நாளை நான் ஐஏஎஸ்!: வேகமும் வேண்டும்... நிதானமும் வேண்டும்!
கடந்த 18.12.2015 அன்று குடிமைப்பணிகளின் 2015 - ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்டது.
கடந்த 18.12.2015 அன்று குடிமைப்பணிகளின் 2015 - ஆம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று முடிந்துவிட்டது. அதில் கேட்கப்பட்ட கட்டுரை வினாக்களையும், அதற்கு விடையினைக் கட்டமைக்கும் முறை பற்றியும் மாணவர்களுக்கு உடனடியாக விளக்கும் பொருட்டு இக்கட்டுரை தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வினாக்களுக்கு பதிலளிக்கும் முறை பற்றியும், ஜி.எஸ்.டி. மசோதா பற்றியும் வரும் வாரங்களில் காண்போம். இப்போது முதன்மைத் தேர்வு குறித்து...
முதன்மைத்தேர்வில் கட்டுரை எழுதுவது கூடுதல் மதிப்பெண் பெறுவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றது. ஒரு கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண்கள் வீதம் இரண்டு கட்டுரைக்கு 250 மதிப்பெண்கள் தரப்படுகின்றன. நடந்து முடிந்த முதன்மைத் தேர்வில் கட்டுரைப் பகுதியில் (ESSAY) கேட்கப்பட்ட தலைப்புகளைச் சற்று பார்க்கலாம்.
Write two essay choosing one from each of the following sections A and B in about 1000-1200 words each.
(2x125 = 250)
SECTION - A
1. Lending hands to someone is better than given a dole.
2. Quick but study wins the race
3. Character of an institution is
reflected in its leader.
4. Education without values, as useful as it is, seems rather to make a man more clever devil.
SECTION - B
1. Technology cannot replace manpower.
2. Crisis faced in India - Moral or economic
3. Dreams which should not let India sleep
4. Can capitalism bring inclusive growth?
இவ்வாறு எட்டுத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒரு தலைப்பினைத் தேர்வு செய்து இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும்.
ஒவ்வொரு கட்டுரையும் 1000 முதல் 1200 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும்.
கட்டுரைப் பாடமும், விருப்பப்பாடமும் (OPTIONAL SUBJECT) நமது மதிப்பெண்களை உயர்த்தி நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்பவை. நாம் முன்னரே இதுபற்றி பேசியிருக்கிறோம்.
கட்டுரையில் தலைப்பினைத் தேர்வு செய்தல் ஒரு முக்கியமான பணியாகும்.
நடந்து முடிந்த இம்முதன்மைத்தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் ECTION -A யில் 4 வது தலைப்பும், SECTION -B யில் 4 வது தலைப்பும் தேர்வு செய்து எழுதியுள்ளனர்.
இவ்வாறு தேர்வு செய்யும்போது நாம் மூன்று விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது நாம் தேர்வு செய்கின்ற தலைப்பு சம்பந்தமான பின்னணி பற்றி ஓரளவேனும் தகவல்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, அவற்றிற்கு நாம் கொடுக்க இருக்கின்ற துணைத்தலைப்புகள் கட்டுரையை தொடர்ச்சியாகவும், உயிரோட்டத்துடனும் கொண்டு செல்லத்தக்கவாறு அமைதல் வேண்டும்.
மூன்றாவதாக, பலரும் தேர்வு செய்யத் தயங்குகின்ற அதே வேளையில் நடப்பு நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி சமூகத்திற்கு பயனுள்ள செய்திகளைத் தருவதற்கு வாய்ப்புள்ள தலைப்பாக இருந்தால் நலமாக இருக்கும்.
குடிமைப்பணிகள் தேர்வினைப் பொறுத்தவரையில் நாம் கட்டுரைக்கும், விருப்பப் பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை மீண்டும் கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது.
ஏனெனில், கட்டுரையில் தலைப்பு தொடர்பான நமக்குத் தெரிந்த செய்திகளை வைத்துத் தொகுத்து ஒரு வடிவம் கொடுத்து நிறைவாக எழுதிவிடலாம். அதற்குப் போதுமான நேரமும் இருக்கும்.
அதே போல, விருப்பப்பாடம் என்பது வரையறைக்குட்பட்டது. எவ்வாறெனில் பாடத்திட்டம், அதற்கான பாடநூல்கள் போன்றவை சில எல்லைகளுக்குட்பட்டவை. அவற்றைப் படித்துவிட்டால் தேர்வுக்குத் தயாராகி விட்ட மனநிறைவை நாம் பெற்றுவிடலாம்.
ஆனால் பொது அறிவுப் பாடங்கள் எல்லைகளற்றவை. எவ்வளவு படித்தாலும் படிக்க வேண்டிய பட்டியல்கள் புதிதாய் வந்து கொண்டே இருக்கும். அத்தனையும் படித்தாலும் படித்து முடித்த நிறைவை அவை எப்போதும் தருவதில்லை.
அதனால் கட்டுரையும், விருப்பப்பாடமும் குடிமைப்பணித் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையை மேலோங்கிட வைப்பதில் முதன்மையானவையாகத் திகழ்கின்றன.
SECTION - A இல் முதல்வினா "ஒருவனுக்கு உணவைப் பங்கிட்டுக் கொடுப்பதைவிட மேலானது அவனுக்கு நிலத்தை வாடகையாகக் கொடுப்பது' என்பதனை மையமாகக் கொண்டுள்ளது.
உணவைக் கொடுத்து சோம்பேறியாக்குவதைவிட நிலத்தைக் கொடுத்து உழைப்பாளியாக்க வேண்டும்.
மனிதனின் உடல், உழைப்பதற்கும், மூளை, சிந்திப்பதற்கும் தக்கவையாக இயற்கை படைத்தளித்துள்ளது. உழைப்பதற்கும், சிந்திப்பதற்கும் ஏற்ற திட்டங்களை உருவாக்கி மனிதனது செயலாற்றலை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை எழுதலாம்.
இரண்டாவது வினா, "விரைவு ஆனால் நிதானம் பந்தயத்தில் வெற்றியைப் பெறும்' என்பதனை மையமாகக் கொண்டுள்ளது.
வெற்றியைப் பெறுவதற்கு வேகமாகச் செல்லும்போது நிதானத்தினை இழந்துவிடக் கூடாது. நிதானத்தோடு செல்ல வேண்டுமென்பதற்காக வேகத்தை மறந்துவிடக்கூடாது. இரண்டையும் நாம் தகுந்த அளவில் கையாளும்போதுதான் வெற்றியைப் பெறமுடியும் என்பதனை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை அமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஒரு வகுப்பாசிரியர் இருக்கிறார். விரைவாகப் பாடத்தினை முடிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் பாடத்தினைப் புரிந்து கொண்டார்களா என்பதை உணராமல் செல்கின்ற வேகம் பயனற்றதாகிவிடும். ஏனெனில் ஆசிரியரின் பாடம் மாணவர்களுக்காகத்தான்.
மூன்றாவது வினா, "ஒரு நிறுவனத்தின் பண்புகள் அதன் தலைவரிடம் பிரதிபலிக்கின்றன' என்பதனை வெளிப்படுத்துகின்றது. இந்த வினா (ETHICAL LEADERSHIP) என்ற மையத்தினைக் கொண்டது.
நிறுவனம் என்பது அரசையும் குறிக்கும். தனியார் நிறுவனங்களையும் குறிக்கும். எனவே, ஒரு நிறுவனத்தின் பண்புகள் அதனை வழிநடத்துபவரின் தலைமைப் பண்பில் பிரதிபலிக்கும் என்ற கருத்துக்களை மையப்படுத்தி இக்கட்டுரையினை உருவாக்கலாம்.
நான்காவது வினா, "உயர் மதிப்பீடுகளைக் கொண்டிராத கல்வி என்பது ஒரு மனிதனை மனிதனாக உருவாக்காமல் புத்திசாலித்தனம் உள்ள சாத்தானாக உருவாக்குகிறது' என்பதனை உட்கருவாகக் கொண்டுள்ளது.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் என்பார் வான்புகழ் வள்ளுவர் பெருந்தகை. இது கல்லாமையால் விளையும் தீங்கினை உணர்த்துவதற்காக எழுதப்பட்ட குறள். எனினும், இக்குறள் இதற்கும் பொருந்துகிறது. ஏனெனில், இன்று கல்வி அறிவைப் போதிக்கிறது, ஆனால் அறத்தினை மறந்துவிட்டது.
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மாண்புகளையும், வாழ்வியல் உயர் பண்புகளையும், போதித்தல் வேண்டும். இன்று கல்வி வெற்றி பெறுவதற்கு கற்றுக் கொடுக்கின்றது. பொருளைச் சேர்ப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றது. ஆனால் அதற்கான வழி எத்தகையதாய் இருத்தல் வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திட தவறி வருகிறது.
அதனால் "எனது இனமாய் இருந்தால் என்ன? எனக்குத் தேவை உணவு' என்று விலங்கை விலங்கு அடித்து உண்ணும் தன்மையைப் போல மனிதப் பண்பு மாறி வருகின்றது.
எனவே, மனிதனைப் புத்திசாலியாக கல்வி உருவாக்குகிறது. ஆனால் அக்கல்வி மனிதனுக்கான மாண்புகளை, பண்புகளை, மதிப்புகளை, உயர்தகவுகளை தன்னகத்தே கொள்ளாமையால் மனிதனைப் புத்திசாலித்தனம் உள்ள சாத்தானாக உருவாக்கிவிடுகிறது. இந்த அடிப்படைக் கூறுகளை வைத்து இக்கட்டுரையினைக் கட்டமைக்கலாம்.
(தொடரும்)