தினமணி கொண்டாட்டம்

கல் மனதையும் கரைத்து விடும் தீபத்தின் ஒளி! 

DIN

சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 78
 அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
 அன்புடைய மாமனும் மாமியும்நீ
 ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
 ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
 துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
 துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ
 இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ இறைவன்நீ
 ஏறூர்ந்த செல்வன் நீயே.
 - திருநாவுக்கரசர்
 மாதா கங்கைக்குக் காட்டப்படும் ஆரத்தியைக் காண மக்கள் பெரும் அளவில் கூடுகின்றனர். இது நடைபெறும் படித்துறைகளை அடைய நடந்து செல்லவேண்டும் அல்லது சைக்கிள் ரிக்க்ஷôவில் பயணிக்க வேண்டும். சந்துகள் குறுகலாவதற்குச் சற்று முன்னால் இறக்கி விடப்படுவதால், பிறகு நடையை நாங்கள் எட்டிப் போட்டோம் என்று சொல்லமுடியாது. ஜன சமுத்திரத்தில் நீந்திச் சென்றோம் என்றே சொல்லலாம்.
 எங்களையும், இன்னும் சில அன்பர்களையும் சுமந்துகொண்டு அந்த மோட்டார் படகு தசஅஷ்வமேத படித்துறையை நெருங்கியது. ஏற்கெனவே அங்கு பல படகுகள் அணிவகுத்து நின்றதால் கிடைத்த இடத்தில் எங்கள் படகை படகோட்டி நிறுத்தினார். சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். அம்மாடி இவ்வளவு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்களே என்று வியந்தேன். சாதி, மதம், நாடு, நிறம், சமூக அந்தஸ்து என்ற எல்லா எல்லைக் கோடுகளையும் கடந்து மக்கள் "கங்கா ஆரத்தி"யைக் காண குழுமி இருந்தனர்.
 இலைகளைக் கொண்டு சிறிய கப்பல் போலச் செய்து, அதனுள் பூக்களை வைத்து அதன் நடுவே, சிறிய அகல் விளக்கை வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். கங்கைக்கு ஆரத்தி எடுக்கும்பொழுது, நாமும் இந்த விளக்குகளைக் கொண்டு கங்கா மாதாவுக்கு ஆரத்தி எடுத்து, பிறகு அந்த விளக்குகளைக் கங்கையில் மிதக்க விடலாம் என்பதினால், நானும் சில விளக்குகளை வாங்கினேன்.
 கங்கா ஆரத்தி தொடங்கியது. குழுமியிருந்தோர் "கங்கா மாதாவுக்கு ஜெய்' என்று கோஷமிட்டனர். நாங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டோம். படித்துறையில் ஏழு ஆடவர்கள் எல்லோருமே இளைஞர்களாக இருந்தனர். முதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தியை ஆரம்பித்தனர். பிறகு ஏழு பேருமே ஒரே மாதிரியாக சங்கு ஊதினர். பிறகு பெரிய தூபக்காலில் சாம்பிராணியைப் போட்டு கங்கா மாதாவுக்குச் சாம்பிராணி புகையை ஆரத்தியாகக் காட்டினர்.
 இவற்றை எல்லாம் செய்யும்பொழுதே அவர்கள் உரத்த குரலில் கங்கையின் பெருமைகளைப் பாடல்களாகப் பாடுகின்றனர்.
 பிறகு, ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ள தூபக்காலில் கற்பூரக் கட்டிகளை வைத்து, பற்ற வைத்து தீப ஆராதனை செய்தனர். மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றிப்பாடி, வெண் சாமரம் வீசி, நிறைவாகத் தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்குத் தட்டில் வைத்து ஆர்த்தி எடுத்தனர். இவ்வாறாக ஆர்த்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து, தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசைநோக்கித் திரும்புகின்றனர்.
 கங்கையின் தரிசனம், அவளுக்குக் காட்டப்பட்ட ஆரத்தி, சில்லென்று என் மீது மோதிய கங்கையின் காற்று, என்று இவை எல்லாம் தந்த சுகானுபாவத்தில் என் உள்ளம் இன்ப அதிர்வுகளை ஏந்தி மகிழ்ந்தது.
 கங்கா மாதாவே, பாரத நாட்டின் புனித சின்னமே, பாவங்களை நீக்குபவளே, முக்தியை நல்குபவளே, உயிர்களைக் காப்பவளே, ஞானத்தின் பீடமே, நன்றி நன்றி என்று கண்களில் நீர்மல்க நானும் என் கணவரும் இலையில் இருந்த தீபங்களை ஏற்றி, அவளுக்குத் தீப ஆராதனை செய்து, அவற்றைக் கங்கை நீரில் மிதக்க விட்டோம். அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் தவழவிட்ட தீபங்கள், காற்றின் வேகத்திலும், நதியின் ஓட்டத்திலும் அணையாமல் மிதந்து சென்ற அற்புதக் காட்சியை எப்படி வர்ணிப்பேன். ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் வானிலிருந்து இறங்கி கங்கையைத் தழுவிக்கொண்டன என்பேன்.
 காசியில் காலாற நடந்து செல்வதற்கே பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் 33,000 கோயில்களைக் கடந்து, 100 பில்லியன் சிவலிங்கங்களைக் கொண்ட காசியை வலம் வரும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மோட்சம் கைகூடுகிறது.
 காசி விஸ்வநாதர் கோயிலில் நடக்கும் எல்லா பூஜைகளுமே காண்பதற்கு அரிய காட்சிகளாக அணிவகுத்து நின்றாலும், என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவை "சப்தரிஷி" ஆர்த்தியும், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் அபிஷேகத்திற்குப் பிறகு ஆராதனை பொழுது அடிக்கப்படும் மிகப் பெரிய "டமரு' அதாவது உடுக்கை எழுப்பும் நாத ஒலியுமாக இருக்கிறது.
 ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சப்தரிஷி ஆர்த்தி ஆரம்பமாகிறது. காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகின்ற ஜோதிர்லிங்கத்தைச் சுற்றி ஏழு பண்டிதர்கள் அமர்ந்து கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய கைகளில் ஐந்து திரிகளைக் கொண்டு எரியும் எண்ணெய் விளக்குகளை ஏந்தி, சாம வேதத்திலிருந்து உதித்த வார்த்தைகளை, "ஸ்ரீ' என்று அழைக்கப்படும் இந்துஸ்தானி ராகத்தில் குரல் உயர்த்திப் பாடுகின்றனர். அவர்களின் குரலின் ஏற்றதாழ்வுகளுக்கு ஏற்ப, கைகளில் பிடித்துள்ள விளக்குகளை ஒரேமாதிரியான திசைகளில் மேலும், கீழுமாக ஏத்தி, இறக்கி வழிபடுகின்றனர். அந்த சமயத்தில் கோயிலின் மணிகள் அடிக்கப்படுகின்றன. மணிகளின் நாதம், சாமவேதத்தின் கானம், தீபத்தின் ஒளி கல் மனதையும் கரைத்து, நான் என்னும் அகங்காரத்தை அழித்து பக்தியில் மூழ்கடித்து வருகிறது. உள்ளம் இறைவனோடு கலந்து நிலைக்கிறது.
 வேத காலத்தில் வாழ்ந்த ஏழு ரிஷிகளான வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், கெளதமர், பரத்வாஜர், ஜமதக்னி, அத்ரி என்பவர்களுக்கு சிவபெருமான் யோக சாஸ்திரத்தின் மேன்மைகளை எடுத்துரைத்து அவைகளை உலகத்தின் ஏழு மூலைகளிலும் பரவச் செய்வது உங்கள் வேலை என்று சொல்லி அனுப்புகிறார்.
 இறைவன் இட்ட பணியை நிறைவேற்ற ஏழு ரிஷிகளும் ஆவல் கொண்டிருந்தாலும், சிவபெருமானைப் பிரிய மனம் இல்லாமல் தடுமாறி நின்றனர். அப்பொழுது சிவபெருமான் சப்தரிஷி ஆர்த்தியை அறிமுகப்படுத்தி இந்த ஆர்த்தியின் பொழுது அந்த ஏழு ரிஷிகளையும் நினைவுபடுத்தி, ஆர்த்தி எடுப்பதினால், ஏழு ரிஷிகளும் அவருடைய அருகாமையை தினமும் உணர்ந்து மகிழ்வார்கள் என்று ஆசீர்வாதம் செய்து அருளினார். இன்றளவும், மாலை 7 மணிக்கு அந்த ரிஷிகளின் பெயரால் நடத்தப்படும் பூஜை தவறாமல் நாள்தோறும் நடக்கிறது. இன்றைய கலியுகத்தில் ஆரத்தியின் சமயத்தில் அகஸ்தியருக்குப் பதிலாக காஷ்யபா இடம் பெறுகிறார். இப்படி யுகங்கள் தோறும் ஒரு முனிவர் மாறுபட்டு வருவாராம்.
 ஒன்பது மணிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நடத்தும் பூஜை நடைபெறுகிறது. அதாவது அதிகாலை 3 மணி, பகல் 11.30 மணி, பிறகு இரவு 9 மணிக்கு நடந்தேறும் அபிஷேகத்திற்கான பொருட்களையும், பிரசாதத்தையும் அவர்கள் வழங்குவது, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. சம்போ, சம்போ, சங்கர, மகாதேவா என்று கோஷம் எழுப்பியபடி பொருட்களைச் சுமந்து வருவதைப் பார்ப்பதே கண்கொள்ளாத காட்சியாக உள்ளது.
 இனிய தமிழைப்பேசி சங்கரனின் நாமங்களைக் கூறி வருபவர்கள் தரும் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்து, அலங்காரங்கள் முடிந்து, பெரிய உடுக்கையைத் தட்டி, கோயில் மணிகள் ஒலிக்க, ஜால்ராக்கள் சத்தம் இட, காட்டப்படும் ஆராதனையைக் கண்ட கண்களும், கேட்ட காதும், அவற்றை உள்வாங்கிய மனமும், கைலாயத்திற்கே பயணித்து, அந்தக் கைலாயபதியிடம் சரண் அடைகிறது. இவ்வுலகில் "யாரும் சதம் அல்ல உன் திருவடிகளே சதம்" என்று பட்டினத்தாரின் சரணாகதி நிலையை நாமும் துய்க்கிறோம்.
 காசியில், நாட்டுக்கோட்டை செட்டியார்களால் 1800-இல் ஆரம்பிக்கப்பட்ட, செட்டியார் சத்திரம் மிகக் குறைந்த வாடகையில் தங்கும் இடங்களைக் கொடுக்கிறது. காலை ஆகாரம், பகல், இரவு உணவுகளைப் பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கிறது. இன்றளவும் தொடரும் இந்தக் கைங்கரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுவது என்னைப் பெருமை கொள்ள வைத்தது.
 என்னுடன் பயணித்து உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பல திருவிழாக்களையும், நாள்தோறும் திருவிழாக் கோலம் பூணும் காசியையும் கண்டு களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
 (நிறைவடைந்தது)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT