தினமணி கொண்டாட்டம்

துபையில் திரௌபதி!

எஸ். சந்திர மௌலி

நாடக ஆசிரியர், இயக்குநர் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் நடத்திவரும் நாடகக் குழு கோமல் தியேட்டர்ஸ். அதன் லேட்டஸ்ட் நாடகம் திரெளபதி. பெரும் பாராட்டைப் பெற்றிருக்கும் இந்த நாடகத்தை நடத்துவதற்காக,  துபைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த தாரிணி கோமல் அளித்த பேட்டி:

 நாடக ஆக்கம் குறித்து...?

வானொலியில் அறிவிப்பாளராக இருந்திருக்கிறேன்.  தொலைக்காட்சியில் பல சிறுகதைகள் நாடகமாக்கிக் கொடுத்திருக்கிறேன். இடையில் வங்கிப்பணி, கணினித்துறை என்று சில ஆண்டுகள் வேலை பார்த்தபோது சற்றே இடைவெளி ஏற்பட்டது.

மேடை பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

 2012-இல் நான் பார்த்துவந்த வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, கோமல் தியேட்டர்ஸ் துவங்கி, மீண்டும் "தண்ணீர் தண்ணீர்'  நாடகத்தை அரங்கேற்றினேன்.

சிறுகதைகள், நாடக வடிவ முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

சிறுகதைகளில் இடம்பெறும் ஒரு சம்பவம், ஒரு உணர்வு அல்லது ஒரு கதாபாத்திரம் மின்னல் போல பளிச்சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.  எனவே, ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன். கல்கி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி போன்ற சிறந்த எழுத்தாளர்களின் முத்திரை சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நாடகமாக்கி வழங்கினோம்.  அடுத்து சுஜாதாவின் சிறுகதைகளில் இருந்து கிரைம், நகைச்சுவை, அறிவியல் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட ஐந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து, நாடகமாக்கினோம். இவை நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இந்த ஆண்டு நாடக விழா போட்டியில் உங்களின் "அவள் பெயர் சக்தி' நாடகம்  பத்து பரிசுகளை அள்ளிச் சென்றதே?

ஆமாம்! பொது முடக்கக் காலத்தில் நான் எழுதிய நாடகம் அது. நாலு தலைமுறைகளில் பெண்களிடையே வந்திருக்கும் மாற்றம் பற்றிப் பேசும் கதை.  நாடக விழா போட்டியில் சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிப்பு என்று மொத்தம் பத்து பரிசுகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் அர்த்தமுள்ள, ஆழமான நாடகங்களை வழங்க  ஊக்கம் கிடைத்துள்ளது;

 திரெளபதி நாடகம் பற்றி?

வியாச பாரதம், வில்லிபாரதம், பாஞ்சாலி சபதம் எல்லாவற்றையும் படித்துவிட்டு நான் திரைக்கதையை எழுதினேன். மகாபாரதத்தில் தர்மன், அர்ஜுனன், துரியோதனன் போன்ற மற்ற கதாபாத்திரங்கள் போல திரெளபதி அத்தனை  பிரபலமில்லை. 

"திரெளபதி என்றதும் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய மனைவி' என்று லேசாக சொல்லிவிடுவார்கள். ஆனால், அவர் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் எத்தனை! அவற்றை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்டு தனது வெற்றியை நிலைநாட்டியவள் திரெளபதி.  மேடையில் எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.  வசனங்கள் கவிதை நடையில் அதே சமயம் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பாடல்களுக்கு இசை ராஜ்குமார் பாரதி.  மூன்று மாதம் கடுமையான பயிற்சி மற்றும் ஒத்திகையின் மேடை வெளிப்பாடுதான் திரெளபதி!

சென்னையில் நாடகத்தைப் பார்த்த சில துபை தமிழர்கள் மிகவும் கவரப்பட்டு, துபையில் நாடகம் நடத்த அழைத்திருக்கிறார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT