வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி ஆக முடியவில்லை! நாளை நான் ஐஏஎஸ்!
குடிமைப் பணித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களே, முயற்சி உங்களின் முக்கிய மூலதனம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
காகிதப் பட்டம் என்றாலும் பறப்பதற்கு
காற்றே அடிப்படை.
கடுகுதான் வித்து என்றாலும் முளைப்பதற்கு
நீரே அடிப்படை.
சிறிதுதான் இலக்கு என்றாலும் அடைவதற்கு
முயற்சியே அடிப்படை.
குடிமைப் பணித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களே, முயற்சி உங்களின் முக்கிய மூலதனம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
பர்மா என்று அறியப்பட்டு வந்த இந்நாடு 1987ஆம் ஆண்டு மியான்மர் என்று பெயர் மாற்றம் பெற்றது. அப்போதைய தலைநகரான ரங்கூன் பின்னர் யங்கோன் (YANGON) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
2006 ஆம் ஆண்டு முதல் மியான்மரின் தலைநகராக "நைப்பேதா' (NAYPAYIDAW) செயல்படுகின்றது. இங்கு வாழும் மக்கள் பல்வேறு சமயங்களைப் பின்பற்றினாலும் பெரும்பாலானோர் பெüத்த சமயத்தின் தேராவடா (THERAVADA) என்னும் பிரிவினைப் பின்பற்றுகின்றனர்.
புத்த விகாராக்கள் (VIKARAS) பெருமளவில் இங்கு காணப்படுகின்றன. எனவே, பகோடாக்களின் பூமி (LAND OF PAGODAS) என்றும் மியான்மர் அறியப்படுகின்றது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரபலமாக அறியப்பட்ட மாண்டலே சிறைச்சாலை இங்குதான் அமைந்துள்ளது. லோகமான்ய பாலகங்காதர திலகர், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்றோர் இச்சிறையில் விடுதலைப் போராட்ட காலத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது மூன்று பர்மியப் போர்களை நடத்தினர். முதல் ஆங்கிலோ - பர்மியப் போர் 1824-26 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதன் முடிவில் அரகன் (ARAKAN) மற்றும் தெனாசெரிம் (TENASSERIM) பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
இரண்டாவது ஆங்கிலோ - பர்மியப்போர் 1852-53ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. இதன் முடிவில் ரங்கூன் மற்றும் பெகு (BEGU) ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
1885-1886இல் மூன்றாவது பர்மியப் போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் பர்மாவை முழுமையாக இணைத்தனர்.
ஏறத்தாழ 50 ஆண்டுகள் பர்மா, பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய அரசுச் சட்டம் 1935 இன்படி ((GOVERNMENT OF INDIA ACT -1935)) பர்மா பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து 1937ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
04.10.1948 இல் பர்மா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. 02.03.1962 இல் பர்மாவில் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மூலம் 2011 ஆம் ஆண்டு முறையாக (FORMALLY) இராணுவ ஆட்சி அங்கு முடிவுக்கு வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக 30.11.1961 முதல் 31.12.1971 வரை இருந்த முதல் ஆசியரான யூ தாண்ட் (U THANT) பர்மாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
08.08.1967 இல் தொடங்கப்பட்ட ஆசியான் (ASEAN) என்ற அமைப்பில் 10 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றுள் ஒன்றாக மியான்மர் விளங்குகின்றது. 23.07.1987 இல் ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக மியான்மர் இணைந்தது. ஆசியான் அமைப்பின் தலைமையகம் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் உள்ளது.
இத்தகைய மியான்மர் நாட்டில் ஜனநாயகம் மலர்வதற்காக பல ஆண்டுகளாக அமைதி வழியில் போராடி வருபவர் ஆங் சாங் சூகி ஆவார்.
1990ஆம் இண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டும், ஜனநாயக மலர்ச்சிக்காக நெடிய காலம் அமைதி வழியில் போராட்டம் மேற்கொண்டும், தற்போதைய தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றி பெற்றும் விளங்குகின்ற ஆங் சாங் சூகி அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க இயலாத நிலையில் உள்ளார்.
ஏனென்றால், மே 2008இல் மேற்கொள்ளப்பட்ட மியான்மர் நாட்டின் அரசியலமைப்புத் திருத்தம் வெளி நாட்டவர்களை மணம் புரிந்தவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியாது என்று உரைக்கின்றது. ஆங் சாங் சூகியின் கணவர், டாக்டர் மைக்கேல் ஆரிஸ் என்கிற வெளிநாட்டவர்.
சூகி 1990ஆம் ஆண்டில் ராஃப்டோ விருது, 1990இல் ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகளுக்கான சாக்காரோவ் விருது பெற்றவர்.
1991இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கி கெüரவிக்கப்பட்டது.
இந்திய அரசு ஜவஹர்லால் நேரு அமைதி விருதினை 1992இல் இவருக்கு வழங்கியது. கனடா அரசு 2007ஆம் ஆண்டு சூகியை அந்நாட்டின் பெருமைமிகு குடிமகளாக அறிவித்தது. உலக அளவில் இக்கெüரவத்தினைப் பெற்றுள்ள 5 பேரில் இவரும் ஒருவராக விளங்குகின்றார்.
இவ்வாறாக, மியான்மரில் ஜனநாயகத்திற்கான நம்பிக்கை ஒளி தற்போது பரவுகிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு மகிழ்ச்சியானதே. மியான்மர் இந்தியாவின் நட்பு நாடு மற்றும் அண்டை நாடு என்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது.
இந்தியக்குடிமைப் பணிகளின் தேர்வு நோக்கில் இரு நாட்டு உறவுகள் (BILATERAL) மற்றும் சர்வதேச உறவுகள் (INTERNATIONAL RELATIONSHIP) என்பது முக்கியமானது.
குறிப்பாக சீனா, இந்தியாவின் எல்லை நாடுகளையும், அண்டை நாடுகளையும் ஈர்த்து ஆசியாக் கண்டத்தில் தனது மேலாதிக்கத்தினை ஏற்படுத்திட தொடர்ந்து முயன்று வருகின்றது.
இதற்காக சீனா இந்தியாவை மையப்படுத்தி முத்து மாலைத் திட்டம் (STRING OF PEARLS) என்பதனைச் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டம் தொடர்பாக முந்தைய ஆண்டுகளில் குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
முத்துமாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா, மியான்மரின் சிட்வி துறைமுகத்தினை (SITTWEPORT) ஆழ்கடல் துறைமுகமாக விரிவாக்கம் செய்து வருகின்றது.
அதனாலேயே இந்தியா சிட்வி துறைமுகத்தில் இருந்து தனது காலடான் பல்நோக்கு சரக்குப் போக்குவரத்துத் திட்டத்தினை (KALADAN MULTI MODEL TRANSIT TRANSPORT PROJECT) செயல்படுத்தி வருகின்றது. சீனாவின் முத்துமாலைத் திட்டம் என்பது என்ன? அதற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? அது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)