முகப்பு
இளைஞர்மணி

நம்பிக்கையோடு படியுங்கள்! நாளை நான் ஐஏஎஸ்!

ஒரு செயல் இருக்கின்றது. அச்செயலை செய்து முடிக்க எண்ணுகின்றோம். எவ்வகையில் அதனை முடிப்பது என ஆராய்தல் வேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

ஒரு செயல் இருக்கின்றது. அச்செயலை செய்து முடிக்க எண்ணுகின்றோம். எவ்வகையில் அதனை முடிப்பது என ஆராய்தல் வேண்டும். அவ்வாறு அச்செயலைச் செய்யும் போது வரக்கூடிய இடையூறுகள் எவை என்பதையும் தெளிதல் வேண்டும். அந்த இடையூறுகளையெல்லாம் வென்று அச்செயலை முடித்தோமானால் முடிந்தபோது நமக்குக் கிடைக்கும் பெரும் பயனையும் எண்ணிப் பார்த்து அச்செயலைச் செய்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பெருந்தகை, முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் என்கிறார்.

குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராவது ஒரு தவத்தினைப்போன்றது. இத்தேர்வு அகில இந்திய அளவில் குறைவான பணிகளுக்கு நடைபெறும் மூன்று கட்டங்களைக் கொண்ட கடுமையான போட்டித் தேர்வு ஆகும்.

இரண்டாம் நிலைத்தேர்வு (ஙஅஐசந) அல்லது மூன்றாம் நிலைத்தேர்வு (INTERVIEW OR PERSONOLITY TEST) வரை சென்று பின்னடைவு என்றால் கூட மீண்டும் முதல் நிலையில் (PRELIMINRARY) இருந்து தொடங்கிட வேண்டும்.

எனவே, அடையப் போவது பெரும்பயன். ஆனால் பயணத்திற்கான பாதை சவாலானது. தடைக்கற்கள் நிறைந்தது. விடாமுயற்சி உங்களிடம் இருந்தால் கட்டாயம் வெல்லலாம்.

நீங்கள் தமிழ்வழியில் படித்திருக்கலாம். எளிய பின்புலம் கொண்டவராக இருக்கலாம். அஞ்சல் வழியில் பட்டம் கூட பெற்றிருக்கலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு

நிச்சயமாக இவை தடைக்கற்கள் அல்ல என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

சி.பி.எஸ்.ஸி (CBSE - CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) எனப்படும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில், தொடக்கம் முதலே முழுக்க முழுக்க ஆங்கில வழியில் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பினை முடித்த பல மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் முதல்நிலைத் தேர்வில்கூட தேர்ச்சி பெற முடியாமல் போன சம்பவங்கள் நிறைய உண்டு.

கிராமப்புறங்களில், முழுவதும் தமிழ் வழியில், அரசுப்பள்ளிகளில் படித்து, அஞ்சல் வழியில் பட்டம் பெற்ற மாணவர்கள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சக போட்டித் தேர்வர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வெற்றிவாகை சூடிய பல சாதனை நிகழ்வுகளும் இத்தேர்வில் உண்டு.

அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் எளிய பின்புலம் கொண்டவர்கள்தான். ஆனால் மனஉறுதியும், விடாமுயற்சியும் உடையவர்கள். தனது பாதை எது-அதில் உள்ள தடைக்கற்கள் எவை- அவை எத்தன்மை கொண்டவை என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள். அதே வேளையில் தோல்வி வந்தபோதும் தன்னால் இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தளராதவர்கள்.

இந்த ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் பற்றி இங்கு கூறுதல் சரியாக இருக்கும். வெற்றியாளர்கள் தாம் தேர்ந்தெடுத்த இலக்கு சம்பந்தமாக எத்தகைய பண்புகள் கொண்டவர்களாக விளங்குதல் வேண்டும் என்பதை உங்களிடம் சேர்த்திட இது துணைபுரியும்.

க.இளம்பகவத் இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமைப்பணித்தேர்வில் வென்று இந்திய வருவாய்ப்பணியில், கலால் மற்றும் சுங்கவரித்துறை (IRS - CUSTOMS AND CENTRAL EXCISE) ஒதுக்கீடு பெற்றுள்ளார்.

இவர் தொடர்ந்து குடிமைப்பணித்தேர்வுகளை எழுதுகிறார். 2008 ஆம் ஆண்டு முதல்நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு என இரண்டு கட்டத்தேர்விலும் வென்று முதல்முறையாக நேர்முகத்தேர்வு செல்கிறார். வெற்றி வாய்ப்பினைப் பெற இயலவில்லை.

2010 ஆம் ஆண்டில் இரண்டாவது முறை அதே போல் நேர்முகத் தேர்வு செல்கிறார். வெற்றிப்பட்டியலில் அவரது பெயர் இல்லை.

முயற்சியைக் கைவிடாத இளம்பகவத் 2011 இல் மூன்றாவது முறையும் நேர்முகத்தேர்வு செல்கிறார். இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (OBC) இவருக்கு அது இறுதிவாய்ப்பு. காலம் அவருக்கு கை கொடுக்கவில்லை. அப்போதும் குறைவான மதிப்பெண் இடைவெளியில் வெற்றி அவரிடம் இருந்து நழுவிவிட்டது.

நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்தனர். தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் தனது இரு விழிகளாகக் கொண்ட அந்த இளைஞர் மட்டும் அதிர்ச்சியடையவில்லை. பொறுத்திருந்தார்.

குடிமைப்பணிகள் தேர்வாணையம், இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றது. புதிய பாடத்திட்டம் சற்று கடுமையாக உள்ளது என்ற கருத்து பரவலாக எழுகிறது. அதனால் ஞஇ, ஞஆஇ, நஇ, நப ஆகிய அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக இரண்டு வாய்ப்புகளைத் தேர்வாணையம் வழங்குகின்றது.

அதனால் இவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. மீண்டும் தேர்வினை எழுதுகிறார். மறுபடியும் நேர்முகத் தேர்வு செல்கிறார். ஆம், இந்தமுறை இளம்பகவத் வென்றே விட்டார்.

தற்போது இவருக்குக் கிடைத்த அந்த இரண்டாவது வாய்ப்பிலும் முதல்நிலைத் தேர்வில் வென்று முதன்மைத் தேர்வினை (MAINS-2015) எழுதியுள்ளார்.

கூடுதலாகக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலேயே ஓரிரண்டு பேர்தான். அதில் இவரும் ஒருவர். ஆகவே, குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களாகிய நீங்கள் அவருடைய பண்புகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

இளம்பகவத் புதிதாக தேர்வுகளை எழுத வரும் மாணவர்களுடன் ஒரு குழுவாக அமர்ந்து முழு ஈடுபாட்டுடன் பாடங்களை விவாதிக்கிறார். அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கிறார். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் என்கிறார்.

வினாக்களுக்கான விடைகளை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கிறார். அதனைத் திருத்தித் தரச் சொல்கிறார். விடையின் நிறை குறைகளைக் கேட்கிறார். விடையில் என்ன மாற்றங்களை நான் மேற்கொள்ள வேண்டும் என்று வினவுகிறார்.

இந்த முதன்மைத் தேர்வுக்கும் எனது வகுப்புகளில் முழுநேரமும் அமர்ந்தார். 3 மணிநேர வகுப்பு சில நேரங்களில் 5 மணி நேரம் வரை கூட நீடிக்கிறது. தான் ஏற்கெனவே குடிமைப் பணித்தேர்வில் வென்றவர் என்ற சிந்தனை சிறிதுமின்றி வகுப்பில் தொடர்ந்து அமர்ந்து கவனமாகக் கேட்கிறார். நுணுக்கமாகக் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறார். இப்போதும் அவரிடம் ஆர்வமும், தேடலும் காணப்படுகின்றது.

எனவே, மாணவர்களே... நீங்கள் கற்றுக் கொள்ள வெற்றியாளர்களிடம் நிறைய இருக்கின்றன.

முக்கியமான இடத்திற்கு வருகிறேன். நாம் வியக்கும் இந்த வெற்றியாளரான இளம்பகவத் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் படித்தவர். தமிழ்வழியில் படித்தவர். அஞ்சல்வழியில் பட்டம்பெற்றவர்.

அது மட்டுல்ல... இவர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4, குரூப்-2, குரூப்-1 பணிகள் உள்ளிட்ட தற்போதைய இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வாணையத்தின் ஐ.ஆர்.எஸ் வெற்றியும் சேர்த்து 7 பணிகளை வென்றிருக்கிறார்.

இவருடைய வெற்றி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ஆங்கில வழியில் கற்பதனால் மட்டும், உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதனால் மட்டும், நகர பின்புலம் அமைவதனால் மட்டும் ஐ.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளில் சாதனைகள் படைக்கப்படுவதில்லை. அதற்கு முறையான பயிற்சியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.

வெற்றிக்கான பயணத்தில் தோல்வி தடைக்கல்லாக வரும். அதனை நாம் படிக்கற்களாகக் கொள்ள வேண்டும். பயணத்தினை நிறுத்திவிடக் கூடாது. நம்பிக்கையோடு படியுங்கள். உங்களால் முடியும்.

சாதனை படைத்திட நீங்களும் தயாராகுங்கள்.

அடுத்து, பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து தற்போது பேசப்பட்டு வரும் ஜி.எஸ்.டி. (எநப) மசோதா பற்றி வரும் பகுதிகளில் காணலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.