தினமணி கொண்டாட்டம்

'காந்திகிராமம்' தொடங்கிய புரட்சிப் பெண்!

பா.ராதாகிருஷ்ணன்

காந்திகிராம் பல்கலைக்கழகமானது பல லட்சம் பேருக்கு கல்வி பயிற்றுவித்து, இன்றும் கல்விச் சேவையைத் தொடர்கிறது. இதைத் தொடங்கிய புரட்சிப் பெண் சௌந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை அறிவோமா?

1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கு மகளாக திருநெல்வேலியில் பிறந்தார் செளந்தரம். இவருக்கு இளம்வயதிலேயே தனது உறவினரும் மருத்துவருமான செளந்தரராஜனுடன் 1918-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

அந்தக் காலத்தில் "பிளேக்' எனும் கொள்ளை நோய் தாக்கி மக்கள் பலரும் கூட்டம், கூட்டமாக மடிந்தனர். சௌந்திரராஜன் தனது உயிரை துச்சமென மதித்து அவர்களுக்கு சிகிச்சையை அளித்தார். அதே பிளேக் நோய் அவரையும் தாக்கியது. மரணப் படுக்கையில் விழுந்தார்.

செய்வதறியாது திகைத்த சௌந்தரராஜன் 14 வயதான தனது மனைவி செளந்தரத்தை அழைத்தார். ""தொடர்ந்து நீ படிக்க வேண்டும். எந்தக் காரணம் முன்னிட்டும் கல்வி கற்பதை நிறுத்திவிடாதே. மருத்துவப் படிப்பை படித்து முடித்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்'' என்றார்.

இதோடு நிறுத்தவில்லை. ""எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், என்னை மறந்துவிட்டு, வேறொரு திருமணம் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்'' என்றும் கூறினார். பின்னர், அவர் 1925-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

இளம் வயதிலேயே கணவரை பறிகொடுத்த செளந்தரத்துக்கு, கல்வியைத் தொடர வசதியும் வாய்ப்பும் அமைத்துத் தந்தது குடும்பம்.

தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்துவைத்தார் செளந்தரம். இங்குதான் காந்தியடிகளின் மருத்துவர் சுசீலா நய்யரின் அறிமுகம் கிடைத்தது. காந்தியைச் சந்தித்தார் செளந்தரம். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க எண்ணிய செளந்தரத்தைத் தடுத்து நிறுத்தினார் காந்தி. "" முதலில் மருத்துவப் படிப்பைப் படித்து முடி. பிறகு இங்கு வா'' என்றார்.
லேடி ஹார்டிங் கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற செளந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய், மகப்பேறியல் பட்டமும் பெற்றார். 1936-ஆம் ஆண்டு, தனது 32-ஆவது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர், காந்தியின் சேவாகிராம் ஆஸ்ரமத்துக்குச் சென்றார்.

அங்கு செளந்தரம், காதி உடுத்தவும் நூல் நூற்கவும் கற்றுக் கொண்டார்.

இங்குதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான ஜி.ராமச்சந்திரனைச் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பினர். ராமச்சந்திரன் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்வதாகக் காந்தியிடம் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் எழுதி கையெழுத்திட்டுத் தந்திருந்தார். அதுவரை இருவரும் காத்திருந்தனர்.

திருமணம் செய்து கொள்ளும் தங்கள் எண்ணத்தை காந்தியிடம் இருவரும் தெரிவித்தனர். காந்தியும் ராஜாஜியும் மறுமணத்துக்கு சுந்தரம் ஐயங்காரிடம் அனுமதி கோரினர். சுந்தரம் ஐயங்கார் திட்டவட்டமாக முடியாது என்று மறுத்தார்.

""ஒருவரையொருவர் சந்திக்கக் கூடாது; கடிதப் போக்குவரத்து கூடாது'' என கடுமையான விதிகளை விதித்து, ஓராண்டு முடிந்ததும் காதல் இருந்தால் உங்கள் திருமணத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார் காந்தி.

ஓராண்டு கழித்து இருவரும் காந்தியைச் சந்திக்க, அவர்கள் மன உறுதியைப் புரிந்துகொண்டார் காந்தி. 1940-ஆம் ஆண்டு நவம்பர் 2-இல் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் சேவாகிராமில் உள்ள காந்தி ஆஸ்ரமத்தில் எளிமையாக திருமணம் செய்துவைத்தார் காந்தி.

கஸ்தூரிபா காந்தி நூற்ற கதர் சேலையை செளந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

"விதவை மறுமணம், ஜாதி மறுப்பு, வெவ்வேறு மொழிப் பின்புலம், பெற்றோர் சம்மதமின்றி திருமணம்..' என்று இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது.

1942-இல் செளந்தரம் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, கேரளத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியேற்றியது.

1943-இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து, சௌந்தரம் சமூகப் பணிகளை மேற்கொண்டார். "அன்னை கிராமிய மருத்துவப் பணி' என்ற பெயரில் இலவச மருத்துவ உதவிகளை மேற்கொண்டார்.

காந்தி தொடங்கிய கஸ்தூரிபா அறக்கட்டளையின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றினர் தம்பதியினர்.

எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க எண்ணிய செளந்தரமும் ராமச்சந்திரனும், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தையொட்டி, 1947-ஆம் ஆண்டு அக். 7-இல் "காந்தி கிராமம்' ஒன்றை நிறுவினர்.

இரண்டு ஏக்கரில் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. முழுக்க, முழுக்கத் தங்கள் பணிகளைத் தாங்களே செய்ய இங்கு வந்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டனர்.

கஸ்தூரிபா இலவச மருத்துவமனை மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார் செளந்தரம். "ஆரோக்கிய சேவகர்' என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லித்தரப்பட்டு, அவர்கள் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளிகள் இல்லாத பகுதிகளில் ஆசிரியர்களாகவும், மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் செவிலியர்களாகவும், வன்முறைகள் வெடித்த இடங்களில் சமூக நல்லிணக்கத்துக்குப் போராடும் களப் போராளிகளாகவும் இந்த ஆரோக்கிய சேவகர்கள் பணியாற்றினர்.

ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்திகிராமப் பள்ளி, கல்லூரியாக வளர்ந்து 1976-ஆம் ஆண்டு, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.

1952, 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆத்தூர், வேடசந்தூர் தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் செளந்தரம்.

பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செளந்தரத்தின் நேர்மையும் திறமையும், மக்கள் நேசப் பாங்கும் கவனித்த ஜவஹர்லால் நேரு, கல்வித்துறை துணை அமைச்சராக்க நியமித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்தபெண் ஒருவர் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது அதுவே முதன்முறை.

தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கிய பெருமையும் செளந்தரத்தையே சேரும். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள், கல்லூரிகளுக்குக் கொண்டுவந்ததும் இவரது முக்கியப் பங்களிப்புதான். இதற்காக, பத்மவிபூஷண் பட்டமும் பெற்றார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார் செளந்தரம். அதன்பின்னர், அரசியலில் இருந்து விலகியவர், முழு நேர சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1984 -ஆம் ஆண்டு அக். 21-இல் மறைவுற்றார். ஆனாலும், அவரது பெயரை இன்னமும் சொல்லியபடி கம்பீரமாகநிற்கிறது காந்திகிராமம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT