தினமணி கொண்டாட்டம்

இந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர்!- சாந்தகுமாரி சிவகடாட்சம்

DIN

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 41
பிரேசில் நாட்டின் குடிமகனான அந்த இளைஞர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவ்வளவு தொலைவு இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு பயணித்து வந்தது பெரும் மகிழ்ச்சியைத் தனக்கு அளிப்பதாகச் சொன்னார்.
"நானும் இந்தியாவுக்கு அடிக்கடி வருவேன்'' என்றார்.
"அதுதான் அப்பட்டமாகத் தெரிகிறதே. உங்கள் டி.ஷர்ட்டில் எங்களின் முழுமுதல் கடவுளாகிய விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறதே'' என்றேன்.
அவர், தான் விநாயகரின் பரம பக்தன் என்றவுடன் நான் திகைத்துப் போனேன். "என்னது, எங்கள் இந்து கடவுள்களின் உருவம் பதித்த டி.ஷர்ட்டுகளை உலகம் முழுவதும் விற்கிறார்கள், அதில் ஒன்றை வாங்கி நீங்கள் அணிந்திருக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன்'' என்றேன்.
"அப்படி மார்க்கெட்டில் உலவும் டி.ஷர்ட்டுகளில் ஒன்றை நான் அணிந்திருந்தாலும், என்னுடைய இஷ்ட தெய்வம் விநாயகர். எனக்கு பாலும் தெளிதேனும்... என்ற பாடல் நன்றாகத் தெரியும்'' என்று குழந்தையின் மழலையில் அவர் அந்த பாடலைச் சொல்ல, என் குடும்பம் வாவ் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.
"இது எப்படி சாத்தியப்பட்டது?'' என்ற என் கேள்விக்கு, "உங்கள் புராணங்களையும், இதிகாசங்களையும் படித்திருக்கிறேன், பிறகு விநாயகரால் கவரப்பட்டு அவர் சம்பந்தமான கணேச புராணா, பிரம்ம புராணா, பிரம்மாண்ட புராணா முதலியவற்றைப் படித்து, அவரைப் பற்றி அறிந்து, தெளிந்து பிறகு கணபதியை அனுதினமும் பூஜிக்கிறேன்'' என்றார்.
"நீங்கள் எல்லோரும் அனுமதி தந்தால் என் முதுகில் பச்சைக் குத்தியிருக்கும் விநாயகரைக் காண்பிக்கிறேன்'' என்றார்.
என் கணவரின் அனுமதியுடன் அவர் தன் முதுகைக் காட்ட, அவருடைய முதுகு முழுவதையும் ஆக்கரமித்து கொண்டிருந்த கணபதியின் திருஉருவத்தைப் பார்த்து நானும், என் கணவரும், மகனும் வாயடைத்துப் போனோம்.
ஏதோ ஒரு நாட்டில் பிறந்து நம்முடைய இந்து மதத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத மனிதர், கணபதியின் மேல் கொண்ட பக்தி என்னை அசர வைத்தது. கணபதியைப் பற்றிய ஒருசில நிகழ்வுகளை மட்டுமே அறிந்திருந்த நான், அந்த தெய்வத்தை நம் நாட்டில் எப்பொழுது வணங்க ஆரம்பித்தார்கள், விநாயக சதுர்த்தி எங்கெல்லாம் கொண்டாடப்பட்டது போன்ற தகவல்களை சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். இந்தோனேசியாவில் வாழும் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், என் கணவருக்கு 20,000 ருபையா நோட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
"இதை நீ வைத்துக் கொள், வினைகளைத் தீர்த்து, நீங்காத செல்வத்தை அளிக்கும் விநாயகரின் படம் இதில் அச்சடிக்கப் பட்டிருக்கிறது'' என்றார். இதை வழங்கிய அந்த நண்பர் ஒரு முகமதியர்.
அந்த 20,000 ருபையா நோட்டின் முன்புறம் கணபதியும், அவருக்குப் பக்கத்தில் (KIHAJAR DEWANTARA) கி ஹாஜர் டிவன்டாரா என்கின்ற இந்தோனேசியா நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும், அந்த நாட்டின் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் நபரின் படமும் இருக்கிறது. நோட்டை திருப்பிப் பார்த்தேன். அதில் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருப்பதைப் போன்ற படம் போடப்பட்டிருக்கிறது.
இது எப்படி சாத்தியப்பட்டது என்ற என் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தேன். இந்தோனேசிய நாட்டிற்கும் நம்முடைய பண்டைய இந்தியாவின் இந்து மதத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வியாபாரிகளும், வணிகர்களும் கணபதியை வழிபட்டு வந்தார்கள். பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வியாபாரத்திற்காக மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளுக்கு செல்லும்பொழுது விநாயகரின் சிலைகளும், அவருடைய வழிபாட்டு முறைகளும் அவர்களோடு அந்த நாடுகளுக்குச் சென்று இருக்கிறது. இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா ஆகிய நாடுகளில் இன்றளவும் விநாயகரை, தடைகளைக் களைந்து, வெற்றியைத் தரும் தெய்வமாக வணங்குகிறார்கள்.
மகாயாணா புத்த மதத்தில், கணேசர் விநாயகா என்று அழைக்கப்படுகிறார். இவரை நடனம் ஆடும் நிலையில் வெளிப் படுத்தியிருக்கிறார்கள். திபெத், சைனா, ஜப்பான் நாட்டிலும் பல்வேறு பெயர்களில் கணபதி உள்ளார். இன்றளவிலும் ஜெயினர்கள் கணபதியை, செல்வத்தின் அதிபதியாக வணங்குகிறார்கள்.
சென்ற வருடம் அயர்லாந்துக்குச் சென்றிருந்தோம். அங்கே டப்ளினில் (Dublin) தன் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் நண்பர் மீனாட்சி சுந்தரம் எங்களை தென்கிழக்கு டப்ளினில் இருக்கும் (Round Wood) ரவுண்ட் வுட் என்கின்ற கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.
(Wicklow) விக்லோ என்கின்ற கவுன்டியில் அந்த கிராமம் இருக்கிறது. "இங்கே என்ன விசேஷம் என்ற கேள்விக்கு, வந்து பாருங்கள் புரியும்'' என்றார். 22 ஏக்கர் பரந்து விரிந்த அந்த இடத்தில் அதனுடைய உரிமையாளர் (Victor bangheld) விக்டர் பேங்ஹெல்ட் என்ற ஜெர்மனியில் பிறந்து இப்பொழுது டப்ளினில் வாழும் யூதர், கோரைப் புல்களையும் பலவகையான மரங்களையும் நட்டு வளர்த்து வருகிறார்.
இதில் என்ன விசேஷம் என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. கண்களால் கண்ட நான் ஸ்தம்பித்து சிலையானேன். 9 விநாயகர் கற்சிலைகள், 5 அடி 6 அங்குலம் என்று தொடங்கி 9 அடி வரை உயர்ந்து, 2-5 டன் எடையுடன் காட்சி அளித்தன. இவ்வளவு சிலைகளையும், வடிவமைத்து, செதுக்கி செய்ய 9 வருடங்கள் ஆயிற்றாம். டி.ப. முருகன் என்கின்ற நம்ம ஊர் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் விக்டர் வடிவமைக்கும்படி சொன்ன முறையில் வரைய, சிற்பியும், ஸ்தபதியுமான டி. பாஸ்கரன் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை உருவாக்கியிருக்கிறார்.
குழல் ஊதும் கணேசர், வீணையை வாசிப்பவர், புத்தகத்தைப் படிப்பவர், மத்தளத்தை தட்டுபவர், ஓய்வாக சாய்ந்த நிலையில் அமர்ந்திருப்பவர், நடனமாடுபவர் என்று பல நிலைகளில் கண்களையும், சிந்தையையும் கவர்ந்த அந்த விநாயகர் சிலைகளைக் கண்ட என் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது. ஒவ்வொரு விநாயகரின் எலி வாகனங்களும் பல வேடங்களைத் தரித்திருந்தன. சிறுவயதில் யுத்தங்களைப் பார்த்து மனம் வெதும்பிய விக்டர், தனது 25-ஆவது வயதிலேயே ஞான மார்க்கத்தைத் தேடி இந்தியா வந்து 25 ஆண்டுகள் இங்கு ஒரு சந்நியாசியாக வாழ்ந்து, பல இடங்களில் இந்துமதத்தைப் பற்றிப் படித்து அறிந்து, யோகாவைக் கற்று, பல வேத, உபநிடதங்களைப் பயின்று மீண்டும் அயர்லாந்துக்குத் திரும்பி தன் தந்தை நல்கிய பொருள் உதவியோடு தன் மனதைக் கவர்ந்த தன் இஷ்ட தெய்வமான விநாயகரின் சிலைகளை, தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மூலமாக இங்கே ரவுண்ட் வுட்டில் நிறுவியிருக்கிறார்.
இப்படி வெளிநாட்டினரையே தன்பால் இழுத்து, அவர்கள் மனதில் குடிகொண்டு அருள்பாலிக்கும் விநாயகர், நம் நாட்டு மக்களின் மனதைக் கவராமல் இருப்பாரா! மும்பையில் நடக்கும் விநாயகசதுர்த்தி திருவிழா மிகவும் பிரபலமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ஹைதராபாத்தில் நான் கண்ட விநாயக சதுர்த்தி திருவிழா என்னை வியப்புக் கடலில் ஆழ்த்தியது.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT