தினமணி கொண்டாட்டம்

தரைப்பறவையால் உயர்ந்தேன்

DIN

அதிகம் பறக்க இயலாத தரைப் பறவையான காடைகளே எங்களது  வாழ்வில் உயர, உயர பறக்க வைக்கிறது''  என்கிறார் ஐம்பத்து ஐந்து வயதான மு. செல்வராணி. 

பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த இவர், அருமடல் பிரிவு சாலையில் ஆறு சென்ட் இடத்தில் ஆயிரக்கணக்கான காடைகள் வசிக்கும் பண்ணையை அமைத்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

""எனது கணவர் முத்துசாமி மதுப் பழக்கத்துக்கு ஆளாகி, குடும்பப் பொறுப்புகளை சரிவர கவனிக்காமல் இருந்தார்.  எனது இரு மகள்கள் நித்யா, நதியா,  மகன் பிரபு ஆகியோரது எதிர்காலத்துக்காக கூலி வேலைக்குச் சென்றேன். சிறுக சிறுகச் சேர்த்து, இரு மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தேன். 

2020-இல் கணவர் இறந்தவுடன்  மகன் பிரபுவும் வளர்ந்து குடும்பப் பொறுப்பை ஏற்றார்.   இருப்பினும், உழைத்த கால்கள் தினமும் வேலைக்குச் செல்ல ஓடின. அப்போதுதான்  காடை வளர்ப்புத் தொழிலை மகன் பிரபு அறிமுகம் செய்தார். தொடக்கத்தில், காடை குஞ்சுகளை சேலத்திலிருந்து வாங்கி வந்து குஞ்சுகளாகவும், முட்டைகளாகவும் விற்பனை செய்யத் தொடங்கினேன். படிப்படியாக முழுமையாகக் கற்றேன். ஆறு  சென்ட் நிலத்தில் சிறியதாக பண்ணையை அமைத்து, சாதித்தேன்.

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடைகளை வளர்க்கலாம். கோழி வளர்ப்பைப் போன்று,  அதிக முதலீடு தேவையில்லை.  குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். 

காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் என்பதால்,  எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போன்று பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆறு வாரத்துக்குள் 
விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. 

இதனால், குறைந்த நாள்களிலேயே லாபத்தைப் பெற முடியும். 

ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உள்கொள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது.

ஒரு கூண்டு, ஒரு காப்பக அமைப்பைப் பயன்படுத்தி எளிமையாகத் தொடங்கலாம்.   நல்ல முட்டை உற்பத்தி, குஞ்சு பொரிப்பதற்காக காடைகளில் 1:3 விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆண்-பெண் விகிதத்தை சமச்சீராகப் பராமரிக்கிறேன்.

குஞ்சுகள், முட்டைகளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்கிறேன். இந்த விகிதம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் சதவீதத்தை அதிகரிக்க உதவுகிறது. காடைகள் மற்ற பறவைகளைவிட வேகமாக முதிர்ச்சியடைவதால் அவை ஆறு முதல் ஏழு வாரங்களில் முட்டையிடும்.  ஆண்டுக்கு 280 முட்டைகளை இடும்.  இவை மாலையில் மட்டுமே முட்டையிடும் என்பதால் மற்ற காடைகளால் முட்டைகள் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே,  முட்டை இடும் நேரம் அறிந்து அவற்றை விரைவாகச் சேகரிக்க வேண்டியது அவசியம்.

பண்ணைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தவிர்த்து மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் ஈட்டுகிறேன். ஒரு நாள் ஆன குஞ்சுகளை 8 ரூபாய் வரையில் வளர்ப்புத் தொழிலுக்காக விற்கிறேன். நன்கு வளர்ந்த காடைகள் ஒன்று உயிருடன் ரூ.50-க்கு விற்பனை செய்ய முடிகிறது. உணவகங்களுக்கு இறைச்சியாக விற்றால் இருமடங்கு லாபம் ஈட்டலாம். இதுமட்டுல்லாது ஒரு டஜன் காடை முட்டைகளை 50 ரூபாய்க்கு விற்கிறேன். எங்களின் பிரத்யேக காடை முட்டை பணியாரம் பெரம்பலூரில் மிகவும் பிரசித்தம். 

உழவர் சந்தையில் தினம்தோறும் காலையில் காடை முட்டைகளை விற்பனை செய்வதுடன் பனியாரக்கடையை நடத்துகிறேன். ஸ்பிரிங் பொட்டேட்டோ போன்று ஒரு குச்சியில் 5 காடை முட்டை பனியாரம் தயாரித்து வழங்குகிறேன். ஒரு குச்சி ரூ.30-க்கு விற்பனையாகிறது.

தற்போது, பலரும் காடை முட்டைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது காடை முட்டை, இறைச்சி இரண்டும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்தக் காடைகள்தான் சமூகப் பொருளாதார ஏற்றம், இறக்கம் நிறைந்த இந்த உலகில் தனி மனுஷியாக பறக்க இறகுகளைத் தந்துள்ளன''  என்கிறார் செல்வராணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT