தினமணி கொண்டாட்டம்

சுற்றுலா விழா: 30 நாடுகள்; 700 பிரதிநிதிகள் - வாருங்கள் வளமாக்குவோம்! 

DIN

தமிழகத்தை பொருத்த அளவில் எல்லா வளமும் உள்ளன என்று தைரியமாககக் கூறலாம். இங்கே உள்ள கலாசாரம் புதியது. மக்களின்  பழக்க வழக்கங்கள் இனிமையானது.  பொருள் பொதிந்தது. அதை வெளிநாட்டவரும், வெளிமாநிலத்தவரும் பார்த்தால் ஆச்சர்யப்படுவதோடு அதை பின்பற்றவும் செய்வார்கள்.  ஆனால் நாம் முழுமையாக நமது சுற்றுலாத்தலங்களை மக்கள் பார்வைக்கு வைத்தோமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறவேண்டும். அந்த முயற்சியில் தான் இறங்கி இருக்கிறார் இந்திய சுற்றுலாத்துறையின் தென்னக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் சஞ்சய்.

"சிலவருடங்களுக்கு முன் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். அப்பொழுது இங்கு என்னால் சில மாதங்கள் தான் இருக்க முடிந்தது. அப்பொழுதே தமிழ் நாட்டின் சுற்றுலாத் தலங்கள் சிலவற்றைப் பார்த்து நான் ஆச்சர்யப்  பட்டேன். இந்த சுற்றுலாத் தலங்களை நாம் வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல; நமது நாட்டில் உள்ள வெளி மாநிலத்தினருக்கும் காட்ட வேண்டும். அவர்களை இங்குள்ள சுற்றுலாத் தலங்களை பார்க்க அழைத்து வரச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். பல காரணங்களால் இப்பொழுதான் அது நடந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் இப்படிச் செய்தால் அந்த மாநிலம் பற்றி மற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். வெளிநாட்டவர்கள் இந்தியா வரும் பொழுது தமிழ் நாட்டையும் தங்களது அட்டவணையில் இணைத்துக் கொள்வார்கள். அதன் மூலம் நமக்கு வருவாயும் கிடைக்கும். இதை குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் செய்கின்றன. தமிழ்நாடும் இதை இந்த ஆண்டு முதல் செய்ய இருக்கின்றது. 

சென்ற வாரம் தொடங்கிய இந்த தமிழ் நாடு ட்ராவல் மார்ட் (Tamil Nadu Travel Mart) என்று பெயரிடப் பட்டுள்ள இந்த  நிகழ்வில்  இந்தியா  மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் இருந்து வரும் சுமார் 700 -க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 30 நாடுகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். இம்மாதம் 12 -ஆம் தேதி  தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் (அக்-15) நிறைவு பெறுகிறது. 

இன்று சென்னையில் உள்ள மக்கள் சுற்றுலா தளங்களை பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம். சில சலுகைகளும் பெறலாம்.  பிரதமர் கூறியபடி, இந்த டூரிஸம் ஃபெஸ்டிவெல் ( சுற்றுலா விழா) இங்கு கொண்டாட நாங்கள் ஆரம்பித்து விட்டோம். சென்ற மாதம் சுற்றுலா விழாவை நாங்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலை சுத்தம் செய்து மக்கள் அங்கு வந்து மன நிம்மதியோடு சாமி கும்பிட வழி வகை செய்தோம்.   இதில் சிறப்பு என்னவென்றால் இந்த நிகழ்ச்சி மத்திய அரசின் பரிசையும் எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.   

வெளிநாட்டில் வாழும் பயண அமைப்பாளர்கள் தமிழ் நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் தனியாக ஒரு சுற்றுலா செல்லவும் வழி வகை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், நமது நட்சத்திர ஓட்டல்கள் மட்டும் அல்லாமல் சாதாரணமாக உள்ள ஓட்டல்கள், அது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும் வண்ணம் செய்யப்பட்டுள்ளன. tour  operators, travel  agents மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையில் பங்கு கொண்ட அனைவரும் இணைந்து நடத்தும் விழா இது என்று கூறினால் அது தவறல்ல. 

இந்த தமிழ் நாடு ட்ராவல் மார்ட்  நிகழ்வின் போது சுமார் 400  சிறிய மற்றும் பெரிய விற்பனையாளர்கள் தங்களது கடையை பரப்பியுள்ளார்கள். பொது மக்களுக்கு பல்வேறு சலுகைகளைக் கொண்ட சுற்றுலாப் பயணங்கள் வழங்கப்படுகிறது.  

கிராமங்கள் எப்படி வாழ்கின்றன என்று சொல்லாமல் சொல்லும் ஒரு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடந்தது.  அந்த நாளில் ஒரு கிராமம் எப்படி சாதாரண நாளில் இருக்கிறது என்றும், விழா நாளில் எப்படி கொண்டாட்டமாக இருக்கிறது என்றும் நாங்கள் காண்பித்தோம். வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள் இதை ரொம்பவே ரசித்துப் பார்த்தார்கள்.  காரணம், விழாவில் பல்வேறு கிராம உணவுகள், நமது பாரம்பரிய நடனங்களான பொய்க்கால் குதிரை, கரகம், பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற ஆட்டங்களும், ரேக்ளா ஓட்டம், கபடி, உறியடி போன்ற விளையாட்டுகளும் நடத்தப் பட்டன.  இதை வெளிநாட்டவர்கள் மட்டும் அல்லாமல் நம்மவர்களும் பார்த்து ரசித்தார்கள்'' என்று கூறினார் ஸ்ரீவத்ஸ் சஞ்சய். இவர் பல்வேறு வெளிநாடுகளில் இந்திய சுற்றுலாத்துறையில்  வேலை செய்துள்ளார். சென்னையை தலைமை இடமாக கொண்டு இவர் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,  லட்சத்  தீவுகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.  
- எஸ்.ஆர். அசோக் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT