தினமணி கொண்டாட்டம்

நூற்றாண்டு காணும்  நெல்லை ஆளுமைகள்!

கே.எஸ். ராதாகிருஷ்ணன்

தெற்குச் சீமையில் பிறந்த காருகுறிச்சி அருணாசலம், மூத்த வழக்குரைஞர் என்.டி.வானமாமலை, கு.அழகிரிசாமி, கி.ராஜ நாராயணன், வழக்குரைஞர் பாளை சண்முகம், எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் (2022) நூற்றாண்டு. நெல்லைச் சீமையில் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும், கி.ராஜ நாராயணும், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ரா.பி.சேதுப்பிள்ளையும், வல்லிக்கண்ணனும் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது; நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது.

காருகுறிச்சி அருணாசலம்

சங்கீதச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் மறைவுக்குப் அவரது இடத்தில் அமர்ந்து ஆட்சி செய்தவர் அவரது சீடர் காருகுறிச்சி அருணாசலம். ராஜரத்தினம் மறைந்த இழப்பைக் காருகுறிச்சிதான் ஈடு செய்தார். அவருடைய சொந்த ஊரான காருகுறிச்சி, திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருக்கிறது.

திருவாவடுதுறையில் நாகஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து கற்றுக் கொண்டார். நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார்.

சினிமா ரசிகர்களுக்குக் "கொஞ்சும் சலங்கை'யில் "சிங்காரவேலனே தேவா' எனும் பாட்டில் அவர் வாசித்த வாசிப்பு மறந்திருக்காது. அருணாசலம் தனது நாகஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்ப தோடு, சில திரைப்படங்களிலும் வாசித்துள்ளார். "அனார்கலி' என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடும் ஒரு பாடலை காருக்குறிச்சி தனது நாகஸ்வரத்தில் இசைத்திருப்பார்.

சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.

காருகுறிச்சி அருணாசலம் மாரடைப்பால் இறக்கும்போது அவருக்கு வயசு 43 தான். அவருக்கு 5 மகள்கள், ஒரு மகன். கோவில்பட்டி கடலையூர் சாலை ஓரத்தில் காருகுறிச்சி அருணாசலத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. 9.7.1967-இல் அவருடைய சிலையை நடிகர் ஜெமினி கணேசன், மங்கையர் திலகம் சாவித்திரி ஆகியோர் வழங்க அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எம்,ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

என்.டி.வானமாமலை

என்.டி.வானமாமலையின் தந்தையார் நா.திருவேங்கடாச்சாரியார் கொல்கத்தாவில் தோல் தொழிற்சாலையை நடத்திய தொழிலதிபர். கொல்கத்தாவில்தான் என்.டி.வி. பிறந்தார். இருப்பினும், அவருடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரிதான்.

என்.டி.வானமாமலை சென்னை மாநிலக் கல்லூரியில் இராசயனத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வழக்குரைஞரானார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகராகவும் என்.டி.வி. நெல்லையில் வலம் வந்தார். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் எல்லாம் உரையாற்றுவார். அப்போது அவருடைய உரைக்கு பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஆர்.நல்லகண்ணு, ப.மாணிக்கம், பாலதண்டாயுதம், ஏ.நல்லசிவன், ஐ.மாயாண்டிபாரதி, ஆர்.எஸ்.ஜேக்கப், மீனாட்சிநாதன் உள்ளிட்ட 51 பேருக்கு மேற்பட்டவர்களின் மீது, 1952-இல் நெல்லை சதி வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் கடுமையான தண்டனைக் கைதிகளாக அவர்கள் இருந்தனர். அப்போது, நெல்லை வழக்குமன்றத்தில் வழக்கு நடத்தி என்.டி.வி. அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக 1964-இல் இருந்து மத்திய முன்னாள் அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோடு இணைந்து குற்றவியல் வழக்குரைஞராகப் பணிகளை மேற்கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கில், என்.டி.வி. எம்.ஜி.ஆருக்காக ஆஜரானார். எம்.ஜி.ஆர். வழக்குரைஞர் கட்டணமாக அன்றைக்கு ஏறத்தாழ ரூ.1 லட்சம் கொடுத்தபோது, அதை மறுத்துவிட்டு வெறும் ரூ.5 ஆயிரம் போதும் என்று பெற்றுக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தியவரும் என்.டி.வானமாமலை.

கு.அழகிரிசாமி

சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவருமான கு.அழகிரிசாமி 1923- ஆம் ஆண்டு செப்டம்பர் 23-இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்தார். கோவில்பட்டியில் ஏ.வி. பள்ளியிலும் வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர். வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், புதுமைப்பித்தன் ஆகியோர் இவரது சமகால எழுத்தாளர்கள். இவர் எழுதிய "உறக்கம் கொள்ளுமா' என்ற கதை "ஆனந்த போதினி' பத்திரிகையில் முதன்முதலாக வெளிவந்தது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை இவருக்கு கிடைத்தது. எழுத்து மீது கொண்ட ஆர்வத்தால் அரசாங்க வேலையை உதறிவிட்டுச் சென்னைக்கு வந்தார். "ஆனந்த போதினி' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1944 முதல் 1952 வரை சென்னையில் "பிரசண்ட விகடன்', "தமிழ்மணி', "சக்தி' ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1952- இல் "தமிழ்நேசன்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்று மலேசியா சென்றார்.
"ராஜா வந்தார்' என்ற இவரது கதை இந்திய மொழிகளிலும் ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

மாக்சிம் கார்க்கியின் நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்தான். இவர் எழுதிய "கவிச்சக்ரவர்த்தி', "வஞ்ச மகள்' ஆகிய நாடகங்கள் மலேசியாவில் உயர்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகத்திலும் பாடப் புத்தகங்களாக இடம்பெற்றுள்ளன.

1957-இல் சென்னை திரும்பிய இவர், மூன்றாண்டுகள் காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தார். 1963-இல் "நவசக்தி' பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.

"ராஜா வந்தார்', "டாக்டர் அனுராதா', "தீராத விளையாட்டு', "வாழ்க்கைப் பாதை', "காளிவரம்', "மக்சிம் கார்க்கியின் நூல்கள்', "லெனினுடன் சில நாட்கள்', "விரோதி', "தவப்பயன்', "வரப்பிரசாதம்', "துறவு', "நான் கண்ட எழுத்தாளர்கள்' உள்ளிட்ட இவருடைய படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய கடிதங்களை "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற தலைப்பில் கி.ராஜநாராயணன் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்.

கு.அழகிரிசாமி 1970- ஆம் ஆண்டு தனது 47-வதுவயதில் மறைந்தார்.

கி.ராஜநாராயணன்

கி.ரா. இடைச்செவலில் வாழ்ந்த காலங்களில் "கரிசல்வட்டார வழக்குச் சொல்லகராதி' வட்டாரச் சொல் அகராதியை கொண்டுவந்த சிறப்புக்குரியவர். தமிழ்நாட்டில் எந்த அரசும் பல்கலைக்கழகமும் செய்யாத பணியை கி.ரா. செய்து காட்டினார்.

கரிசல் காட்டின் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளையும் கொண்டுவந்தார். இதுவும் தமிழகத்தில் ஒரு முன்முயற்சிதான்.

1949-ஆம் ஆண்டு நெல்லை சதிவழக்கில் கோவில்பட்டியைச் சேர்ந்த கி.ரா.வையும் முதலில் சேர்த்துவிட்டனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அதை அறிந்த டி.கே.சி. அப்போதைய சென்னை ராஜதானியின் முதல்வர் குமாரசாமி ராஜாவைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன் பிறகு கி.ரா. அந்த சதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

இதுபோல் 1970 - களில் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படி இலக்கிய கர்த்தாவாக மட்டுமல்லாமல், மக்களுக்கான போராட்டங்களிலும் பங்கேற்றவர் கி.ரா. பேச்சு வழக்கைக் கொச்சை மொழி என்று தமிழ்ப்பண்டித உலகம் சிறுமைப்படுத்தி வந்த பின்னணியில் உழைக்கும் மக்களின் மொழிக்கும் அவர்களின் சொற்களுக்கும் உரிய இடத்தைப் பெற்றுத் தரப் போராடிய படைப்பாளி என்று அவரைக் கொண்டாட வேண்டும்.

"கோபல்லபுரம்', "கோபல்லபுரத்து மக்கள்' என்கிற அவருடைய நாவல்களைப்போலவே அவருடைய சிறுகதைகளும் தனித்த முத்திரை பதித்தவை. "கதவு' என்னும் கதை அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த கதை. "வேட்டி' என்கிற கதை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரைப் பற்றிய கதை. பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சார்ந்த வாழ்க்கையை மையமிட்டே அவரது அத்தனை கதைகளும் எழுதப்பட்டுள்ளன.

கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, ரசிகமணி போல ரசிகர், விமர்சகர், இசையின் இலக்கணம் அறிந்தவர். பொதுவுடைமைவாதி, விவசாயிகள் நலனுக்காகப் போராடிய போராளி, பண்பாளர், ஏடுகளில் பத்தியாளர் என பன்முகத்தன்மையைத் தன்னகத்தே கொண்டவர் கி.ராஜநாராயணன். 1950-இல் எழுத ஆரம்பித்த "கி.ரா'வின் பேனாவுக்கு அவருடைய இறுதிக்காலம் வரை ஓய்விருந்ததில்லை.

பாளை சண்முகம்

பிரபல குற்றவியல் வழக்குரைஞரான சண்முகம் பாளையங் கோட்டையில் 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 17- இல் பிறந்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டவர்.

1949- இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போது பாதுகாப்புச் சட்டப்படி கைதானார்.

1957- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 4,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் அடுத்து வந்த 1962- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று சிறைவாசம் புகுந்தவர்.

1967- ஆம் ஆண்டு மிசா கைதியாக ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீதான சர்க்காரிய கமிஷன் விசாரணையின்போது கருணாநிதி சார்பாக பாளை சண்முகம் ஆஜரானார்.

நடிகமணி டி.வி.நாராயணசாமி

அண்ணாவிடம் நெருக்கமான பழக்கம் உள்ளவர் டி.வி.நாராயணசாமி. அவர் தி.மு.க.வின் ஆரம்ப காலப் பேச்சாளராக மாறினார். கட்சி நாடகங்களையும் நடத்தியிருக்கிறார்.

நடிகமணி டி.வி.நாராயணசாமி எம்.ஜி.ஆரை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தொடக்க காலத்தில் கருணாநிதி திருவாரூரில் இருந்தபோது, அண்ணாவிடம் கருணாநிதியின் ஆற்றல்களை எடுத்துச் சொன்னவர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரம் என்ற சிறிய கிராமம் உள்ளது. அங்கே கிராம முன்சீப்பாக இருந்த வீரப்பன், வேலம்மாள் இணையர்க்கு மகனாகப் பிறந்தவர் தான் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT