முகப்பு
இளைஞர்மணி

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

ஓருமுறை தோற்றுவிட்டால் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுத வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்கின்றனர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:39 PM
பகிர்:

ஓருமுறை தோற்றுவிட்டால் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து எழுத வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்கின்றனர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

பொள்ளாச்சி நெகமம் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராணி காஞ்சனா (30). எம்.எஸ்சி. நுண் உயிரியியல் படித்துள்ள இவருக்கு 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் ஜெயக்குமார் விவசாயி.

2005-ம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஐஏஎஸ் என்ற லட்சியத்துக்கு இதெல்லாம் அவருக்கு தடையாக இல்லை. லட்சிய வேட்கையோடு இருந்த காஞ்சனாவுக்கு, அவருடைய கணவரும் ஊக்கம் அளித்தார். கணவரின் ஆதரவு கிடைத்ததும், ஆறு மாதக் குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு, பயிற்சிக்காக சென்னை வந்து ள்ளார்.

Advertisement

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்த அவர், 2006-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு முறை முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியுற்றார். சோர்ந்துவிடவில்லை 3-வது முறையாக 2008-ம் ஆண்டு முதல்நிலை, இரண்டாம் (மெயின்) நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். ஆனால் நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

விடாமுயற்சியிடன் 4-வது முறையாக தேர்வு எழுதிய காஞ்சனா, நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று 434-வது ரேங்க் பெற்றுள்ளார். இவருக்கு ஐ.ஆர்.எஸ். பணி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பயிற்சியில் சேர முடிவெடுத்துள்ள இவர், தொடர்ந்து ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும் வரை தேர்வு எழுத உள்ளதாக தெரிவித்தார்.

திருமணமாகி, குழந்தையும் பிறந்து விட்டால் மேல்படிப்பையோ அல்லது இதுபோன்ற பொதுத் தேர்வுகளையோ எழுதுவது கடினம் என்ற தவறான கருத்து பலரிடையே உள்ளது. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் தேர்ச்சி பெற்றதற்கு, எனது கணவரின் ஊக்கமும், பொறுமையும்தான் காரணம் என்கிறார் காஞ்சனா.

படிப்பது எப்படி? சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற கடின உழைப்பு அவசியம். நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும். நாள் முழுவதும் ஒரே பாடத்தைப் படிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஒரு பாடத்துக்கு 2 மணி நேரம் என நேரம் ஒதுக்கி, ஒரு நாளில் பல பாடங்களைப் படிக்க வேண்டும். வாரம் 6 நாள்களுக்கு இதுபோல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, 6 நாள்கள் படித்ததை திரும்ப நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

குழுப் பயிற்சி அவசியம்: இந்தப் பயிற்சிகள் அனைத்தையும், குறைந்தபட்சம் 3 பேர் குழுவாகச் சேர்ந்து படிக்க வேண்டும். மற்றவர்களை படிக்கச் சொல்லி கவனிப்பதன் மூலம், எதையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்றார் அவர்.

இதே கருத்தைத் தெரிவித்த சங்கர் கணேஷும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விருதுநகர் மாவட்டம் செவலூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், 5-வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 483-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

10-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த இவர், குடும்பச் சூழ்நிலைக் காரணமாக மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு (ஜவுளித் தொழில்நுட்பம்) படித்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என்ற ஆவல் காரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பி.ஏ. பொருளாதாரம் படித்து, பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

2005-ம் ஆண்டு முதல் சிவில் சர்விஸ் தேர்வு எழுதத் தொடங்கிய இவர், இரண்டு முறை நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வியடைந்துள்ளார். 5-வது முறையாக முயற்சி செய்து, சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கும் வரை தொடர்ந்து தேர்வு எழுத உள்ளதாக இவரும் தெரிவித்தார்.

எப்படி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இவர் கூறுகையில், ""குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், வேகமாக படிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கும்போது ஒரு மணி நேரத்துக்கு 4 பக்கங்களை மட்டுமே படிக்க முடிந்தது.

அதன் பிறகு, இணையதளத்தில் "லைப் ஸ்பீடு ரீட்' என்ற புத்தகத்திலிருந்து நுட்பங்களைத் தெரிந்து கொண்டதன் மூலம், ஒரு மணி நேரத்துக்கு 10 பக்கங்களைப் படிக்கும் திறன் பெற்றேன். இதனுடன் குறிப்புகள் எடுப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்'' என்றார்.

இதுபோல் 6-வது முறையாக தேர்வு எழுதி 637-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்ற சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சபரி ராஜ் குமாரும், சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற குழுப் பயிற்சி அவசியம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.