தாம் பணியாற்றும் பள்ளியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒரத்தூர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொகுப்பு மதிப்பீடாக 60 மதிப்பெண்களும், படைப்புத்திறன் மதிப்பீடாக 40 மதிப்பெண்களும் அளிக்கப்படும். அவற்றில் படைப்புத்திறன் மதிப்பீட்டுக்கு செயல்முறைத் தேர்வும் உண்டு. ஆனால், அதற்கான பொருள்கள் ஒரத்தூரில் கிடைக்கவில்லை. நாகப்பட்டினத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரத்தூர், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் கிராமம். நாகப்பட்டினத்திற்குச் சென்று படைப்புத்திறன் மதிப்பீட்டுக்கான பொருட்களை வாங்கும் வசதி ஒரத்தூர் மாணவர்களுக்கு இல்லை.
இதனால் ஆசிரியர் பால சண்முகம், தனது சொந்தப் பணம் ரூ.2 ஆயிரத்தை செலவழித்து, ஒரத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் படைப்புத்திறன் வளர்ப்பு வங்கி ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையில் அளித்து வருகிறார்.
" சாட்டை திரைப்படம் தந்த உத்வேகத்தாலேயே எங்களது பள்ளியில் படைப்புத்திறன் வங்கியை ஏற்படுத்தினேன். ரூ.5-க்கு குறைவான விலையில் பொருட்களை விற்று வருகிறோம். மாணவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் திண்பண்டங்களை வாங்குவதற்குப் பதிலாக பயனுள்ள பொருட்களுக்கு மாணவர்கள் செலவிடுகின்றனர்.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி இந்த வங்கி தொடங்கியது முதல் தினசரி குறைந்தது ரூ.200-க்கு விற்பனையாவதே இந்த படைத்திறன் வங்கியின் வெற்றிக்கு சான்று'' என்கிறார் பால சண்முகம்.
"பல்வேறு கல்வியாளர்களிடம் பேசியும் முறையான அடிப்படை வேலைகளை செய்த பிறகே "சாட்டை' படத்தை இயக்கினேன். எனது முயற்சிகள் வீணாகவில்லை என்பதற்கு ஒரத்தூர் பள்ளியே உதாரணம்'' என்கிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.
- எம்.மணிகண்டன் /பிரவீண்குமார்





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT